அடிமை விலங்கை
அடித்து நொறுக்கி
அறிவை எமக்கு
அளித்தது யாரு?
ஆதி முதலே
ஆரியப் பேயை
ஆட்டும் மனிதராய்
ஆனது யாரு?
இத்தனை ஜாதி
இத்தனை கடவுள்
இருந்தும் எப்பயன்
இசைத்தது யாரு?
ஈவிரக்கம் இல்லா
ஈனப் பிறவியை
ஈ என அடித்த
ஈகியர் யாரு?
உயரத்தில் இருந்த
உச்சிக் குடுமியை
உதைத்து விரட்டிய
உத்தமர் யாரு?
ஊமையாய் ஆமையாய்
ஊழெனக் கிடந்தோர்க்கு
ஊக்கம் கொடுத்திட்ட
ஊழியர் யாரு?
எட்டாக் கல்வியை
எட்டிப் பறித்து
எங்கும் பாய்ச்சிய
எரிமலை யாரு?
'ஏண்டா சூத்திரா' என
ஏளனப் படுத்திய
ஏமாற்றுக் காரர்களை
ஏய்த்தது யாரு?
அய்யம் இல்லா
மானமும் அறிவும்
திராவிடர் தமக்கு
தந்தவர் யாரு?
ஒடுங்கி அடங்கி
வாழ்ந்த மக்களை
ஒற்றுமை யாக்கிய
அறிஞர் யாரு?
ஓடி உழைத்த
தாடி நரைத்த
ஓய்வே கொள்ளா
சிங்கம் யாரு?
ஈரோட்டுச் சிங்கம்
இனமானத் தங்கம்
அறிவுலக ஆசான்
அவர்தான் யாரு?
இன்றல்ல நேற்றல்ல
என்றும் தமிழர்க்கு
நிழல்தரும் ஆலமரம்
தந்தை பெரியாரு!!!
- கவிஞர் தூயவன்