என் வாழ்நாளில் நான் வாங்கிய பட்டங்கள் - விருதுகளைவிட, பெரியார் விருது பெரிய மருந்து!

 பெரியார் சொன்னது நடந்திருக்கிறது; புரட்சியாளர்கள் சொன்னது, அவர்களையே சாப்பிட்டு இருக்கிறது

சமூகநீதிக்காகப் போராடவேண்டிய காலகட்டத்தில் - நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருப்பதற்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்  தோழர் தா.பாண்டியன் நெகிழ்ச்சியுரை

சென்னை, டிச.27    தந்தை பெரியார் சொன்னது நடந்தி ருக்கிறது; புரட்சியாளர்கள் சொன்னது, அவர்களையே சாப்பிட்டு இருக்கிறது; என் வாழ்நாளில், சென்னை பல்கலைக் கழகம் கொடுத்த எம்.., பி.எல். பட்டத்தைவிட, அதற்குப் பிறகு எஸ்.டி.பி.அய். காயிதே மில்லத் விருது வழங்கினார்கள்; தமிழக அரசு, அம் பேத்கர் விருது வழங்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகநீதிக்காகப் போராடவேண்டிய கால கட்டத்தில், நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருப்பதற்கு, நீங்கள் வழங்கியபெரியார் விருது' பெரிய மருந்து என்றார்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன்  அவர்கள்.

தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான  கடந்த 24.12.2020 காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண் டியன் அவர்களுக்குபெரியார் விருது' வழங் கப்பட்டது.  அவ்விழாவில்,  அவர்  ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

பெரியார் ஏற்றிய நெருப்பு அணைந்து போகவிடாமல்...

தந்தை பெரியார் மறைந்த இந்த நாளில் அவர் ஏற்றிய நெருப்பு அணைந்து போக விடாமல், சாம்பல் படர்ந்திருந்த பிறகும், ஊதி விட்டு நெருப்பைப் பற்ற வைத்திருக்கின்ற ஆசிரியர் பெருமகன் சகோதரர் வீரமணி அவர்களே,

சமூகநீதிச் சிந்தனை உணர்வுகளை நீதிமன்றத்திற் குள்ளேயே இந்திய அரசியல் சட்டத்திற்கு விளக்கம் கொடுக்கின்ற முறையில், சமூகநீதி எல்லாத் துறையிலும் இருப்பதுபோல், நீதிமன்றத்திற்குள்ளும் நுழைத்த மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களே,

கவிஞர் பெருமகன் பூங்குன்றன் அவர்களே, மணி யம்மை அவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் வணக்கத்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில்தான் (டிசம்பர் 24) பலரை இயற்கை அழைத்துக் கொண்ட நாள். ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசுநாதரையும் கொலை களத் திற்கு இழுத்துக் கொண்டு போன நாள்.

தமிழகத்தில் மக்களின் அன்பைப் பெற்று திரையு லகத்தின்மூலம் முதலமைச்சராக ஆனவர், தான் நடித்த திரைப்படங்கள் எதிலும் சாமிக்கு பூஜை போடுவதாகக் காட்டாத எம்.ஜி.ஆர்.  மறைந்த நாள் இந்த நாள்.

சில சரித்திர சான்றுகளை மட்டும் சொல்கிறேன்

நான் சில சரித்திர சான்றுகளை மட்டும் சொல்லு கிறேன்.

அம்பேத்கர், அவரோடு 500 பேர் நாடாளு மன்றத்திலே, அரசியல் நிர்ணய சபையில் கூடி, விவாதத்திற்குமேல் விவாதம் நடத்தி, நிறைவேற்றப் பட்டதுதான் இந்திய அரசியல் சட்டம்.

அது 50 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு தான், இந்தியா குடியரசு ஆகிறது. குடியரசு ஆவதற்கு முன்பே, குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்கிய பெருமை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஜவகர்லால் நேரு, காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோருக்கு உரித் தானது.

தாயில்லாமலே பிறந்த அந்தக் குழந்தை அரசியல் சட்டம். ஆனாலும், அறிஞர் பெருமக்களால், உலகச் சட்டங்கள் அனைத்தையும் தொகுத்து, அதிலிருந்த முத்துகளை மட்டும் எடுத்து கோத்து, பிறகு அது வருங்காலத்தில் எங்காவது போய்விடக் கூடாது என்பதால், இதன் நோக்கம் என்ன? என்பதை பிரியாம்பிள் என்ற பகுதியில் போட்டு, அடிப்படையில், திருத்தக்கூடாத பகுதி எது? திருத்தக் கூடியது எது? என்று திருத்துவதற்கும் இடம் கொடுத்து,

அம்பேத்கரின் தொகுப்புரையை

பாடத் திட்டமாக வைத்திருக்கவேண்டும்!

