தமிழ்நாட்டை பெரியார் மண் - சமூகநீதி மண் என்று ஏன் சொல்லுகிறோம்?

சமூகநீதிக்காகவே தன் வாழ்நாளில் முக்கால் நூற்றாண்டு காலம் உழைத்தவர் தந்தை பெரியார்!

திருநெல்வேலி: சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டினை காணொலி மூலமாக தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

திருநெல்வேலி, டிச. 29   தமிழ்நாட்டை பெரியார் மண், சமூகநீதி மண் என்று ஏன் சொல்லுகிறோம்? சமூகநீதிக்காகவே தன்னுடைய வாழ்நாளில்  முக்கால் நூற்றாண்டு காலத்து உழைப்பைக் கொடுத்தவர் தந்தை பெரியார் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருநெல்வேலியில் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு

27.12.2020 அன்று காலை  நெல்லையில் நடைபெற்ற சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டினைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மிகுந்த வரலாற்று பெருமைக்குரிய ஒரு நூறாண்டு சமூகநீதி வகுப்புரிமை தீர்மானத்தை நம்முடைய அறிவா சான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்த பிறகு, முதலாவது திருநெல்வேலி மாவட்ட  காங்கிரஸ் மாநாட்டினை 1920 ஆம் ஆண்டு பொறுப்பேற்று நடத்துகின்ற அந்த மாநாட்டில், அற்புதமான பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

அந்த வரலாற்றினை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டு மானால், சுருக்கமான சில கருத்துகளை சொல்கிறேன். ஏராளமான கருத்துகளைதோழர்கள், சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள் சொல்லவிருக்கிறார்கள்.

1920 ஆம் ஆண்டு தந்தை பெரியார் என்ற பகுத்தறிவு பகலவன் நம் அறிவாசான் திராவிட இயக்கத்தினுடைய மிகப்பெரிய ஆலமரமாக இன்றைக்கு அமைந்து உலகெலாம்  திராவிடத்தைப்பற்றி பேசக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய, தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்த பிறகு நடத்திய முதல் மாநாட்டில், தெளிவாக பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

‘‘தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்''

அந்தத் தீர்மானங்கள் அத்தனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூறாண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற வரலாறு அது. அந்த சமூகப் புரட்சி வரலாற்றை இளைஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்; அதன்மூலம், குறிப்பாக திராவிட இயக்க இளைஞர்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும், பரப்பவேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் வெளியிட்ட ‘‘தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்'' என்ற நூலில்  அதனை சிறப்பாக வெளியிட்டு இருக்கிறோம். 300 பக்கத் திற்கு மேற்பட்ட நல்ல தொகுப்பு நூலாகும் அது. அந்த நூலினை கட்டாயம் படிக்கவேண்டும்; அப்படி படித்தால், உங்களுக்குக் கிடைத்தற்கரிய புதையல் கிடைக்கும்.

இந்த மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான அருமைச் சகோதரர் சூரியா சேவியர் அவர்களே,

எனக்கு முன் சிறப்பாக உரையாற்றிய தமிழகத்தின் மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரும், சிறந்த செயல்வீரருமான பண்பாளர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் மானமிகு ஆவுடையப்பன் அவர்கள் சுருக்க மாகவும், தெளிவாகவும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய வழியில்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்று, அதன்மூலமாகத்தான் மக்கள் காலங்காலமாக இழந்த உரிமைகளையெல்லாம் மீட்டுத் தரவும், விரிவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது என்று சொன்னார்; அவருக்கு என்னுடைய பாராட்டு களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை அடுத்து, எனக்குப் பிறகு இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கக் கூடிய அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும், இந்நிகழ்வினை காணொலிமூலம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களுக்கும் என்னுடைய பணிவன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருமைத் தோழர்களே, குறிப்பிட்ட நேரத்தில் என் னுரையை முடிக்கவேண்டும் என்பதற்காக, சில வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களை  ஒரு விமானத்தில் அழைத்துப் போய், இதுதான் திருநெல்வேலி பேட்டை,  இதுதான் பாளையங்கோட்டை, இதுதான் தச்சநல்லூர் என்று சுட்டிக்காட்டுவதைப்போல, உங்களுக்கு வேக வேகமாக சில கருத்துகளை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

