வெல்லும் பகுத்தறிவு கொல்லும் துயரங்களை!

2020ஆம் ஆண்டு மிகப் பெரிய சோக இருளை மக்களின் வாழ்வில் தாண்டவமாடச் செய்து விட்டது.

ஆம், கரோனா (கோவிட் 19) என்னும் கொடு நோய் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது! வாழ்க்கை முறைக்கே வேறு வழியில்லாத புதிய போக்கைக் கொடுத்து விட்டது.

நாளை நிலை என்ன என்பதைவிட, இன்றைக்கே அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் என்ன என்ற அச்சம் அடித்தட்டு மக்களின் எண்ணத்தில் எரிநெருப்பாய்க் கனன்றது.

ஒரே ஒரு முறை ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்போடு அரசும் தன் கடையைக் கட்டிக் கொண்டு விட்டது.

வானிலை அறிக்கை போல ஒவ்வொரு நாளும் இன்றைக்கு இத்தனை ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு, இத்தனை எண்ணிக்கையில் கரோனாவால் மரணம் என்ற தகவல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமிருந்தும் அறிவிப்பாக வந்த வண்ணமே இருந்தன.

மருத்துவ உலகும் மருண்டது. இந்த மருந்தைக் கொடுக்கலாம் என முதல் நாள் அறிவிப்பு. ‘இல்லை இல்லை - அதனால் பயனில்லை' என்று மறுநாள் அறிவிப்பு.

என்ன செய்வது என்றே தெரியாமல் கலக்கத்திலும் அச்சத்திலும் உறைந்து போன ஒரு நிலை.

சிறு தொழில்கள், நடுத்தர தொழில்கள் - அதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி ஆட்சியின் 'புண்ணியத்தில்' நசிந்து போய்க்கிடந்த நிலையில், கரோனா தன் பங்குக்குப் போகிற போக்கில் கடும் உதையைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

அன்றாடம் கூலி வேலை செய்தே வயிற்றைக் கழுவ வேண்டிய நிலையில் இருந்த குடும்பங்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

எத்தனை ஆயிரம் குடும்பங்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே சென்று, தத்தம் ஊர்களுக்குச் சென்ற கொடுமையை நினைத்தால் நிலைகுலைய வேண்டியதுதான்.

பிள்ளைக் குட்டிகளையும், மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு நாள்தோறும், நாள்தோறும் நடந்து கொண்டே இருந்த மக்கள் பிரச்சினையில் மத்திய பிஜேபி அரசு நடந்து கொண்ட விதம் - மனம் என்ற ஒன்றே இல்லாத மனப்போக்கர்களா இவர்கள் என்ற வினாவை எழுப்பியது.

கொஞ்சக் காலம் கழித்து இரயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்குக் கட்டணம் உண்டு என்ற ஓர் அபாய அறிவிப்பு மக்கள் மத்தியில் ஆத்திர எரிமலையை உசுப்பி விட்டது.

பொருளாதாரத்தில் மூச்சு முட்டி நிற்கும் மாநில அரசுகள் 'எங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை அளிக்கக் கூடாதா? என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தன. பிச்சைக்காசு போல கொஞ்சம் தூக்கிப் போட்ட துயர சூழல்.

ஓரளவுக்குக் கரோனா கார்கோடனைக் கட்டுப்படுத்திய நிலையில், கரோனா புது உருவெடுத்து இதோ புறப்பட்டு விட்டது என்ற பூகம்பம்!

எல்லாம் கடவுள் செயல் என்றவர்கள் எங்கே போனார்கள்? இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணவோட்டம் கண்டிப்பாக ஏற்படத்தான் செய்யும்.

ஆனாலும் மத வியாபாரிகள் தங்கள் பக்தி வியாபாரத்தை விஞ்ஞானத்தைப் பயன்படுத்திப் புதுப்பித்துக் கொண்டேதான் இருந்தனர். இருக்கின்றனர். சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் - தேரோட்டம் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தை வளர்க்கும் அறிவு நாணயமற்ற தன்மை ஒரு பக்கத்தில் அரங்கேற்றமாகிக் கொண்டேதான் இருக்கிறது.

கடவுளுக்கே முகக் கவசம் போட்ட கேலிக் கூத்தை நாம் பார்க்கவில்லையா?

2021ஆம் ஆண்டாவது மக்களுக்கு நிம்மதி கொடுக்குமா? தொலைந்துபோன வாழ்வாதாரங்கள் புத்துயிர்ப் பெறுமா?

கல்வி ஒளி கடைத்தேறுமா? எதிர்கால நம்பிக்கை ஏற்படுத்தும் ஆண்டாக 2021 அமையுமா? அமைய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் -

மனிதனின் ஆற்றலும் பகுத்தறிவும், விஞ்ஞான அளவுகோலும் எந்த இடையூறையும் புரட்டித் தள்ளும் என்ற உறுதியோடு பயணிப்போம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!” என்பதை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள்.

வெல்லும் பகுத்தறிவு - கொல்லும் துயரங்களை!

Comments