மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் நேரத்தில் ‘எங்களது மனதின் குரலை கேட்க வேண்டும்’

டில்லி எல்லையில் ஓசை எழுப்பி விவசாயிகள் போராட்டம்

புதுடில்லி, டிச.28 எங்களது 'மனதின் குரலை' கேளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி யிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற் றுக்கிழமையன்று 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த வரிசையில் பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று (27.12.2020) ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள், கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடக்க நிலையில் இருந்த போது, கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது, கரோனா வைரசுக்கு எதிராக போராடிய சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் மணியோசை எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதே பாணியில், நேற்று (27.12.2020) பிரதமர் நரேந்திர மோடியின் 'மனதில் குரல்' (மன் கி பாத்) வானொலி உரை ஒலிபரப்பு செய்யப்படும்போது, நாட்டு மக்கள் அனை வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓசை எழுப்ப வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இதன்படி, டில்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று பாத் திரங்கள், தகரங்களைத் தட்டி ஓசை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

டில்லி சுற்றுவட்டார பகுதிகளில் தட்டு, தகரங்களைத் தட்டியபடி அவர்கள் ஊர் வலமாக சென்றனர். இதேபோல பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் ஓசை எழுப்பி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து அரியானா மாநில பாரதிய கிசான் கூட்டமைப்பின் தலைவர் குர்நாம் சிங் கூறும்போது, ''புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தொடர்ந்து ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது மனதின் குரலையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Comments