தந்தைபெரியார் நினைவு நாள் சிந்தனையோட்டம்!

தந்தைபெரியார் 47ஆம் ஆண்டு நினைவு நாள் கொள்கைப் பூர்வமாக எழுச்சியோடு நேற்று நடந்து முடிந்திருக்கிறது.

கரோனா அச்சுறுத்தல் தலை தூக்கிநிற்கும் தருணத்தில் நடைபெற்றது என்றாலும், தந்தை பெரியார் நினைவு நாள் என்ற எண்ணத்தோடு, உணர்வோடு தோழர்கள் வீட்டை விட்டு  வெளியே வந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கால் பதிக்க முடியவில்லையே என்ற கோபம் பொங்கி எழுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

வெறும் இரண்டே இடங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா... இன்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறும் அளவிற்கு வளர்ந்திருந்தாலும், இந்தியாவின் பிற பகுதிகளில் அதற்கு ஆதரவு கிடைத்தது என்றாலும் கூட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்பாடுபட்டும் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அவர்களைப் பிடுங்கித்தின்று கொண்டுள்ளது.

இதற்கு அடிப்படைக் காரணம் தந்தைபெரியாரும். அவர் கண்ட திராவிட இயக்கமும்தான் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட  காரணத்தினால்தான் தந்தை பெரியார்மீது கட்டுக்கடங்காத கோபக்கனல்பீறிட்டு காணப்படுகிறது.

பெரியார் சிலை அவமதிப்பு என்பதெல்லாம் இந்த அடிப்படையில்தான்! பார்ப்பன ஏடுகள் திராவிடர் கழகத்தின்மீதும், அதன் தலைவர் மீதும் நான்கு கால் பாய்ச்சல் மேற்கொள்வது எல்லாம் கூட இந்த அடிப்படையில்தான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்து வந்த பார்ப்பனர்களின் வேட்டையை திராவிட இயக்கம் ஒரு காலகட்டத்தில், அதற்குமேல் அது நகர்ந்திட முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

கடும் எதிர்ப்புப்பிரச்சாரங்கள், போராட்டங்கள்தான் இதனை சாதித்துக் கொடுத்திருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த எதிர்ப்புணர்வு அரசியலிலும் பாய்ந்து சீறியது.

ஆனானப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே (ராஜாஜி) தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தார். இன்னொரு காலகட்டத்திலும் தமது பரம எதிரியான காமராசரின் தோளைப்பற்றிக்கொண்டு அரசியல் களத்தில் இறங்கி தம்மை புதுப்பித்துக் கொள்ளலாம், அதன்மூலம் ஆரிய ஆதிபத்தியத்திற்கு புத்துயிர் ஊட்டிப்பார்க்கலாம் என்றநப்பாசையில்  கால்பதித்தார்-1971இல்; கடையாணி கழன்று கவிழ்ந்ததுதான் மிச்சம்.

ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் ஆட்சி அதிகாரத்திலும் - திராவிட இயக்கத்தின் பின்னணியில் வந்ததால் அடிப்படை சமூக நீதிக்கு எதிராகப் பயணிக்க முடியவில்லை.

69 சதவீத இடஒதுக்கீடு அவர் ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்டது- திராவிடர் கழகத்தின் தலைவரின் ஆலோசனையால்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலை என்ன? 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பார்ப்பனர் ஒரே ஒருவர்தான்-சென்னை மயிலாப்பூர் மேனாள் டிஜிபி நடராஜ்தான் அந்த ஒருவர்.

இதனை புரிந்துகொண்டால் தமிழ்நாட்டில் பிஜேபி  ஏன் கால் பதிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை காரண காரியத்துடன் புரிந்துகொள்ளலாம்.

பா... என்றால், பார்ப்பன ஜனதா கட்சி என்பதை எளிதாக புரிந்துகொள்ளும் புத்தி நுட்பத்தை தந்தை பெரியார் பரப்பிய பகுத்தறிவு வெளிச்சம் தாராளமாகவே அளித்திருக்கிறதே!

தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஊன்றப்பட்ட, ஊட்டப்பட்ட இந்தப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வை மாற்றத்தான் தமிழக பா...விற்கு தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட தோழரை நியமித்துள்ளனர். இதற்கு முன்பும்கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி அவர்களை இப்படித்தான் நியமித்து பார்த்தார்கள். விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.

ஒரு புதிய தந்திரத்தின்மூலம் ஆழம் பார்க்கிறார்கள். பெரியார் எதிர்ப்பை சற்று தள்ளிவைத்து, பெரியாரின் கடவுள் மறுப்பு என்பதில்தான் எங்களுக்கு மாறுபட்ட கருத்து: மற்றபடி பெரியாரின் சீர்திருத்தங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

ஆனால், இதைக்கூட பா...வில் உள்ள பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இது பா...வுக்கும், தேசியத்துக்கும் எதிரானது என்று கூறிவிட்டனர்.

தந்தைபெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளும், அதில் பலராலும் ஆற்றப்பட்ட உரைகளும் - தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இடமில்லை. ‘கோ பேக் அமித்ஷாஎன்ற முழக்கத்தின் பொருள்கோ பேக் பிஜேபி’, ‘கோ பேக் ஹிந்துத்துவாஎன்பதுதான்.

எந்த அளவுக்குப் பெரியார்தம் கொள்கைகள் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பிஜேபியின் வீழ்ச்சி வேகப்படுத்தப்படும்- இது தமிழ்நாட்டு மண்ணின் குணம்!

Comments