திருநெல்வேலி ஜில்லா

சுயமரியாதை மகாநாடு

‘‘நாட்டில் ஜாதி, மத வேற்றுமைகளில் இருந்துவரும்வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும்'' என்று 1927 ஆம் ஆண்டு  திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் தீர்மான மாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

1920 ஆம் ஆண்டு காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் நிலைக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்ட காரணத்தினால்தான், தொடர்ந்து தந்தை பெரியார், திரு நெல்«லியில்,  அதற்கடுத்து திருவண்ணாமலையில், அதற்கு முன்பு திருப்பூரில் (1922), அதற்கடுத்து  காஞ்சிபுரத்தில் திரு.வி.. தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் (1925) இடையறாது வகுப்புரிமை தீர்மானத்தைத்தான், சமூகநீதியைத்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வி வாய்ப்புகள் இல்லை - நம்முடைய  நம்முடைய அப்பாக்களும், தாத்தாக்களும் கைநாட்டுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள் என்ற கொடுமையைப் போக்குவதற்காகத் தான், திராவிட இயக்கம் தொடங்கிய அந்தப் பணியை, காங்கிரசிலிருந்து செய்தால், அகில இந்திய அளவில் விரிவாக வரும் - இது (திராவிட இயக்கம்) தென்னாட்டிற்கு மட்டும்தான் என்று அவரிடம் தவறாக சொன்ன காரணத்தினால்தான், அதற்காகவே பெரியார் அவர்கள் காங்கிரசால் ஈர்க்கப்பட்டார்.

சமூகநீதிதான் பெரியாருடைய முதல் குறிக்கோள். இறுதிவரையில் அதைத்தான் மய்யப்புள்ளியாக அவர்கள் கொண்டிருந்தார்கள். இதனை எல்லோரும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

பெரியார் மண், சமூகநீதி மண் என்று

ஏன் சொல்லுகிறோம்?

தமிழ்நாட்டை பெரியார் மண், சமூகநீதி மண் என்று ஏன் சொல்லுகிறோம்? சமூகநீதிக்காகவே தன்னுடைய வாழ்நாளில்  முக்கால் நூற்றாண்டு காலத்து உழைப்பைக் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த சமூகநீதிக்காகத்தான் நீதிக் கட்சி 1916-1917 இல் நம்முடைய  சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர் போன்றவர்களால் உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் உரிமை கோரக் கூடிய அளவிற்கு வந்தது.

நீதி வேண்டும் என்று எப்பொழுது கேட்பார்கள்? எங்கே அநீதி இருக்கிறதோ, அங்கேதான் நீதி வேண்டும் என்று கேட்பார்கள். அந்த நீதி, சமூகநீதி, கல்வி, வேலை வாய்ப்புகளில், 100-க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்கள், 100-க்கு 97 பேராக இருந்தவர்களுக்கு வாய்ப்பை மறுத்தார் கள். அப்படி  அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு மட்டுமல்ல, அவர்களைப் படிக்கக் கூடாதவர்களாக ஆக்கினார்கள்.

சூத்திரன் வேதங்கள் படிப்பதைக் கேட்டுவிட்டால், அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு அறிவை கொடுக் கக் கூடாது; கல்வியைக் கொடுக்கக் கூடாது.

