தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா?

திராவிடர் கழகத் தலைவர் கண்டனம்

தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசியிருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசும் நடவடிக்கையைத் தமிழகக் கல்வித் துறையே மேற்கொண்டதைவிட, அதிமுக அரசுக்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் மிகப்பெரிய அவமானம் வேறு இருக்க முடியுமா?

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்து, பிறகு மனிதனையே கடித்த கதைபோல, வெளியே உள்ள சில ஹிந்துத்துவக் காவிகள் விஷமத்துடன் திருவள்ளுவர் சிலை மீது காவி பூசி, தமிழக அரசின் காவல்துறையே அதனை எதிர்த்து வண்ணத்தை மாற்றி, வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போது அதே காவி சக்திகள் தமிழகக் கல்வித் துறைக்குள் ஊடுருவிவிட்டனவா?

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்குக் காரணமான அதிகாரிகளை அல்லது ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கைக் களையெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசரம். அவசியம்.

இன்றேல் தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி!

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

27.12.2020

சென்னை

Comments