'தினமணி'க்குப் பதிலடி! - 3

5) "திருமுறைகளும், பாசுரங்களும் இல்லாமல் தமிழ் உண்டா? அற இலக்கியங்கள் இல்லாமல் தமிழ்மொழி முழுமை அடையுமா? இந்து சமய நெறியில் இந்துக்களை வழி நடத்த சமயப் பயிற்சியா ளர்கள் உண்டா?" என்று கேள்வி மேல் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது 'தினமணி'.

இந்தக் கேள்விகள் யாரைப் பார்த்து? சங்கராச்சாரியாரைப் பார்த்தா? ஜீயரைப் பார்த்தா? இந்து சமய ஆன்மீகவாதிகளைப் பார்த்தா? முறையாக சமயப் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக ஆக்கக் கூடாது என்று - இந்து மதத்தைச் சேர்ந்தவர்களையே ஜாதி பார்த்துத் தடுத்தவர்கள் - தடுப்பவர்கள் யார்?

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த - முறையாக அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் 'தினமணி' வகையறாக்கள் தானே - சங்கச்சாரியார்களாலும், ஜீயர்களாலும் தூண்டப்பட்டவர்கள்தானே!

திருமுறைகள், பாசுரங்கள்பற்றியும் 'தினமணி' கட்டுரை பேசுகிறது. அந்தத் திருமுறைகளைக் கோயிலில் பாடக் கூடாது என்று தடுத்தவர்கள் யார்?

சிதம்பரம் நடராஜன் கோயிலில் திருவாசகத்தை ஓதிய ஓதுவார் ஆறுமுகசாமி என்ற முதியவரை அடித்துக் கையை உடைத்தவர்கள் சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள்தானே - அதனைக் கண்டித்து 'தினமணி' எழுதியதுண்டா?

'தெய்வத் தமிழ்' என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு அந்தத் தெய்வத் தமிழில் அர்ச்சனை செய்தால் குட முழுக்கு செய்தால் சந்நிதானம் தீட்டுப்பட்டு விடும் என்று அடம் பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் தானே!

(6) "இந்து சமயம் வளர, மத்திய, மாநில அரசுகள் ஆலய ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்து, சைவ, வைணவ ஆதீனங்கள், திருமடங்கள் தூய சந்நியாசிகள், ஆன்மிக அறிஞர்கள், மெய்யடியார் கள், கல்விமான்களிடம் திருக்கோயில்களை ஒப்படைப்பது காலத்தின் கட்டாயம்" என்று மங்களம் பாடி 'தினமணி' கட்டுரையை முடித்துள்ளது.

ஒரு கால கட்டத்தில் கோயில்கள் எல்லாம் 'தினமணி' சுட்டிக்காட்டுவோர் வசம்தான் இருந்தன. அவை அரசின் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வர வேண்டிய  அவசியம் ஏன்  ஏற்பட்டது என்பதைத் 'தினமணி'கள் சிந்திக்காதது ஏன்?

அரசினால் நியமிக்கப்பட்ட சர் சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைந்த குழு, கோயில்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றன, அர்ச்சகர்களின் அட்டகாசம் எத்தகையது என்பதை விலாவாரியாகப் பட்டியல் போட்டுக் காட்டவில்லையா?

கோயில் சாமி சிலை திருட்டுகள் பெரும்பாலும் அர்ச்சகப் பார்ப்பனர்களின் ஒத்துழைப்போடுதான் நடந்திருக்கின்றன என்பதற்கு சான்றுகள் காவல்துறையின் ஆவணங்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றனவே!

அரசன் கிருட்டிணதேவராயன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கொடுத்த விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனது பற்றி பத்தி பத்தியாக செய்திகள் வெளிவரவில்லையா? நீதிமன்றமும் கேட்கவில்லையா?

ஏழுமலையான் டாலர் பெயரால் மோசடி செய்து பணம் சுருட்டிய ஆசாமிக்கு டாலர் சேஷாத்திரி என்ற நாமகரணம் உண்டே!

மீனாட்சியின் மூக்கில் மின்னும் வைர மூக்குத்தி மறுநாள் அர்ச்சகர்ப் பார்ப்பானின் பாரியாள் மூக்கில் மின்னிய சுவையான சமாச்சாரங்கள் எல்லாம் உண்டே!

அதுவும் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் கொள்ளைக்கு அளவே கிடையாது. அஇஅதிமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சராகவிருந்த வி.வி. சுவாமிநாதன் சட்டப் பேரவையிலேயே ஆதாரப்பூர்வமாகப் பட்டியல் போட்டுக் காட்டினாரே! (25.3.1982).

"அம்மன் தாலிமாயம், தங்க நகைகளை உருக்கியதில் 16 பவுன் திருட்டு! நடராசருடைய குஞ்சிதபாதத்திலிருந்த வைரக் கற்கள் நான்கும் மாயம்! உண்டியலில் போட வேண்டிய சிறு சிறு நகைகளை உண்டியலில் போடக் கூடாது. படிக்கட்டிலே வைக்கவும் என்று சொல்லி சுருட்டிய சூழ்ச்சிகள், நடராசருக்கு இடதுபுறத்தில் உள்ள "ஹஸ்தராஜா" இருப்பிலே உள்ள ஒன்றரை பவுன் கிண்கிணி - தங்க அரை ஞாணும் காணவில்லை. இரண்டு கட்டி மூசைத்தங்கமும், 26 தங்க நாணயங்களும் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்."

சென்னை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த செயலாளர்கள் நாக. வெங்கடேச தீட்சதர், நடராஜ தீட்சதர், சங்கசபேச தீட்சதர் ஆகிய தீட்சதப் பார்ப்பனர்கள் கையொப்பமிட்டு தில்லை நடராஜன் கோயில் தீட்சதர்கள்  செய்யும் ஊழல்களை, திருட்டுகளைப் பட்டி யல் போட்டு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அளிக்கவில்லையா?

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் வசம் இருந்தபோது கோயில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37,000 என்றும், மீதி ரூ.199 என்றும் தீட்சதர்கள் நீதிமன்றத்தில் கூறினர் - அதே கோயில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வசம் கொண்டு வரப்பட்ட போது 15 மாத வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய்!

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கோயில் தீட்சதர்கள் எந்த அளவுக்குப் பெருங் கொள்ளை அடித்து வருகின்றனர் என்பது சொல்லாமலே விளங்கும்.

இப்படிப் பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான் கோயில்கள் அரசு கையிலிருந்து விடுபட்டு இவர்கள் கையில் வர வேண்டும் என்ற கூக்குரலாகும்.

'தினமணி'யின் கட்டுரைக்குப் பதிலடியாக 'விடுதலை' தலையங் கத்தில் கூறப்பட்டவைகளுக்கு ஒரே ஒரு  விழுக்காடு அளவுக்காவது தினமணியிடமிருந்தோ, அதைப் போன்ற ஊடகங்களிடமிருந்தோ பதில் வருமா? எங்கே பார்ப்போம்!

(முற்றும்)

Comments