வழிபாடு என்ற பெயரில் உணவுப் பொருள்கள் நாசம்!

கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால், தயிர், நெய்!

ஜெய்ப்பூர், டிச.30 ராஜஸ்தானில் கோயில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பால், நெய் மற்றும் தயிர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு என்று கூறி உணவுப் பொருள்களை நாசம் செய்துள்ளனர்.

ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயண கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின்போது நடந்த ஒரு நிகழ்வு தற்போது அனைவராலும் பேசப்படுகிறது. ஏனென்றால் கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சுமார் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி பூஜை செய்து வீணடித்துள்ளனர்.

மொத்தமாக உள்ள 11,000 லிட்டரில், 1500 லிட்டர் தயிர், ஒரு குவிண்டால் நெய் அடங்கும். மற்றவை அனைத்தும் பால் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக ரூ.1.50 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாம். இந்த நடைமுறை கடந்த காலத்தில் இருந்தே இருக்கிறதா என அப்பகுதி மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்டாயமாக இதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஓரிரு முறை இந்த முறை பின்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோயில் கட்டுமானப் பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி ஜனவரி மாத 'உண்மை' இதழில் தலையங்கம் காண்க!

Comments