தீண்டாமை ஒழிக்க வந்த தீப்பந்தம் பெரியார்!

கருப்புச் சட்ட! உயிரு சட்ட!

அய்யயோ மச்சான்! என்ன,

அடிபட்டு வந்துருக்க!

அழுதபுள்ள பசியாற

பால்தானே வாங்கப்போன!

 

அது ஒன்னும் இல்ல புள்ள

ஆண்டமொவன் செஞ்சவேல!

அலட்டிக்காம பாலப்புடி!

ஆசைப்புள்ள பசித்தாங்கா!

 

அட! நடந்தது என்ன சாமி,

நல்லாத்தானே கிளம்பிப்போன?

உம்மைய ஒழுங்காச் சொல்லும்!

உடம்பெல்லாம் ரத்தம் பாரும்!

 

பாலுவாங்க மேலத்தெரு

பண்ண கடைக்குப் போயிருந்தேன்!

நம்ம நேரம் கெட்ட நேரம்

பாவி பாப்பான் முன்ன போனான்!

 

அய்யய்யோ பாப்பானா!

அடிவயித்த கலக்குதய்யா!

அங்க ஏன்தான் நீயும் போன? - அய்யன்

சிண்டு முடிஞ்சு விடுவானேயா!

 

அதுதாண்டி நடந்த உம்மை!

அவன் வந்த வெனதான் இது!

பாலுவாங்க வந்த என்ன - பாவி

தீட்டுன்னு ஒதுங்கச் சொன்னான்!!

 

சொல்லி என்ன ஓடச்சொன்னான்

ஒருத்தரையும் தொடாத இன்னான்!

பாலு வாங்க விடல புள்ள!

பாவிப்பய பாத்துச் சிரிச்சான்!

 

தீட்டாம்ல, பெரிய தீட்டு!

திருட்டுப்பய சொல்லும் தீட்டு!

அவன் வீட்டு செத்த மாட்ட - நீ

பொதைக்கியில தீட்டு செத்துடுச்சோ!

 

துணி தொவைக்க பறையடிக்க

முடிநறுக்க செருப்பு தைக்க

நெனச்சநேரம் நாம வேணும்!

மத்தநேரம் நாம தீட்டோ?

 

அய்யன் பேச்ச - பண்ண கேட்டு

கோடு ஒன்ன கிழிச்சுப்புட்டான்!

கோட்டத் தாண்டி நானும் போனேன்! - பாவி

கொடுமையாத்தான் அடிச்சுப்புட்டான்!

 

மீசைக்காரன் முட்டாப்பய

அவன்கிட்ட மொறச்சியா நீ?

அறிவுறுக்கா மச்சான் ஒனக்கு?

அடிம நாம மறந்துட்டியா!

 

அட! ஆண்டைகிட்ட எவன் மொரப்பான்!

அந்த தைரியம் நமக்கு ஏது புள்ள?

அழுத புள்ள வயித்துக்காக - அவன்

கிழிச்சக்கோட்ட  கடக்கப்பாத்தேன்!

 

நடந்தது இந்தக் கூத்தா!

நாசமாப் போச்சு! போச்சு!

நாதாரி பயலுவோலாம் - உன்ன

நாயால்ல கொதறுவாங்க!

 

மரத்துல என கட்டிவச்சு

மீசைக்காரன் சாட்ட வச்சான்!

பூணூலு போட்ட அய்யன்

போதாதுன்னு அடிக்க சொன்னான்!

 

அய்யோ! கத்துணியா கதருணியா! நீ

கால்புடிச்சு கெஞ்சினியா மாமா?

கட்டயில போறமொவன்

கட்டிவச்சு அடிச்சுட்டானா!

 

ஆமாண்டி பொண்ஜாதி!

அடிச்சு தொவச்சு மிதிச்சுப்புட்டான்!

அந்த நேரம் நடந்ததுதான்

ஆச்சர்யம் புள்ள! ஆச்சர்யம் புள்ள!

 

அது என ஆச்சர்யம்!

மண்ணிச்சேன்னு உட்டுட்டானோ?

மறைக்காம நீயும் சொல்லு! இல்ல

மானம் வந்து வெடச்சீரோ!

 

அட! தூரத்துல ஒருத்தன் வந்தான்!

திமிறி வந்து எதுத்துக் கேட்டான்!

என் மேல விழுந்த அடிய

அவன் வாங்கி என்ன காத்தான்!

 

யாரு மச்சான் அந்த ஆளு -

ஆண்ட மொவன மொறச்ச ஆளு!

அஞ்சுஜாதி ஊருக்குள்ள

அதிரடியா வந்த தேளு!

கருப்பு சட்ட போட்டுவந்தான்

கடிஞ்சுவந்து சண்டை செஞ்சான்!

பண்ண சாட்டைய புடிங்கி எடுத்து! அவனை

படுக்கப்போட்டு வச்சி தொவச்சான்!

 

அதோட உடல புள்ள!

ஆச்சர்யம் இன்னும் கேளு!

பண்ண கடை பானையத்  தூக்கி

படாருனு ஒடச்சுப் பூட்டான்!!

 

பயப்படாம காளப்போல

ஜாதிக்கோட்ட அழிச்சுப்புட்டான்!

சண்டை செஞ்சி அல்லாரையும்

சிங்கம்போல அதிரவச்சான்!

 

சிண்டுமுடி பாப்பான் பாத்து

தொந்தியோட ஓடிப்போனான்!

சிந்தாம செதராம எனக்கு

தாங்கடப்பால தாங்கிக்கொடுத்தான்!

 

அடடா, மாமா! உம்மையாவா!

ஊருக்குள்ள கருப்புச் சட்ட

ஈரோட்டுப் பெரியார் கட்சிச் சட்ட!

இங்கயும் மவுசா வந்துட்டாரோ!

 

ஆமாண்டி ராசாத்தி!

இனி நமக்கு கவல இல்ல!

இரும்புச் சட்ட! கருப்புச் சட்ட! - அது

புகுந்த ஊரில் ஜாதி இல்ல!

 

கேட்கும்போதே இனிக்குதேய்யா! - இனி

செருப்பு கூட அணிய ஆச!

உன் இடது கையில் என்ன இருக்கு?

இனிப்புதானே அதையும் காட்டு!

 

இனிப்பு தாண்டி ஏந் தங்கம்!

கருப்புச் சட்ட வாங்கி வந்தேன்!

உனக்கும்கூட இருக்குதடி! - திமுரா

எடுத்து நீயும் உடுத்துக்கடி!

 

தீண்டாம ஒழிக்க வந்த

தீப்பந்தம் பெரியார் சட்ட!

ஒடுக்கப்பட்ட நமக்கெல்லாம்

உரிமை கொடுக்கும் உயிரு சட்ட!

- அஜிதன் சந்திரஜோதி

Comments