எம் மூதாதைகள்
மொழி அறிந்தனர்
இலக்கணம் வகுத்ததால்
இலக்கியம் சுவைத்தனர்
நிலங்கள் செப்பனிட்டனர்
நீர் மேலாண்மை படைத்தனர்
குடிகள் அமைத்தனர்
ஆட்சிகள் மலர்ந்தன
கடலோடி
வாணிகம் தழைத்தன
தையலரிலும் புலவர் நிறைந்திருந்தனர்
வானியல், மருத்துவம்
அறிவியல் அறிந்தனர்
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என வாழ்ந்த எம்குடி,
ஆரிய நஞ்சேறி
வர்ண வழி நின்றது,
ஜாதியால்
சூத்திரராக்கப்பட்டனர்
ஆரிய சூழ்ச்சியால்
அடிமைப்பட்டுக் கிடந்தவனை
“அதோ, திரும்பிப்பார்,
நீ கல்லணை கட்டியவன்!
ஆரியன் காலில் கிடக்கலாமா?
நீ குறள் படைத்தவன்!
வேதிய குரலில் வீழலாமா?
பேதமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தவன் நீ!
பார்ப்பன சூழ்ச்சிக்குப்
பலியாகலாமா?”
என, தட்டி எழுப்பினார்;
ஆரியத்தை -அறிவுத்
தடிகொண்டு தாக்கினார்
எம் பெரியார்!
ஆரிய நஞ்சழிக்க
பெரியார் எனும்
அருமருந்து தின்ற
எம் தலைமுறை
ஆசிரியராக
ஆட்சியாளராக
மருத்துவராக
பொறியாளராக மலர்ந்து
மணம் பரப்புகின்றனர்!
பொறுக்குமா ஆரியம்?
தகுதித் தேர்வென்னும்
நச்சுப் பல்லை ‘நீட்’ என்று
நீட்டி வருகிறது.
பெரியார் மருந்தாளுநர்
ஆசிரியர் துணை கொண்டு
வீழ்த்துவோம் ஆரியத்தை!
- த.சீ.இளந்திரையன்