தந்தை பெரியார் நினைவு நாளில் கருத்து மழை சட்டமன்றம் செல்லாத பெரியார் சாதித்தது எப்படி?

* நமது சிறப்பு செய்தியாளர்

 தந்தை பெரியார் 47ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடலில் நேற்று (24.12.2020) நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில்நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் . இன்பக்கனி வரவேற்புரை ஆற்றிட, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.

கழகத்தின் மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை இணைப்புரையாற்றினார்.

தோழர் தா. பாண்டியனுக்கு பெரியார் விருது

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு தந்தை பெரியார் நினைவு நாளில் "பெரியார் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர் தா.பா.வுக்குப் பொன்னாடை போர்த்தி "பெரியார் விருது" வழங்கினார்.

"தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்" (ஆசிரியர் கி. வீரமணி) எனும் நூலினை தோழர் தா.பாண்டியன் அவர்களிடமிருந்து ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார். தோழர் தா.பா. அவர்களைப் பற்றிய சில ஒளிப்படங்களும் திரையிடப்பட்டன. விருதினைப் பெற்றுக் கொண்டும் - நூலினை வெளியிட்டும் தோழர் தா.பா. அவர்கள் உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துகள் சிறப்பானவை.

தந்தை பெரியாரை - தாம் சந்தித்த பல நிகழ்வுகளை  எடுத்துக் கூறினார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சை முதன் முதலில் நான் கேட்டேன். கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளர் திண்டுக்கல் . பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவு அளித்துப் பேசினார்.

"அப்பொழுது ஒரு கேள்வி கேட்டார். 'போனஸ் வாங்கி முதலாளியானவன் இருக்கானா? போனஸ் கொடுத்து தொழிலாளியான முதலாளியும் இருக்கிறானா?' என்று  பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சை உயர்நிலைப் பள்ளி மாணவனாக கேட்டேன்" என்றார்.

இன்னொரு முறை பெரியார் திடலில் அவரைச் சந்தித்தேன்.

வக்கீல் தொழிலை விட்டு விட்டு முழு நேரக் கட்சிப் பணியில் ஈடுபடும் கருத்தைச் சொன்னேன். "உன்னை அறிவாளியாக அல்லவா நினைத்தேன்" என்றார். உன் குடும்பம், பிள்ளைகளை யார் காப்பாற்றுவது தொழிலைப் பார்த்துக் கொண்டே கட்சிப் பணியில் ஈடுபடக் கூடாதா?

"நீதித்துறையிலிருந்து கொண்டே அங்குப் போராட வேண்டிய விஷயங்களும் இருக்கின்றனவே?" என்று ஒரு தந்தையின் இடத்திலிருந்து அன்று தந்தைபெரியார் கேட்ட கேள்வியை நெகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டார்.

"தன் குடும்பச் சொத்துக்களையும் பாரம்பரிய சொத்துக்களையும் செலவழித்துப் பொது வாழ்க்கை நடத்தியவர் தந்தை பெரியார் - பொது வாழ்க்கையில் இது ஓர் எடுத்துக்காட்டான ஒன்று" என்றும் கூறினார்.

பெரியார் நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய நூலைப் படித்தேன் - பல முறை படித்தேன் - எப்படிப்பட்ட தீர்மானங்கள் அவை. இவற்றைப் பற்றியெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஏன் கவனிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

ருசியாவுக்குச் சென்று முன்பே மார்க்ஸ் ஏங்கல்ஸ் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். இந்தியாவிலேயே வேறு மொழியில் வெளி வந்த நூல் பெரியார் வெளியிட்டது தான்.

இப்பொழுதெல்லாம் யார் யாரோ வெளியிடுகிறார்கள். அது வேறு பிரச்சினை. அவர் வெளியிட்ட காலத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கம்யூனிஸ்டுக் கட்சிகளைக் கடுமையாகக்கூட விமர்சனம் செய்திருக்கிறார் பெரியார். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் ருசியாவைப் பற்றி குறை சொன்னதில்லை.

இன்று நான் வெளியிட்ட "தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்" நூலின் ஒரு கட்டுரை "மார்க்சும் - லெனினும்" என்ற கட்டுரை. அதில் பெரியார் குறிப்பிடுகிறார்.

மார்க்சும் லெனினும் பிறந்தநாட்டில் பிறப்பில் பேதம் படுத்தும் செய்தி என்ற  ஒன்று இல்லை. அங்கு நிலவியது எல்லாம் வர்க்கம்தான். அங்கு அவர்கள்பேசிய கம்யூனிசத்தை பிறப்பில் பேதம் நிலவும் இந்தியாவில் பேசி என்ன பயன் என்று பெரியார் கேட்டுள்ளார்.

இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்கள் வெளிநாடுகளில் படித்து அங்குள்ள சமூகநீதியை மனதிற் கொண்டு இங்கு கட்சி நடத்தினார்கள் என்பதுதான் உண்மை.

தொழிற்சங்கத்திலேயே இங்கு ஜாதி வந்துவிட்டதைப் பற்றிக் கூறிய தோழர் தா.பா. நெய்வேலி தொழிற்சாலையில் 72 ஜாதி ரீதியான தொழிற் சங்கங்கள் உள்ளதையும் எடுத்துக் காட்டினார்.

சட்டமன்றத்துக்கும்,  நாடாளுமன்றத்துக்கும் செல்லாத  - தடியை எடுத்துக் கொண்டு வீதிகளில் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த பெரியார் அரசியல் சட்டத்தை முதலில் திருத்தியது எப்படி? என்ற பொறிதட்டும் வினாவைக் கிளப்பினார் தோழர் தா.பா.

தந்தை பெரியார் ஏற்றிய நெருப்பின் மீது படிந்திருந்த சாம்பலை ஊதி அந்த நெருப்பைப் பற்ற வைத்து, அந்தப் பணியை ஓயாமல் செய்து வருபவர் நமதுஆசிரியர் வீரமணி என்றும் புகழாரம் சூட்டினார் தோழர் தா.பா. (முழு உரை பின்னர்).

"சென்னை உயர்நீதிமன்றத்தில் 78 நீதிபதிகளில் 13 பேர் பெண்கள் - காரணம் பெரியார் - து. அரிபரந்தாமன் - உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தோழர் தா. பாண்டியன் அவர்கள் பெரியாரைப் பற்றிப் புரிந்துகொள்ள தனக்கு 40ஆண்டுகள் தேவைப்பட்டன என்று சொன்னார். என் நிலையும் அதே என்று சொன்ன பொழுது ஒரே சிரிப்பு ஆரவாரம்.

மாணவராக இருந்தபோது சி.பி.எம். கட்சியில் தான் இருந்தேன். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து வெளியே வந்தேன். பின் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டேன் - பிறகு நீதித்துறை.

நாங்கள் எல்லாம்  பி.ஜே.பி. பக்கம் போகாமல் இருப்பதற்கே காரணம் பெரியார் தான்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விட அவர் மறைந்த காலத்தில் தான் அதிகம் தேவைப்படுகின்றார். தலித் முரசு ஆசிரியர் குழுவில் இருந்த இளங்கோவன் மூலமாகத்தான் முன்பைவிட இளைஞர் மத்தியில் பெரியார் போய் சேர்ந்துள்ளார். “கோ பேக் அமித்ஷா”, “கோ பேக் மோடிஎன்று சமூக வலை தளங்களில் பதிவு செய்பவர்கள் எல்லாம் யார்? இளைஞர்கள் தானே? இதற்கு உந்து சக்தி பெரியார் தான்.

திரிபுராவில் ஆட்சியை பி.ஜே.பி. பிடித்தவுடன் அங்கே லெனின் சிலை உடைக்கப்பட்டது. இங்கு பெரியார் சிலையைச் சேதப்படுத்துபவர்கள் திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் ஒளிந்து கொண்டுதானே செய்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1967க்கு பிறகு எந்தத் தேசிய கட்சியும் தலை எடுக்க முடியாததற்கு என்ன காரணம்? சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் 78 பேரில் பெண் நீதிபதிகள் 13 பேர் - வேறு எந்த மாநிலத்தில் இந்த நிலை? உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் என்றால் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லையே! என்ன காரணம்?

சடங்குகள் இல்லாத சுயமரியாதைத் திருமணம் தமிழ்நாட்டில் தானே - அதுவும் சட்ட ரீதியாக - இது பெரியாரின் சாதனையல்லவா?

மார்க்சுக்கு ஜாதி பற்றிய பிரச்சினை இல்லை. இந்த ஜாதி அமைப்பு தகர்க்கப்படாதவரை சமதர்மம் எப்படி வரும்?

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை கடவுள் ஒரு பிரச்சினையே இல்லை. பெரியார் சொல்கிறார், “எனக்கு என்ன கடவுள் பிரச்சினைஎனக்குப் பிரச்சினை, ஜாதிதான். ஜாதிக்குப் பாதுகாப்பு கடவுள் என்கிறபோது அங்கே தான் கடவுள் பிரச்சினை" என்று சரியாகவே சொன்னவர் பெரியார்.

இப்பொழுது ஆன்மிக அரசியல் ஒன்று கிளம்பியுள்ளது. ஆன்மீக அரசியல் என்பது சனாதானம் - ஜாதி அரசியலே, நமது அரசியல் சமூக நீதியே என்று கூறினார். மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன்.

