கரோனா வைரசை வீழ்த்திய நியூசிலாந்து

சீனாவில் பரவும் நுண் கிருமி குறித்து கடந்த ஆண்டு இறுதியில் செய்திகள் வெளியாக தொடங்கின. கடந்த பிப்ரவரியில் இந்த நுண் கிருமி பரவல் உலகளாவிய அளவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே விழிப்புணர்வோடு செயல்பட்ட நியூசிலாந்து அரசு, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியே பயண கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. சீனா வழியாகவோ, சீனாவில் இருந்தோ நியூசிலாந்து வரும் பயணிகள், 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது.

நியூசிலாந்தின் பொருளாதாரம் 3 வணிகங்களை அடிப்படையாக கொண் டது. முதலாவது உழவு. அதில் முக்கிய மாக இறைச்சி, பால் ஏற்றுமதி. அடுத்தது சுற்றுலா. பல்வேறு நாட்டினரும் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகை தரும் நாடு. சுற்றுலாவை நம்பி ஏராள மான நகரங்கள், வணிகங்கள் இங்கே இயங்குகின்றன. மூன்றாவது - கல்வி. பன்னாட்டு மாணவர்கள் இங்கே படிப்ப தற்காக குவிகிறார்கள். நான் பணியாற் றிய நிறுவனம் விருந்தோம்பல், சுற்றுலா துறையைச் சார்ந்தது. புதிய கிருமி தொற்று பெரிய இடையூறுகளைக் கொண்டு வரலாம் என்று எனது உள் ளுணர்வு உணர்த்தியதால், அப்போது முதலே நான் பணத்தை சேமிக்க தொடங்கினேன்.

கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு, புதிய நுண் கிருமி யின் பெயரை கோவிட் 19 (கரோனா) என அறிவித்தது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நியூசிலாந்தின் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப் போது விமான நிலையங்களில் கண் காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இத்தாலி, தென் கொரியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிய தால் அந்த நாடுகளில் இருந்து நியூசி லாந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அரசின் அறிவுறுத் தலின் பேரில் பொதுமக்கள் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து கொண்டனர்.

கடந்த மார்ச் 13ஆம் தேதி நியூசிலாந் தில் நடக்கவிருந்த திருவிழா (பசிபிகா திருவிழா) முதல்முறையாக ரத்து செய் யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மக்கள் யாருமற்ற மைதானத்தில் டெஸ்ட் போட்டியை ஆடினர். இந்தத் தொடரின் மற்ற ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூ சிலாந்தில் 6ஆவது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் நியூசிலாந்து வரும் அனைத்து பயணிகளும் தனி மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடந்த மார்ச் 14ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மார்ச் 16ஆம் தேதி நியூசி லாந்து பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அரசு உத்தரவை மீறி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாத பயணி கள், நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜெசிந்தா, ரூ.91,343 கோடி பொருளாதார மீட்பு உதவித் தொகையை அறிவித்தார். இது நாட்டின் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 4 சதவீதம் ஆகும். இதில் சுகாதாரத் துறை, தொழில் துறை, வேலையிழந்தோருக்கு பெரும் தொகை ஒதுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 19ஆம் தேதி நியூசிலாந் தின் மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. அப் போது 100 பேருக்கும் அதிகமாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்தது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா நாட்டு மக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பு டன் பின்பற்றினர். கடந்த மார்ச் 25ஆம் தேதி நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி கரோனா வைரஸால் நியூசிலாந்தில் முதல் மர ணம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட் டன. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, நியூசி லாந்தில் கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை 1,000 ஆக உயர்ந்தது. அப் போது அனைத்து வணிகங்களுக்கும் ஊதிய மானியத்தை அரசு அறிவித்தது.

இதன்படி பகுதி நேர பணியாளர் களுக்கு வாரம் ரூ.25,782, முழு நேரப் பணியாளர்களுக்கு ரூ.43,093 மானியம் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை 8 வாரங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது. எனினும் கரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலரும் பணி இழக்க நேரிட்டது. அதில் நானும் பாதிக்கப்பட்டேன். எனினும் ஜனவரி முதல் நான் சேமிக்கத் தொடங்கியது எனக்கு பெரிதும் உதவியது.

நியூசிலாந்து அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏப்ரல் 28ஆம் தேதி வைரஸ் பரவல் குறைந்தது. ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மீண் டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மே 14ஆம் தேதி ரூ.3,68,319 கோடி பொருளாதார மீட்பு உதவித் தொகையை நியூசிலாந்து அரசு அறிவித்தது. மேலும் பணி இழந்தோருக்கு 12 வாரங்கள் வரை வருவாய் தருவதற் கும் அரசு உத்தரவு பிறப்பித்தது. ஊதிய மானியமும் நீட்டிக்கப்பட்டது. இது சிறு, குறு வணிகங்கள் மீள்வதற்கு உதவியாக வும், பணி இழப்பை ஈடு செய்யவும் உதவியது.

ஜூன் 8ஆம் தேதி நியூசிலாந்தில் கரோனா தொற்று அறவே இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து 100 நாட்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமை யாக திரும்பியது. ஆரம்பம் முதலே புத்திசாலித்தனம், முன்னெச்சரிக்கையு டன் பிரதமர் ஜெசிந்தா செயல்பட்டதால் கரோனா வைரஸ் சவாலை நியூசிலாந்து எளிதாக சமாளித்து வெற்றி கொண்டது.

கடந்த ஆகஸ்டில் ஆக்லாந்து நக ரில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி யது. அப்போதும் அரசு துரிதமாக செயல்பட்டு வைரஸ் பரவலை கட்டுக் குள் கொண்டு வந்தது. கடந்த மே மாதம் முதல் நியூசிலாந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போதும் கரோனா வைரஸை கட்டுப் படுத்த முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற அரசு உத்தர விட்டுள்ளது.

வள்ளுவர் கூறிய திருக்குறள் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் ஜெசிந்தா அரசு செயல்படுகிறது.

கட்டுரையாளர்: செல்வகணபதி

கோரா' தமிழ்ப் பிரிவின் சமூக மேலாளர்

நன்றி: ‘இந்து தமிழ் திசை', 28.12.2020

Comments