வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தோழர் திருமாவளவன் அவர்களின் உழைப்பு -பங்களிப்பு என்பது மிகமிக முக்கியமாக இருக்கும்!

தமிழ்நாட்டை அடுத்து அவர் இந்தியா முழுவதும் சமூகநீதிப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை

சென்னை, டிச.25  வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தோழர் திருமாவளவன் அவர்களின் உழைப்பு - பங்களிப்பு என்பது மிகமிக முக்கியமாக இருக்கும்; தமிழ்நாட்டை அடுத்து அவர் இந்தியா முழுவதும் சமூகநீதிப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (24.12.2020) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, விருது வழங்கும் விழாவில், திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையேற்று உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஒரு வரலாற்றுத் திருப்பம் தரக்கூடிய நாள்!

அறிவாசான், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பகுத்தறிவு பகலவன் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்குவதற்காக, இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், 95 ஆண்டுகாலம் பாடுபட்டு, நம்மையெல்லாம் தன்மானத் தோடு, முழங்காலுக்குக் கீழே வேட்டி தொங்கலாம்; தோளுக்கு மேலே துண்டு இருக்கலாம். யாருக்கும் நாங்கள் அடிமைகள் அல்ல; நாங்கள் எழுச்சி பெற்ற மனிதர்கள்; சுயமரியாதை உள்ளவர்கள் என்பதைச் சொல்லிக் கொடுத்த அறிவாசான் சுயமரியாதைச் சூரியன், ஞான சூரியன் தந்தை பெரியார் அவர்களுடைய 47 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று ஒரு வரலாற்றுத் திருப்பம் தரக்கூடிய அளவிற்கு, ஓர் அருமையான நிகழ்வு இங்கே நடைபெற்று இருக்கிறது.

அதுவும், உலகம் முழுவதும் இருக்கக் கூடிய மக்கள் பார்த்து, களித்து மகிழக்கூடிய ஒரு நிகழ்ச்சி. இன்று பெரியாரின் நினைவு நாள் என்றாலும், வாழ்க்கை என்பது, இன்பமும், துன்பமும் கலந்த ஒன்று. நம்மைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்தார்; உணர்வால் நிறைந்தார். எனவே, இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

திராவிடர் கழகம் வேறு - விடுதலைச் சிறுத்தைகள் வேறு என்று பிரிக்கப்பட முடியாது

மற்றபடி என்றென்றைக்கும் பெரியார் வாழ்கிறார்; என்றென்றைக்கும் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்கிறார்கள்; என்றென்றைக்கும் திராவிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது; இதனை அழிக்க எந்தக் கொம்பனாலும் ஒரு காலத்திலும் முடியாது. இந்தத் தத்துவங்கள் வற்றாத ஊற்று; வறளாத ஜீவநதி என்பதை மிகத் தெளிவாக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காட்டக் கூடிய இந்தப் பயணத்தில், இன்றைக்கு என்னு டைய வாழ்க்கையிலும்கூட ஒரு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு திருப்ப நாள் - என்னுடைய சகோதரர், ஆருயிர் சகோதரர்; திராவிடர் கழகம் வேறு - விடுதலைச் சிறுத் தைகள் வேறு என்று பிரிக்கப்பட முடியாத அளவிற்கு; வீரமணி வேறு - திருமாவளவன் வேறு என்று பிரிக்கப்பட முடியாத அளவிற்கு.

அமெரிக்க பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் விருது!

