“வடகிழக்கு மாகாணங்களில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் - அய்தாராபாத்தில் பெரு வெற்றியை ஈட்டிவிட்டோம் - எங்களை அசைக்கவே முடியாது.
இதுவரை
கணக்கைத் தொடங்காத மாநிலங்களிலும் பெரு வெற்றியைப் பெறுவோம்
- அதில் மேற்கு வங்கமும், தமிழ்நாடும்
அடங்கும்“ என்றெல்லாம் பா.ஜ.க.
'வீரர்கள்' பேசுகிறார்கள்.
தனக்கே
உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது ஆரியப் பா.ஜ.க. பீகாரில் வெற்றி
பெற்றதை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
யார்யாரையெல்லாம்,
எந்தெந்த கட்சிகளையெல்லாம் தூண்டி வாக்குகளைப் பிரித்தார்கள்
என்பதை கண் உள்ளவர்களும், கருத்து
உள்ளவர்களும் அறிவார்கள்.
இப்பொழுது
டில்லியில் நடைபெற்றுவரும் ஒரு மாதத்தைக் கடந்த
விவசாயிகளின் போராட்டம் பெரும் தாக்கத்தை இந்தியத்
துணைக்கண்டம் முழுவதும் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
உலகமே
- கண்டிராத போராட்டம் அது. சீக்கியர்களின் இயல்புக்கு
மாறாக அறப்போராட்டமாக மாறி, உலக மக்களை
ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.
மிகப்பெரிய
பதவிகளில் இருந்த - பழுத்த அனுபவம் பெற்ற
78 அய்.ஏ.எஸ். அதிகாரிகளின்
கூட்டறிக்கைக்கு எந்த வகையில் உள்நோக்கம்
கற்பிக்க முடியும்?
மற்றவர்களால்
தூண்டப்படும் போராட்டம், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டார்கள் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்
கொள்ளும் வகையில் கருத்துக்களை கூறுவதெல்லாம் மத்திய அரசின் தகுதிக்கு
ஏற்றதல்ல. எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும், மிக வேகமாக நாடாளுமன்றத்தில்
செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று
வேளாண் சட்டங்களும் அரசமைப்புச் சட்டத்தினை மீறியவை என்று அனுபவத்துடன் கூறியுள்ளனர்.
கரோனாவால்
நாட்டின் பொருளாதாரம் மிகக்கடுமையாக நோய்வாய்ப்பட்ட
நிலையில், மக்களின் உயிர் நாடி பிரச்சினையான
வேளாண்மையிலும் கை வைப்பது எந்த
தைரியத்தில்?
ரூபாய்
மதிப்பிழப்புச் சட்டத்தால் சிறு, குறு தொழில்கள்
நசிந்து நாசமாக்கப்பட்டுப் போயின. இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள்
வேலை வாய்ப்புகளை இழந்து பரிதவித்தனர். அந்தக்
குரூர தாக்குதலில் இருந்து மக்கள் வெளியில் வர
முடியாத நிலை.
கார்ப்பரேட்டுகள்
கைகளில் விவசாயம் அடைக்கலமானால் அதன் விளைவு எப்படி
இருக்கும்? கொள் முதல் செய்யப்பட்ட
நெல்லைப் பதுக்கி வைத்து செயற்கை முடையை
ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
“தலைச்சன்
பிள்ளையைப் பெற்ற ஒரு பெண்மணி
எட்டுப்பிள்ளைப் பெற்றவருக்கு அறிவுரை சொல்வதா?" என்ற அனுபவ மொழி
நாட்டில் உண்டு.
அது போல எந்த ஒரு
தானியத்தை எந்தப் பருவத்தில் பயிர்
செய்வது என்பதைப் பரம்பரைப் பரம்பரையாக விவசாயத்திலேயே பிறந்து, தழைத்து வளர்ந்தவர்களுக்கு வழி காட்டப்போகிறார்களா?
விவசாயிகளுக்கும்,
கார்ப்பரேட்காரர்களுக்கும்
இடையிலான ஒப்பந்தத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை எதிர்த்து நீதிமன்றம்
செல்ல முடியாத சட்டம்.
நடப்பது
ஜனநாயகமா? இட்லர் நாயகமா? பிரதமர்
நிதி (PM care) யின்
வரவு - செலவுகளை யாரும் கேட்கக் கூடாது
என்று இன்னொரு சட்டம். நாடு எங்கே போய்க்
கொண்டு இருக்கிறது?
ஆண்டுக்கு
2 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிப்பு கொடுத்தவர்
நமது பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த
நவம்பர் மாதத்தில் மட்டும் வேலை வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின்
எண்ணிக்கை 35 லட்சம். 35 லட்சம் பேர் வேலை
வாய்ப்பை இழந்தனர் என்றால் 35 லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு
வந்து விட்டன என்று பொருள்.
இவையெல்லாம்
எக்கேடு கெட்டால் என்ன? ஆயிரக்ணக்கான கோடி
ரூபாய் செலவில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர்,
பிரதமருக்கு நவீன விமானங்கள், புதிய
நாடாளுமன்ற கட்டடம்! இத்தியாதி இத்தியாதி மிதப்பில் இந்திய அரசு சென்று
கொண்டு இருக்கிறது.
பொருளாதார
வளர்ச்சி மைனசில் பந்தயக்குதிரை வேகத்தில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டு இருக்கிறது.
“சாலையோரத்தில்
வேலையற்றதுகள், அவர்களின் முகத்தில் விபரீதக்குறி!” என்று அண்ணா அவர்கள் எழுதியது தான் நினைவிற்கு வருகிறது.
ஒரு கரோனா போய் இன்னொரு
புது வகைக் கரோனா என்ற
அபாய செய்திகள் இன்னொரு பக்கம். பலிகடா ஆவது திருவாளர்
பொதுமக்கள் தான்.
நவீன விமானத்தில் பிரதமர் பறந்து கொண்டிருக்கட்டும்.
தமிழ்நாட்டு
மக்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதில்
மிகவும் கெட்டிக்காரர்கள்.
தமிழ்நாட்டு
மக்கள் கொடுக்கும் தீர்ப்பின் பலன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
- துணைக் கண்டத்திற்கே ஜீவ நதியாகப் பாயப்போகிறது.
இன்றே
எழுதி வைத்துக் கொள்ளலாம்.