அறிஞர் தொ.ப.சி.யின் அறிவுக்கண் "சோறு விற்றல்" - வரலாறு! (5)

அறிஞர் தொ..சி.யின் அறிவுக்கு உணவு - 'வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு' பற்றிய ஆராய்ச்சி மிக மிக அற்புதம். தனித்தன்மை!

நெல்லைச் சீமையில் இலக்கிய வட்டம் அக்காலத்தில், 'வட்டத் தொட்டி' என்ற பெயரில் டி.கே.சி. (டி.கே. சிதம்பரநாத முதலியார்), மீ.. சோமு (மீ.. சோமசுந்தரம்) முதலியவர்களும் மற்றும் ராஜாஜி போன்றவர்களும்கூட கலந்து  கொண்டு இலக்கிய சர்ச்சைகளை செய்ததாக பலர் கூறுவதுண்டு.

தமிழரசுக் கழகத் தலைவர் மா.பொ.சி. இலக்கியத்தை தானே கற்றவர் - அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக இருந்து இலக்கிய வல்லுநராக மாறினார்.

இடதுசாரிகளில் சிறந்த முற்போக்கு எழுத் தாளரான தி..சிவசங்கரன். அவர் பெயரை சுருக்கிதி..சி.' என்றே அழைப்பார்கள்.

இப்படி பல 'சி'கள் இருந்தாலும் - 'சி' என்றால் முதல் எழுத்து அவர்தம் பெயரின் முதல் எழுத்து. அரசியல் பரிபாஷையில் 'c' 'சி' என்பதற்கு கோடிகளின் முதல் எழுத்து என்பதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

இலக்கியச் செல்வம்தான் இவர்கள் பெற்ற செல்வம் - கோடியை காணாதவர்கள். அந்த வரிசையிலும் தொ..சி. ஓர் எளிய நடுத்தரக் குடும்பத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த வாடாத வண்ண மலர் ஆவார்.

அவர் சோறு விற்றல் பற்றி தனது அறிவுக் கண்ணை அகல விரித்து நமக்கெல்லாம் ஒளி பாய்ச்சுகிறார்!

அறிந்திராத அரிய செய்திகள் நமக்கு அரும் புதையலாகக் கிடைத்துள்ளது. படியுங்கள் - சுவையுங்கள்,

இதோ:

"சோறு, அவிழ்பதம் ஆகிய இரண்டு சொற் களும் பழைய இலக்கியங்களில் வழங்குகின்றன. இன்று நெல்லரிசி சோறு மட்டுமே சோறு என்ற பொருளில் வழங்கப்படுகிறது.  ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு, சோளம், குதிரை வாலி ஆகிய தானியங்களைச் சமைத்து உண்ணும்போது கம்பஞ்சோறு, சோளச்சோறு, குதிரை வாலிச்சோறு என்றே கூறுகின்றனர். அதுவும் அன்றிக் கற்றாழையின் சதைப்பற்றினையும், பனை, தென்னை ஆகிய மரங்களில் திரட்சியில்லாத சதைப்பற்றினையும் 'சோறு' என்றே வழங்குவர்.

'அரிசி' என்னும் சொல்லும் நெல் அரிசியை மட்டுமல்லாது, அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும், 'ஆரி' என்னும் வேர்ச் சொல்லுக்குச் 'சிறிய' என்பதே பொருள் (அரி மணல், அரி நெல்லிக்காய்). வெள்ளைப் பூண்டின் சிறிய கீற்றுக்களையும் வெள்ளைப் பூண்டு அரிசி என்று பெண்கள் கூறும் வழக்கமுண்டு.

இன்று எல்லா ஊர்களிலும் உணவு விற்கும் கடைகள் உள்ளன. சில ஊர்களில் குடிநீரும் விற்பனைப் பொருளாகி விட்டது. தமிழர் பண்பாட்டில் "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல" என்ற கருத்து இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்போது தெரிகிறது. 'வறியார்க்குச் சோறிடுதல் அறம்' என்கிற கோட்பாடு மட்டுமே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் ஊர் தடத்தில் (காலடி) வழிச் செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் படுத்திருந்தால் ஊர்க்காரர்கள் "இரவுச்சோறு' கொடுக்கும் வழக்கம் அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்திருக்கிறது. தங்கள் இடத்தில் இரவில் பசியோடு யாரும் உறங்கச் செல்வது தங்களுக்கு மானக்கேடு என்று கருதியுள்ளனர். சிறுகுடிக்கிழான் பண்ணன் வறியார்க்குச் சோறளித்த செய்தி சங்க இலக்கியத்தில் பேசப் படுகிறது. 'உயிர் மருந்து' எனச் சோற்றினை வருணிக்கும் மணிமேகலை வறியவர்களுக்கும், ஊனமுற்றோர்க்கும், கைவிடப்பட்டவருக்கும், நோயாளிக்கும் உணவளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் புகுந்த சமண சமயமும் நால்வகைக் கொடைகளில் சோறு, மருந்து, கல்வி, அடைக்கலம் என உணவுக் கொடையையே முதலாவதாகப் பேசுகிறது. 'அன்னதானம்' செய்யும் வழக்கம் சமணர்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு கோயில்களில் அடியார்க்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என வரும் அப்பர் தேவாரத்தால் அறியலாம்.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் நெடுவழிகளில் அமைந்த தாவளங்களையும் (சத்திரங்களையும்), மடங்களையும்  காண்கின்றோம். விசய நகர மன்னர் வருகைக்குப் பின்னர் கி.பி.11ஆம் நூற்றாண்டு அளவில் தான சத்திரங்களில் சோறு விற்கப்பட்ட குறிப்புக்களைக் காண முடிகிறது. பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் கோயில்களிலும், மடங்களிலும் 'சட்டிச் சோறு' வழங்கிய செய்தி குறிக்கப்படுகிறது. இவ்வழக்கம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடைமுறையில் இருந்துள்ளது. அக்காலம் வரை சோறும் நீரும் மட்டுமே இந்த விற்பனை விதி விலக்கைப் பெற்றிருக்கின்றன. சாலையோரக் கடைகளில் பிற உண்பண்டங்கள் விற்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரத்திலேயே பதிவாகி இருக்கிறது.

இதுவன்றி, 'பெருஞ்சோறு' என்னும் சொல்லும் இலக்கியங்களில் காணப்படுகிறது. இது அரசன் போருக்குச் செல்லுமுன் வீரர் அனைவரோடும் கூடி உண்டதைக் குறிக்கிறது. எனவே இது ஒரு போர்ச் சடங்கு நிகழ்ச்சியாகச் செய்யப்பட்டது எனத் தோன்றுகிறது. இந்த உணவு ஊனும் சோறும் கலந்தது என்பதனை "ஊன்துவை அடிசில்" என்று குறிக்கிறது பதிற்றுப் பத்து.

விசய நகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'ஹோட்டல்' எனப்படும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற் பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும்  காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட, பிராமணரும், பிராமணரை அடுத்த மேல் ஜாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பின்னரே பிற ஜாதியார் உணவகம் நடத்தும் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினர். நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் .வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்தபின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே."

Comments