எப்படி தந்தை பெரியாரும் - டாக்டர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களோ, அதேபோல, ஒரே உடலின் இரண்டு கைகளாக, இரண்டு காதுகளாக, இரண்டு கண்களாக இந்த நாட்டிற்கு உழைப்பதற்கு முடி வெடுத்துக் கொண்டு பாடுபடக் கூடிய ஒருவருக்கு, இந்த சகோதரருக்கு, அமெரிக்க பெரியார் பன்னாட்டு நிறுவனம் இந்த சிறப்பை வழங்கியிருக்கிறது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கும்,

சந்திரஜித் யாதவ் அவர்களுக்கும்,

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும்,

மாயாவதி அவர்களுக்கும்

இதே மேடையில் வழங்கப்பட்ட விருது, அப்படிப்பட்ட ஒரு அரிய விருதினை இன்றைக்கு இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக எழுச்சித் தமிழராக, எங்கும் பரிண மித்துக் கொண்டிருக்கக் கூடிய, எனது உடன்பிறப்பு, மிகப்பெரிய பெருமை கொள்ளக்கூடிய உடன்பிறப்பு, நாடாளுமன்றமாக இருந்தாலும், அய்.நா.மன்றத்தினுடைய பிரிவாக இருந்தாலும் அல்லது மக்கள் மன்றமாக இருந் தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூடமாக இருந்தாலும், அங்கெல்லாம் தன் னுடைய ஆற்றலாலே,ஆளுமையினாலே முத்திரை பதிக் கக் கூடிய ஒருவர், இன்றைக்கு விழா நாயகராக விருது பெறக்கூடியவராக இருக்கிறார் என்றால், அதற்காக நான் பாராட்டுகிறேன் என்று சொன்னால், இன் னொரு பக்கத்தில் நினைத்துப் பார்க்கிறோம், நாங்கள் எங்களையே பாராட்டிக் கொள்கிறோம்.

இந்த விருதினை திருமாவளவன் அவர்களுக்கு இன்றைக்குப் பெரியார் பன்னாட்டமைப்பு அளிக்கிறார்கள் என்று சொன்னாலும், கொஞ்சம் காலம் தாழ்ந்துதான் என்று சொல்லவேண்டும். இந்த விருது கொஞ்ச காலத்திற்கு முன்பே அவருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.

எங்களுக்கு நாங்களே கொடுத்துக் கொண்டதுபோன்ற ஓர் உணர்வு. காரணம், எங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது, எந்த சூழ்நிலையிலும்.

பெரியார் திடலிலே வளர்ந்தவர் எழுச்சித் தமிழர்!

அதுமட்டுமல்ல, இப்படி பெருமை கொள்வதற்கு, ஏதோ அலங்கார சொல் அல்ல. அவர் இன்றைக்கு அரசியலில் அகில இந்தியாவினுடைய பார்வையைப் பெறக்கூடிய அளவிற்கு, உலக மக்களை ஈர்க்கக் கூடிய அளவிற்கு, எதிரிகளை - மனுதர்மத்தைப்பற்றி சொன்னார் என்ற சாக்கை வைத்துக்கொண்டு, ஒரு கலக்குக் கலக் கலாம் என்று சொல்லி, அவர் என்றோ பேசிய ஒரு பேச்சை, உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறார்கள் என்றால், எதிரிகளுடைய  புத்தியை என்ன சொல்வது என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அதற்காக அவர் கலங்கியபாடில்லை.

மிகத் தெளிவாக உறுதியோடு நின்றார்; பாறை போன்று நின்றார். காரணம் என்ன? அவர் பயின்ற கூடம். அதனால் எங்களுக்குப் பெருமை என்று சொல்லும்பொழுது, பெரியார் திடலுக்குப் பெருமை என்று சொல்லும்பொழுது - காரணம் அவர் பெரியார் திடலிலே வளர்ந்தவர்.

இந்த வயலில், நாற்றாக இருந்து, அரசியலில் நடப்பட்டு, செழுமையான பயிராக, சிறப்பான அறுவடைக்குத் தயாராக இருக்கக் கூடியவராக இன்றைக்கு அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதநேயத்தைக் கொண்ட கொள்கை

திராவிடத்தைத் தவிர வேறு கிடையாது

ஜாதியை ஒழிக்கவேண்டும், தீண்டாமையை அழிக்க வேண்டும்; பெண்ணடிமையை முற்றாகப் போக்க வேண்டும்; மனிதநேயம் இந்த நாட்டை ஆள வேண்டும். சமூகத்தில் பேதம் இருக்கக்கூடாது என்ற அந்த மனித நேயத்தைக் கொண்ட கொள்கை திராவிடத்தைத் தவிர வேறு கிடையாது.

