செய்தியும், சிந்தனையும்....!

கிறிஸ்தவ சதி!'

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதால், பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென்மீது தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன: - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதையே கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம், எதைத்தான் செய்யாது?

எதில் வல்லரசு?

இந்தியாவை வல்லரசாக ஆக்கவே விரும்புகிறோம்: - ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்

எதில் வல்லரசு - மதவாதத்திலா - சமூகநீதியை ஒழித்துக் கட்டுவதிலா? பொருளாதார வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதிலா?

வசூல் வேட்டை!

அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்: - அறக்கட்டளை அறிவிப்பு.

வசூல் வேட்டை வெகு ஜோராகத்தான் நடக்கும். வி.எச்.பி. இதில் கில்லாடியாயிற்றே!

அண்டங்காக்கை போல...

10 ஆண்டில் .தி.மு.. ஆட்சி ஈட்டிய முதலீடு ரூ.18,186 கோடிதான்: - எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் தகவல்

அண்டத்தையே புரட்டி விட்டதுபோல - அண்டங் காக்கை போல பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. காரியத்தில் காட்டினால்தான் ஆட்சி!

கரோனாவா? கடவுளா?

திருத்தணி முருகன் கோவில் திருப்புகழ், திருப்படி திருவிழாவில் பஜனை, இசை நிகழ்ச்சிகள் ரத்து: - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கடவுளை விட கரோனாவுக்கு சக்தி அதிகம் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதே!

அரசின் கடமை!

உருமாறிய - கரோனாவுக்கு எதிராகவும், ‘கோ வேக்சின்' தடுப்பூசி செயல்படும்: - பயோ டெக் நிறுவனம் அறிவிப்பு.

ஆறுதலான தகவல். இத்தகு வேக்சின்களை இலவசமாக அனைத்து மக்களுக்கும் போட வேண்டியது அரசின் கடமை!

கரோனாவை விட கொடியது!

திருவேற்காட்டில் பூனைக்கு சீர் வரிசைகளுடன் வளைகாப்பு!

மூடநம்பிக்கை என்பது கரோனாவை விட கொடியது என்பது விளங்கவில்லையா?

தாயை அவமானப்படுத்த வேண்டாம்

டாஸ்மாக் பார்கள் திறப்பு - தாய் வீட்டுக்கு வந்தது போல உணர்கிறோம்;  மது பிரியர்கள் மகிழ்ச்சி! - ‘தினத்தந்தி' செய்தி!

தாயை இதைவிட எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

பிசினசில் இதெல்லாம் சகஜமப்பா!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் செல்ல போலிஆன்லைன்' அனுமதி வழங்கி பக்தர்களிடம் பணம் சுருட்டிய 3 பேர் கைது!

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சொன்னதுபோல கோவில்களே பிசினஸ் ஆகிவிட்ட பிறகு, இதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதுதான்!

Comments