புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிப்போருக்கு மருத்துவக் கல்வியில் 10% இட ஒதுக்கீடும் - மத்திய அரசின் நிலைப்பாடும்!

திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கண்டன  அறிக்கை

 புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிப்போருக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தால்நீட்' தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் என்று  மத்திய அரசின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு 10 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இது தொடர்பாக தனியாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்பில் நேர் நின்ற வழக்குரைஞர் இது - ‘நீட்' தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் என்றும், தகுதி - திறமைக்கு எதிரானது என்றும் கூறியிருப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டில் ஏழரை விழுக்காடு இந்த வகையில் ஒதுக்கப்பட்டு இருப்பது மத்திய அரசின் கவனத்துக்கு வரவில்லை என்றும் மத்திய அரசின் வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

நீட்' தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் இந்த உள் ஒதுக்கீடு என்பதுகூடவா மத்திய அரசுக்குத் தெரியாது.

சமூகநீதியின் ஆணிவேரை வெட்டும் வேலையில் மத்தியில் உள்ள பா... தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொடர் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று  கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் அதனைக் கவனத்தில் கொள்ளும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.

மத்திய அரசின் வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் கூறியதை வைத்துப் பார்க்கும்பொழுது, தமிழ்நாட்டின் ஒதுக்கீட்டிலும் கத்தியைத் தீட்டும் நோக்கம் இருப்பது புரிகிறது.

தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.

இதில் கை வைத்தால் தமிழ்நாடு குமுறும் எரிமலையாக வெடித்து எழும், எச்சரிக்கை!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

22.1.2021

Comments