திராவிடம் என்றால் சமத்துவம் -

ஆரியம் என்றால் பேதம் -

இதுதானே தவிர, வேறு கிடையாது.

அனைவருக்கும் அனைத்தும் என்பது திராவிடம்

இன்னாருக்கு இதுதான், இது தலையெழுத்து என்பது ஆரியம்.

எனவே, திராவிடமா? ஆரியமா? ரத்தக் கலப்பு வைத்து ஆராய்ச்சி செய்வதல்ல. பண்பாட்டுப் படை யெடுப்பை அடிப்படையில் வந்தது என்பதுதான்.

விடுதலை சிறுத்தைகள் நடத்திய

''சனாதன எதிர்ப்பு மாநாடு''

அந்தப் பணியை எடுத்துக்கொண்டு, சனாதனத்திற்கு எதிராக அவர்கள் நடத்திய மிகப்பெரிய மாநாட்டிற்குத் தலைப்பு ''சனாதன எதிர்ப்பு மாநாடு''. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பு நடத்தினார்கள்.

அதற்குப் பிறகு, சனாதனத்தை எதிர்த்தார் என்பதற்காக, வெற்றி பெற்றாரா? இல்லையா?

அதுதான் பெரியாருடைய வெற்றி -

அதுதான் அம்பேத்கருடைய வெற்றி -

அதுதான் திராவிடத்தின் வெற்றி

இது போதும்.

இது அச்சாரம். இனி வரக்கூடிய எதிரிகள் சில பல மாயக் குதிரைகளையெல்லாம் தயாரிக்கிறார்கள்.

''ட்ரோஜென் ஹார்ஸ்'' என்று காவியத்தில் சொல்வார்கள், ஒரு மரக்குதிரைக்குள் ஆட்களை வைத்துப் படையெடுத்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அதையெல்லாம் முறியடிக்கக் கூடிய அணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில், தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்றால், அந்தக் கூட்டணியில் அங்கம் பெற்றிருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நம்முடைய அருமைச் சகோதரர் தளபதி போன்றவர்களுக்கு உற்றத் துணையாக இருக்கக் கூடியவர் நம்முடைய திருமாவளவன் என்று சொன்னால், அது மிகையாகாது.

பயிற்சி பெற்ற பாசறை தெளிவானது;

அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை உறுதியானது

இன்றைக்கு ஆரியம் வேறு வகையில், சிண்டு முடித் திடுவாய் போற்றி! போற்றி!! என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அந்த அளவிற்கு சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் செய்து, ''ஆகா, அவர் யோசிக்கிறார், இவர் பேசுகிறார்'' என்றெல்லாம் வித்தைகளை நீங்கள் செய்தாலும், அந்த வித்தைகள் ஒருபோதும் இவரிடத்தில் பலிக்காது. காரணம், அவர் பயிற்சி பெற்ற பாசறை தெளிவானது; அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை உறுதியானது. அவருடைய பாதை தடுமாறாத ஒன்று. அவருடைய கால்கள் எந்த லட்சியத்தை நோக்கிப் போகவேண்டுமோ,  அதை நோக்கி தெளிவாக செல்கின்றார்.

அதற்காக அவர் தன்னுடைய வாழ்நாளில் அரசு பதவியைத் துறந்தார். இன்னுங்கேட்டால், பொதுவாழ்க்கையைத் திருமணம் செய்துகொண்டிருக்கக் கூடியவர் அவர், தொண்டறத்தைத்  தவிர வேறு அறம் இல்லை என்று சொல்லி, சமத்துவத்திற்காக வாழக் கூடியவர்.

