அறிவுலகின் பேராசானே!
அறியாமை இருளகற்றும் பேரொளியே!
ஆதவனின்
வெடித்து சிதறிய
துகளாம் இவ்வுலகம்
அறிவியல் முடிவிது
பகுத்தறிவே, பல்கலைக்கழகமே,
சூரியக் குடும்பத்தின் வெண்சுடரே!
அந்த
ஆதவனே
சிதறிய உன்றன் அறிவின்
சிறு துகளல்லவோ!
நீ
ஒருவனே
அறிவொளி தரும்
பகலவன் அன்றோ!
அய்யா,
மாந்த குலமே
உயிர்களில் எல்லாம்
தாழ்ந்ததுவோ?
பெண்ணெனும் பேராற்றல்
வளர்ச்சி குன்றிய கூனாய்
உலகமெனும் இருண்ட கருவறையில்
ஆணாதிக்க முற்றுகையால்
ஊனமுற்றுத் தவித்தபோது...
அன்னையுள்ளம் கொண்ட
ஆணாய் பெண்களுக்கும்
ஆண்கள் கொண்ட உரிமைகள்
யாவும் வேண்டுமென்று
முழங்கியே பெற்றுத் தந்தாய்
அவர்க்கு மேலைநாட்டு
நாகரிகம் கற்றுத்தந்தாய்
அதனால் உன்னை
பெண்ணுலகம் போற்றுதய்யா -
அறிவுலகப் பேராசான் என்று!
அறியாமை இருளகற்றிய
பேரொளி உன்னை பெரியார் என்று!
ஜாதியெனும் சாட்டையொன்று
ஓங்கியவன் கைபுகுந்து
சளைத்தவன் மெய் படர்ந்து
சூத்திரனாக்கி இகழக்கண்டு
கொதித்தெழுந்து
புண்பட்ட இடந்தனிலே
சுயமரியாதை மருந்திட்டு
கொடும் மிருகமாம் ஜாதி - அதை
கொன்றொழிக்க
வேட்டைக்குப் புறப்பட்டாய்
மின்னலிழை தாடியோடு
கைத்தடியைச் சுழற்றிக்கொண்டு!
எங்கள் கண்களில்
பார்ப்பனியம் பூ பூக்க
வண்மையான சொல்லாலே
அறுவை செய்து
அகற்றினீரே
கல்லாமை இருள்தனையே!
நம்
பள்ளிப் பாதையிலே
நயவஞ்சக நரி ஒன்று
வழிமறித்து நின்ற போது
படை திரட்டி விரட்டினீரே!
அது
ஓடிய ஓட்டத்திலே
அதன்
விலா எலும்பு மூச்சு வாங்கி
மூர்ச்சையாச்சே!
படிக்கும் உரிமை வாய்த்ததாலே
பட்டங்களும் பதவிகளும்
பற்பல அடைந்தோமே -
பன்நெடுங்காலம் சூழ்ந்திருந்த
இருளை அகற்றிய
அறிவுலகப் பேராசான்
அய்யா பெரியாரே - உன் ஒப்பில்லா
உழைப்பினாலே!
- சே.குணவேந்தன், பெங்களூரு