படித்த சூத்திரன் - குளித்த குதிரை - மதம் பிடித்த யானை இம்மூன்றும் ஆபத்தானது என்று மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

வேதங்களைப் படிக்கக் கூடாது; படிப்பதைக்கூட சூத்திரர்கள் காதால் கேட்கக்கூடாது; தவறிப் போய் சூத்திரன் வேதங்கள் படிப்பதைக் கேட்டுவிட்டால், அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்; தவறிப் போய் யாராவது படித்துவிட்டால், அவனுடைய நாக்கை அறுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதனைக் கண்டித்த பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,

 ‘‘என்னை படிக்கக் கூடாது என்று சொல்லி, என்னை  இழிந்த ஜாதியனாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல், அதன் காரணமாக என்னை உடலுழைப்பு சமுதாயமாக ஆக்கிக்கொண்டு, எட்டி நில், தொடாதே! நீ தற்குறியாக இரு - கைநாட்டுப் பேர்வழியாக இரு என்று சொன்ன காரணத்தினால்தான், நான் இந்த மதத்தையே விட்டு வெளியேறவேண்டும்; இந்த மதம் எனக்குத் தேவையில்லை. இந்த மதம்தான் சாஸ்திரத்தை சொல்லுகிறது; சாஸ்திரம்தான் என்னைப் படிக்காமல் தடுக்கிறது'' என்று  சொல்லி, பவுத்த மதத்தைத் தழுவினார்.

அம்பேத்கர் அவர்கள் பொதுவாழ்விற்கு வருவதற்கு முன்பு, தென்னாட்டில், ஜோதிபாபூலே அவர்கள் மகாராட் டித்தில் அவர் செய்த பணி - இன்னொரு பக்கத்தில் மிகப் பெரிய அளவிற்கு நீதிக்கட்சி அதனை செய்ய ஆரம் பித்தது.

பார்ப்பனர்களின் 

‘‘சென்னை மாகாண சங்கம்''

நீதிக்கட்சிக்குப் போட்டியாக, அன்றைக்குப்  பார்ப்ப னர்கள் ‘‘சென்னை மாகாண சங்கம்'' என்ற ஒன்றை உற் பத்தி செய்தார்கள். அப்பொழுது பெரியார், நேரிடையாகக் காங்கிரசில் சேரவில்லை. இராஜகோபாலாச்சாரியார், சேலத்தில் நகர சபை தலைவராக இருக்கிறார். அவருடைய நட்பு ஏற்பட்டவுடன் சொன்னார், இந்தியா முழுவதும் கொண்டு வரலாம் என்றவுடன்,  அதை நம்பி தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்தார்.

அன்றைக்கு நீதிக்கட்சிக்கு செல்வாக்கு வருகிறது; எப்படி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இப்பொழுது செல்வாக்கு வருவதை அழித்துவிட்டு, வடபுலத்தில் இருந்து வரக்கூடிய கட்சிகள், தாங்கள் வருகிறோமோ இல் லையோ, தி.மு.. வரக்கூடாது என்று நினைக்கிறார்களே, அதேபோல, அன்றைய காலகட்டத்தில் நடந்தது.

எது உண்மை? எது போலி?

எது நல்ல நாணயம்? எது கள்ள நாணயம்?

காங்கிரசில் தலைவர்களாகப் பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அதனை மாற்றிக் காட்டுவதற்காக பார்ப்பனரல்லாத தலைவர்கள் தேவைப்பட்டார்கள்; அப்படி தேவைப்பட்டபொழுதுதான், பெரியாரை அவர்கள் பிடித்தார்கள்; திரு.வி..வைப் பிடித்தார்கள்; டாக்டர் வரதராஜூலு நாயுடுவைப் பிடித்தார்கள். இப்படி பார்ப்பனரல்லாத தலைவர்களைப் பிடித்து ‘‘சென்னை மாகாண சபை (மெட்ராஸ் பிரசிடென்சி அசோசேசியன்) என்று அதே காலகட்டத்தில், இதே வகுப்புரிமை - 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தீர்மானம் போட்டார்கள். அந்த சங்கம் இரண்டரை ஆண்டுகள் கூட இல்லை. ஆனால், நீதிக்கட்சியைத்தான் மக்கள் நம்பினார்கள்.