ஒரு திருமாவளவன் அல்ல - ஆயிரம் திருமாவளவன்கள் தேவைப்படுகின்றனர்

எனவே, இந்த சமூகநீதி விருது என்பது இருக்கிறதே, மிக முக்கியமான காலகட்டத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சமூகநீதியைத் தோற்கடிக்கவேண்டும் - சமூகநீதியை காணாமல் செய்யவேண்டும் - அதனை எப்படியாவது பறிக்க வேண்டும் என்ற முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற இந்த நேரத்தில்தான்,

ஒரு திருமாவளவன் அல்ல - ஆயிரம் திருமாவளவன்கள் தேவைப்படுகின்ற இந்தக் காலகட்டத்தில், அவருடைய பய ணத்தை உற்சாகப்படுத்துவதற்காக, அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளர்கள் நம்முடைய டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களும், நம்முடைய டாக்டர் இலக்குவன்தமிழ் அவர்களும் இங்கே நேரிடையாக வந்து              இந்த விருதினை அளிக்க முடியாத அளவிற்கு கரோனா தொற்று காலகட்டமாக இருப்பதால், பயணங்கள் முடிவதில்லை என்றாலும், காணொலியின்மூலம் இந்த நிகழ்வினை கண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்பாக, டாக்டர் மீனாம்பாள் அந்த விருதினை அளித்தார்கள்.

எனவே, வாழ்த்துவது என்பதைவிட, இந்தப் பெருமையில் பங்கு பெறுகிறபொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் பெறுகிறோம்.

நீங்கள் பல்வேறு வகையிலும், இந்தப் பணியில் சிறப் பாக உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள். அருமை இளைஞர்களே, உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

அவர் போல ஒரு தலைவர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார். அதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், புத்த நெறியை தழுவினார்கள். அந்த புத்தத்தினுடைய தத்துவம் என்னவென்று ஒருவர் கேட்டார்.

தந்தை பெரியார் சொன்ன விளக்கம்!

நாங்கள், அய்யா அவர்களோடு வடபுலத்திற்குச் சென்றி ருந்தபொழுது, ஒரு பத்திரிகையின் செய்தியாளர், அவர் உயர்ஜாதிக்காரர், அவர் அய்யாவிடம் கேட்டார்,

''நீங்கள் மதம் கூடாது என்று சொல்லி, புத்தத்தை ஆதரிக்கிறீர்கள, அதிலே சடங்கு இல்லையா?

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று அவர்கள் மேற்கண்ட மூன்றை உச்சரிக்கிறார்களே, அது சடங்கல்லவா? என்று கேட்டார்.

உடனே, பகுத்தறிவாளரான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்,

''இந்த மூன்றுக்கும் என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்றார்.

அந்தப் பத்திரிகையாளர் தெரியாது என்று திகைத்து நின்றார்.

நான் சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்ற தந்தை பெரியார் அவர்கள்,

''இந்த மூன்றும் சடங்கல்ல; முதல் பகுத்தறிவாளராக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புத்தன், சித்தார்த்தனாக இருந்து, புத்தியைப் பயன்படுத்தி, புத்தனாக ஆகிய புத்தன், மேற்கண்ட மூன்றை சொல்லியிருக்கிறார் என்றால்,

அது,

புத்தம் சரணம் கச்சாமி என்றால்,

உன் தலைவனிடம் உன்னை ஒப்படைத்துக் கொள்!

தம்மம் சரணம் கச்சாமி என்றால்,

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொண்டேன்.

சங்கம் சரணம் கச்சாமி என்றால்,

நான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்காக - அமைப்பிற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்.

ஒரு தலைவன், ஒரு கொள்கை, ஒரு இயக்கம் - இந்த மூன்றும்தான் மிக முக்கியமானது என்றார் தந்தை பெரியார்.

அந்தப் பயிற்சியை பெரியார் திடலில் எடுத்தவர். எனவே, அவரை நீங்கள் பின்பற்றுகிற நேரத்தில், இதனை மறந்து விடாதீர்கள் தோழர்களே!

பிளவுபடுத்திதான் ஆரியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்!

தலைவர் - கொள்கை- நிறுவனம் - இதற்கு எதிரான சிந்த னைகள் யாருக்கும் வரக்கூடாது.