இது பெரியார் மண்ஆழ்வார் மண்ணல்ல!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தோழர் தா.பாண்டியன் அவர்கள் மூளையால் சிந்தித்து இதயத்தால் இங்கு பேசினார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் போதெல்லாம் என் உடல் நிலை பாதிக்கப்பட்டது போன்ற உணர்வை தான் பெற்றேன்.

ஒப்பனை இல்லாமல் உள்ளதை உண்மையை அப்படியே போட்டு உடைத்துப் பேசுபவர் தோழர் தா.பாண்டியன்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிற்படுத்தப்பட் டோருக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் நாடெங்கும் எத்தனையோ மாநாடுகள், கருத்தரங்குகளை - திராவிடர் கழகம் நடத்திய போது, தவறாமல் அத்தனை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டவர் தோழர் தா.பாண்டியன். அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் அக்காலத்தில் அனந்தநாயகி, ரமணிபாய் போன்றவர்கள் எல்லாம் ஆஸ்தான பேச்சாளர்கள் - முக்கிய மாநாடுகளில் திமுக தலைவர் கலைஞர் பங்கு கொண்டார்.

இடஒதுக்கீடுக்கு எதிராக பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்த காரணத்தால் 1980இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோற்றவர் எம்.ஜி.ஆர். என்ற வரலாற்றுத் தகவலை கூறிய திராவிடர் கழகத் தலைவர். இப்பொழுது எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்தும் மரக்குதிரைகள் (TROJAN HORSES) பற்றியும் கருத்துக் கூறினார். மின்மினிப்பூச்சிகள் மின்சாரம் அல்ல.

இது பெரியார் மண் அல்ல - ஆழ்வார் மண் என்று கூறுகிறார்கள். ஆழ்வார் மண்ணில் அனைவருக்கும் கல்வியில்லை. பெரியார் மண்ணில் தான் அனைவருக்கும் கல்வி உரிமை கிடைத்தது.

சுயமரியாதைத் திருமணம் குறித்து மேனாள் நீதிபதி குறிப்பிட்டார். இது பற்றி மூத்த பொதுவுடைமை வாதி கிரேன் முகர்ஜி சொன்னதாக அவருடைய நெடுங்கால நண்பர் .வி.கே.சம்பத் கூறியதுண்டு. “எங்கள் வீட்டுத் திருமணத்தில் கூட ஒரு புரோகிதன் தேவைப்படுகிறான். அதை தவிர்க்க முடியவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் புரோகிதர் இல்லாத சுயமரியாதைத் திருமணம் நடக்கிறது.

அதற்குக் காரணம் பெரியார் என்று சொன்னதுண்டு.

தோழர் தா.பாண்டியன் சொன்னதுபோல சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத தந்தை பெரியாரால் இதனை சாதிக்க முடிந்தது.

வர்க்கம் பற்றி எல்லாம் இங்கு பேசினார்கள். இதில் தந்தை பெரியாரைப்பற்றி 40 ஆண்டுகளுக்கு பிறகு தானே நாங்கள் பெரியாரைப் புரிந்து கொண்டோம் என்று தோழர் தா.பாண்டியன் அவர்களும். மேனாள் நீதிபதி அவர்களும் இங்கு குறிப்பிட்டார்கள் என்ற போது - நாங்கள் யாருக்குத்தான் மாரடிப்பது என்று தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார். (முழு உரை பின்னர்)

 பெரியார் சுயமரியாதைத் 

திருமண நிலையத்தின் சாதனை

சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை திருமண நிலையம் இயங்கி வருகிறது. ஒரு வருடத்தில் மட்டும் இங்கு நடைபெற்ற திருமணங்கள் எண்ணிக்கை 307 மட்டும். இதில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் - 272, வேற்று மதத்தவர்கள் - 17, பார்ப்பனர்கள் செய்து கொண்ட திருமணம் - 12, மணமுறிவு பெற்றவர்கள் மறு திருமணம் - 6.

திருச்சியில் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்ற ஓர் அமைப்பை 1959இல் தொடங்கினார்கள்.

அந்த இல்லத்தில் 3273 குழந்தைகள் வளர்த்தெடுக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள் தான் பெரும்பாலோர். நாங்கள் பொறுப்புக்கு வந்த நிலையில், அனாதை இல்லம் என்ற சொல்லை அகற்றி விட்டோம்.

இந்த இல்லத்தில் வளர்ந்த 34 பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளோம். பல பெண்கள் பொறியாளர்களாகவும், செவிலியராகவும், ஆசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

- தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் கழகத் தலைவர்

Comments