இதே நிலைதான், வருகின்ற காலத்திலும் தெளிவாக இருக்கிறது. எது உண்மை? எது போலி? எது நல்ல நாணயம்? எது கள்ள நாணயம்? என்று புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல், அன்றைக்கும் தமிழ் மக்களுக்கு உண்டு; இன்றைக்கும் தமிழ் மக்களுக்கு உண்டு; நாளைக்கும் தமிழ் மக்களுக்கு உண்டு என்பதற்கு அடையாளம்.

காங்கிரசில் தந்தை பெரியார் அவர்கள் சேர்ந்து, அதனை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அப்படி கொண்டு வந்த தீர்மானம், முதன் முறையாக திருநெல்வேலி மாநாட்டில் ஆரம்பித்து, இன்றைக்கு நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள், நம்முடைய சூர்யா சேவியர் போன்றவர்கள். பாராட்டுத் தகுந்த நூற்றாண்டு விழா.

சாமி.சிதம்பரனார் எழுதிய

 ‘‘தமிழர் தலைவர்'' நூல்!

சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதி ‘‘தமிழர் தலைவர்'' என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட நூல் பல லட்சக் கணக்கில் பிரதிகள் வெளிவந்திருக்கின்றன.  அதில் இருக்கக்கூடிய பக்கம் 76 இல் இருப்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

‘‘1920 இல் நடந்த திருநெல்வேலி மாநாட்டில் .வெ.ரா., (அப்பொழுதெல்லாம்பெரியார்' என்ற பட்டம் கிடையாது; 1938 இல்தான், ‘பெரியார்' என்ற பட்டத்தை மறைமலையடிகளாருடைய மகள் நீலாம்பிகை அம்மை யார், மீனாம்பாள் சிவராஜ் இன்னும் ஏராளமான மகளிர் சேர்ந்து சென்னையில் கொடுத்தனர் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கும்) வகுப்புவாரி தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியில் ஆறு ஓட்டுகள் அதிகமாகப் பெற்று நிறைவேற்றினார். மாநாட்டின் தலைவர் எஸ்.சீனிவாசய்யங்கார், இது பொதுநலத்துக் கேடு என்று அனுமதிக்காமல் மறுத்து விட்டார்.

1921 இல் தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் பிரேரேபித்தார். அதுசமயம் சி.ஆர். அவர்கள், கொள்கையாக வைத்துக் கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம் என்று தடுத்தார்.

1922 இல் திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் .வெ.ரா. பிரேரேபித்தார். அப்போது நடந்த வாதத் தில்தான் .வெ.ரா. கோபமடைந்து மனுதர்ம சாஸ்திரத்தையும், இராமாயணத்தையும் நெருப்பில் போட்டு கொளுத்த வேண்டும் என்றார். கலவரம் ஏற்பட்டு திரு. விஜயராக வாச்சாரியார் அடங்கி விட்டார்.

பிறகு 1923 இல் சேலம் மாகாண மாநாட்டில் பிரேரே பித்தார். கலகமாகும் போல் இருந்தது. ஜார்ஜ் ஜோசஃபும், டாக்டர் நாயுடுவும் நிறுத்தி விட்டார்கள்.

1924 இல் திருவண்ணாமலையில் .வெ.ரா. தலைமை யில் மாகாண மாநாடு என்றாலும் எஸ். சீனிவாசய்யங்கார் வகுப்புவாரித்  தீர்மானத்தைத் தோற்கடிக்க, சென்னை யிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டி வந்து தடுத்தார்; நின்றுபோய் விட்டது.

 1925 இல் திரு.வி.. தலைமையில் காஞ்சிபுரத்தில் .வெ.ரா. பிரேரேபித்தார். திரு.வி.. தீர்மானத்தை நிராகரித் தார். .வெ.ரா. கோபித்துக் கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார். இவ்வாறு .வெ.ரா. எப்போதும் பார்ப்பனரல்லாதார் உரிமையிலும், வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்துக்காகவும் போராடியே வந்திருக்கிறார்.'' இவ்வாறு அந்த நூலில் உள்ளது.

தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற ஒரு கமிட்டி!

நண்பர்களே, இங்கே ஒன்றை சொல்லவேண்டும். ஒரு மாநாடு நடத்தினால், அந்தக் காலத்தில் அரசியல் மாநாட் டில், தீர்மானங்களைப் பலரும் கொடுப்பார்கள். என் னென்ன தீர்மானம் அங்கே கொண்டு வரப்படவேண்டும். என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சொல்வார்கள். அதனைப் பரிசீலிப்பதற்கும், இந்தத் தீர்மானங்களை முன்மொழியலாம், இந்தத் தீர்மானங்களை முன்மொழியத் தேவையில்லை, ஏற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று நிராகரிப்பார்கள். அதற்காக ஒரு குழு அமைப்பார்கள். அந்தக் குழுவிற்குப் பெயர் 'சப்ஜங்ஸ்' கமிட்டி என்று பெயர். அதற்கு விஷயாலோச னைக் கமிட்டி என்று அந்தக் காலத்துத் தமிழில் பெயர்.

மாநாட்டில், வகுப்புரிமை தீர்மானத்தை பெரியார் கொடுக்கிறார். விஷயாலோசனைக் கமிட்டியினர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். 6 ஓட்டுகள் அதிகமானால் நிறை வேற்றலாம்; 6 ஓட்டுகள் குறைவானால், மைனாரிட்டி. எனவே, 6 ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்ததினால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றார்கள். நிறைவேற் றினால்தான், காங்கிரசுக்கும் பலத்தை உண்டாக்க முடியும்; சமூகநீதியையும் நிலைநாட்ட முடியும்.

சமூகநீதிதான் அடிப்படையாக இருக்கிறது

ஏனென்றால், அதே காலகட்டத்தில் நீதிக்கட்சியும் இன்னொரு பக்கத்தில் வெற்றி பெறுகிறது. எனவே, நீதிக் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு சமூகநீதிதான் அடிப்படையாக இருக்கிறது. அந்த சமூகநீதி தீர்மானத்தை நாம் நிறைவேற்றிவிட்டால், மக்கள் நம் பக்கம் இருப்பார்கள் என்ற எண்ணமும் உள்ளோட்டமாக நிச்சயமாக இருந் திருக்கலாம்.

அதன் காரணமாகத்தான், மேற்கண்ட தீர்மானத்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றினார்.

அந்த மாநாட்டிற்குத் தலைவர், எஸ்.சீனிவாச அய்யங் கார்; இவர் பிரபல அட்வகேட் ஜெனரலாக இருந்தார்; காங்கிரஸ் தலைவராக இருந்தார், பிறகு சுயராஜ்ஜிய கட்சிக்குப் போனார். அம்புஜம்மாள் அவர்களுடைய அப்பா இவர். மயிலாப்பூரில் இருந்த பிரபல வக்கீல் அவர்.

அந்தத் தீர்மானத்தைப் பொது நலத்திற்குக் கேடு என்று அனுமதிக்க மறுத்துவிட்டார்.

எப்படி 1925 இல் திரு.வி..வைத் தூண்டிவிட்டு, பெரியாருடைய தீர்மானம், விஷயாலோசனைக் கமிட்டி யினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட முதல் நாள் எடுக்கா மல், இரண்டாம் நாளும் எடுக்காமல் இருந்த நிலையில் மாநாடு முடியும் பொழுது, பெரியார் கோபப்பட்டு கேட்டு விட்டு, வெளியேறினார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதேதான் முதலிலும் நடந்திருக்கிறது. 1920 இல் என்ன நடந்ததோ, அதுதான் 1925 இலும் நடந்தது என்பது குறிப் பிடத்தகுந்தது.

- தொடரும்

Comments