ஆரியர்கள், பிளவுபடுத்திவிட்டுத்தான் வாழ்ந்திருக்கிறார் கள். அறிவால், விவேகத்தால் வாழ்ந்ததில்லை அவர்கள்; சூழ்ச்சியால் வாழ்ந்திருக்கிறார்கள்.

அந்த சூழ்ச்சியை, மிகப்பெரிய அளவிற்குத் துளித்துளியாக உடைக்கக் கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவர்தான் திருமாவளவன் - கரிகாலன். அதனை மறந்துவிடாதீர்கள்.

இந்தியா முழுவதும் அவர் சமூகநீதிப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும்

எனவே, அவருக்கு இந்த விருதை அளிப்பது மிகவும் சிறப்பானது.

ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள் தோழர்களே!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், அவருடைய உழைப்பு என்பதும், அவருடைய பங்களிப்பு என்பதும் மிகமிக முக்கியமாக இருக்கும்.

தமிழ்நாட்டை அடுத்து அவர் இந்தியா முழுவதும் சமூகநீதிப் பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.

அம்பேத்கர் இல்லையே என்று நினைக்கவேண்டாம் - பெரியார் இல்லையே என்று நினைக்கவேண்டாம் - அவர்கள் உருவத்தால் இல்லையே தவிர, உணர்வால் ஒவ்வொரு இளை ஞர்களின் உள்ளத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் பெரியார் - அம்பேத்கர்  படிப்பு வட்டம் என்று எங்கு பார்ததாலும் இருக்கிறது.

எனவே, இளைஞர்களே! பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தை நாடெங்கும் உருவாக்குங்கள்!

பெரியார் படமும், அம்பேத்கர் படமும் இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது!

அதேபோல, ஒவ்வொருவரும் உறுதியெடுத்துக் கொள் ளுங்கள் - பெரியார் படமும், அம்பேத்கர் படமும் இல்லாத வீடுகளே இல்லை என்பதை ஒவ்வொருவரும் தெளிவாகக் காட்டுங்கள்.

இன்றைக்கு நம்முடைய எதிரிகள்கூட அம்பேத்கர் படத்தைப் போடுகிறார்கள். காரணம் என்ன? இன்றைக்கு நாம் அவரைப் பரப்புதைவிட, அவரைப் பாதுகாப்பது என்பதும், அவருடைய கொள்கைகளைத் திரிபுவாதத்திலிருந்து காப்பாற் றுவது என்பதும் மிக முக்கிய பணிகளாக இருக்கின்றன.

எனவேதான்,

சமூகநீதி வாழ்க!

சமூகத்தினுடைய ஒற்றுமை சிறக்க!

மனிதநேயம் வெல்க!

சுயமரியாதை வெல்க!

இவற்றையெல்லாம் பெறவேண்டுமானால், திராவிடம் வெல்லட்டும்! திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! என்பதையே நோக்கி பயணிப்போம்!

இந்த அருமையான விருதினைப் பெற்ற நீங்கள், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் பணியாற்றி, இன்னும் எத்தனையோ சிறப்புகளுக்கு உங்களுக்கு வயது உண்டு. பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து நீங்கள் முனைவராக வந்தாலும், உங்களுடைய உழைப்புக்கே ஆயிரம் முது முனைவர் பட்டம், கவுரவப் பட்டம் கொடுக்க வேண்டிய அளவிற்கு நீங்கள் இந்த வயதில் சிறப்பாக, மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடிய மிகச் சிறந்த தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறீர்கள்.

தாய்வீட்டு சீதனத்தை உங்களுக்கு அளித்திருக்கிறார்கள்

எங்களுக்கு இதைவிட பெருமை என்ன? தாய் வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்; தாய்வீட்டு சீதனம் என்ற பெருமை யோடு, இந்த சீதனத்தை அவர்கள்  உங்களுக்கு அளிக்கிறார்கள்.

நாங்கள் பார்க்கிறோம்; பெருமைப்படுகிறோம். வாழ்க! வளர்க!

வாழ்க பெரியார்!

வாழ்க அம்பேத்கர்!

வளர்க சமூகநீதி!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments