'தினமணி'க்குப் பதிலடி! - 2

சங்பரிவார்கள் வரிந்து கட்டிக் கொண்டு உப்பு சப்பு இல்லாமல் வைக்கும் விவாதத்தைத்தான் பாரம்பரியமான 'தினமணி'யின் நடுப்பக்க சிறப்புக் கட்டுரையும் (22.1.2021) பேசுகிறது.

3) "இந்து சமயத்தில் உள்ளதுபோல் நாத்திகர்கள், கடவுளை இழிவு செய்வோர் வேறு மதங்களில் இருக் கிறார்களா? இல்லை. ஏன் என்றால் தங்கள் பிள்ளைகளை மழலைப் பருவந்தொட்டு அந்திம காலம் வரை அவரவர் சமய தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாக சமய நெறியில் நிற்குமாறு பெற்றோர் வளர்ப்பதே காரணம்" என்று 'தினமணி' ஆதங்கப்படுகிறது.

பிற சமயத்தில் நாத்திகவாதம் இல்லையா? 'நான் ஏன் கிறித்துவனல்லன்?' (Why I am not a Christian?) என்று கிறித்துவ மதத்திற்கு எதிர்ப்பாக பெர்ட்ரண்ட் ரசல் எழுதிடவில்லையா? அதனை தமிழில் மொழிபெயர்த்து திராவிடர் கழகம் வெளியிட்டது தெரியுமா?

இங்கர்சாலின் எழுத்தும், பேச்சும் கிறிஸ்துவ மதத்திற்கு எதிரான சங்கநாதம் இல்லையா? ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்பற்றி எல்லாம் 'தினமணி' கட்டுரையாளர் கேள்விப்படாத அளவுக்குப் பொது அறிவு ஞானமில்லாத இருட்டில் தவிக்கிறாரா? ஆச்சரியமாக இருக்கிறதே! அந்நூலையும் திராவிடர் கழகம் மொழிபெயர்த்து தமிழில்  வெளியிட்டது உண்டே!

குழந்தைப் பருவத்தில் மத போதனை செய்ய வேண்டாமா என்று கவலையோடு கருத்துத் தெரிவிக் கிறார் கட்டுரையாளர்.

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி எல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் என்னாவது?

லிங்கத்தின் கதையைச் சிறு வயது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பெற்றோர்களுக்குத்தான் மனம் வருமா?

பிள்ளையார் பார்வதி தேவியின் அழுக்கிலிருந்து பிறந்தார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால், பிள்ளைகளுக்குச் சுகாதாரத்தில் அக்கறை வருமா? இதுபோல ஏராள கேள்விகள் உண்டே!

கடவுள் ஜாதியைக் கற்பித்தான் என்றும், பிறப்பிலேயே உயர்வு  - தாழ்வு என்னும் பேதத்தை மனிதர்களுக்குள் உண்டாக்கினான் என்றும் இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் உண்டா?

அப்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களுள் நாலாஞ் ஜாதிக்காரன் - அவன் சூத்திரன் - வேசி மகன் என்று இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் உண்டா?

இந்து மதத்துக்காக வக்காலத்து வாங்கும் 'தினமணி', 'தினமலர்', 'துக்ளக்', 'விஜயபாரதம்' மற்றும் இது தொடர்புடைய ஏடுகளையும், அந்த ஏடுகளில் எழுதும் எழுத்தாளர்களையும் கேட்கிறோம்.

எது இந்து மதம்? இந்து மதத்துக்குள் சைவம் - வைணவம் ஏன்? வைணவத்துக்குள் வடகலை - தென் கலை ஏன்?

சில நாள்களுக்குமுன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் முதலில் பிரபந்தம் பாடுவது வடகலையா? தென்கலையா என்ற சர்ச்சை கிளம்பி பட்டர்களுக்குள் அடி-தடி நடந்து ஊர் உலகம் சிரித்ததே!

சிறீரங்கத்து யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு இலண்டன் பிரிவுக் கவுன்சில் வரை சென்று உலக நாடுகள் கைத்தாளம் போட்டுச் சிரிக்கவில்லையா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாத்திகர்களைப் பார்த்து கை நீட்டிப் பேச முடியும் - ஆத்திக சிரோன்மணிகளும் - 'தினமணி'களும்?

4) "இன்னமும் நாட்டில் நிலவும் தீண்டாமை என்ற கொடிய நோய்க்கும், ஜாதிப் பூசலுக்கும் தீர்வு காண திட்டம் வகுத்தது உண்டா? மதம் மாறியவர்களை தாய் மதம் திரும்பிவரச் செய்ய வேண்டிய செயல் முறைபற்றி சிந்தித்ததாவது உண்டா?" - 'தினமணி'யின் கட்டுரையிலேயே இவை நியாயமான கேள்விகள் தான்!

ஆனால் யாரைப் பார்த்து இந்தக் கேள்விகள் தொடுக்கப்படுகின்றன என்பதுதான் மிக மிக முக்கியம்.

'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொன்னவர் 'தினமணி' வகையறாக்கள் லோகக் குரு என்று போற்றும் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

'நால்வகை வருணங்களையும் நானே படைத்தேன்' என்று கீதையிலே பகவான் கிருஷ்ணன் சொன்னதாக 'தினமணி'யும்கூட ஒப்புக் கொள்ளும்தான்!

இந்த நிலையில் தீண்டாமையையும், ஜாதியையும் ஒழிக்க சங்கராச்சாரியாரையும், கீதையையும் எதிர்க்க 'தினமணி'கள் தயார்தானா?

மதம் மாறியவர்களை தாய் மதம் திரும்பி வரச் செய்ய வேண்டிய செயல்முறை பற்றி சிந்திக்க வேண்டாமா என்ற கேள்வியும் 'தினமணி' கட்டுரையில் இடம் பெறுகிறது.

இந்து மதத்தின் தீண்டாமை, ஜாதி இழிவை வெறுத்துதானே அயல் மதம் சென்றார்கள் - இந்த இரண்டையும் ஒழிக்காமல் தாய் மதத்துக்குக் கொண்டு வருவது எப்படி? அவர்கள் தாய் மதத்துக்கு கொண்டு வரப்பட்டால் எந்த ஜாதிப் பட்டியலில் வைப்பார்கள்?

கண்மூடித்தனம் இருக்கும் அளவுக்குப் புத்தி தீட்சண்யம் இல்லாமல் 'தினமணி' எழுதலாமா?

சிந்திக்குமா தினமணி? 

Comments