அந்த அரசியல் நிர்ணய சபையில், கடைசியாக, இரவு 10 மணிமுதல் 11.30 மணிவரை அம்பேத்கர் தொகுப்புரை வழங்கியிருக்கிறார்.

அம்பேத்கர் வழங்கிய தொகுப்புரையை, உயர் நிலைப்பள்ளியிலும், கல்லூரியிலும் கட்டாயப் பாட மாக வைத்திருக்கவேண்டும். வாய்ப்புக்கேடாக, இன்று வரையில் அது செய்யப்படவில்லை. பாடப் புத்தகங் களில் அதனை பாடமாக வைக்கவேண்டும்.

அதேபோன்று, தந்தை பெரியார் எழுதிய கட்டுரை களை,  பாடப் புத்தகத்தில் வைக்கவில்லை என்றாலும், நீங்கள் குறைந்தபட்சம் விருப்பப் பாடமாகவாவது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வைத்துப் படியுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும்.

பெரியார் அவர்கள் மறைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன. நான் மீண்டும் நேற்றும், இன்றும் எனக்குக் கொடுத்த பிரதியை வைத்துப் புரட்டிப் புரட்டி படித்துக் கொண்டே இருந்தேன்.

இந்த இயக்கத்தின்மூலம் வாழலாம் என்று நினைக்காத இளைஞர்களே, வாருங்கள் என்றார்!

1922 இல் தந்தை பெரியார் நடத்திய மகாநாடு - நான் பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு - முதல் மகாநாடு நடத்துகிறார்கள்.

அதில், பெண்களுக்கும் விடுதலை வேண்டும்; இளைஞர்கள் பொதுவாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்ள வருகிறீர்களா? உன்னையும், உன் குடும்பத் தையும் பாதுகாத்துக் கொள்ள, என்ன தொழில் செய்து வருவாய் பெறவேண்டுமோ, அதனைப் பெற வேண்டும்.

இந்த இயக்கத்தில் சேர்ந்து, இதன்மூலம் நீ வாழலாம் என்று நினைக்காத இளைஞர்களே, வாருங்கள் என்று, 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம்.

பிறகு, 1924 ஆம் ஆண்டு மாநாட்டில் தீர்மானம்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

பெரியாரிடம் கேட்ட கேள்வி!

1926 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற மாநாடுகளில் சிங்காரவேலர் பங்கெடுத்துக் கொள்கிறார். அதேபோல, பச்சையப்பன் கல்லூரியில் நடந்த மகளிர் மாநாடு. அதில் பங்கேற்றுவிட்டு, சிங்காரவேலர் ஒரு குறிப்பினை அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார்.

‘‘நான் இரண்டு நாள்களும் இந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்றுக் கொண்டேன். முதலில் சிறப்பாக நான் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி பேசினேன்.

இப்பொழுது அந்த மாநாட்டில் அந்தப் பெண்கள் பேசியதை நினைவுப்படுத்தி பார்க்கிறேன். இவர்கள் அரசியலில், தேர்தலில் பங்கேற்று ஆட்சி நடத்தத் தொடங்கினால், 50 ஆண்டுகளுக்கு இவர்களை எவனாலும் நீக்க முடியாது'' என்று சொல்லிவிட்டு, பெரியாருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நீங்களும் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண் டால்தானே, இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியும் என்று சொன்னார்.

சிங்காரவேலரின் கேள்விக்குத்

தந்தைபெரியாரின் பதில்!

அதற்குப் பெரியார் இரண்டே வரிகளில் பதில் சொல்லியிருக்கிறார்.

‘‘தேர்தல் என்று இறங்கிவிட்டால், உடனே தேங்காய் உடைக்கச் சொல்லுவான். திருநீறு பூசச் சொல்லுவான். பிறகு வீட்டுக்கு வீடு காதில் வந்து கேட்பான், எந்த ஜாதி? என்று. அத்தனைக்கும் அடிபணிந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, எனக்குத் தேர்தல் என்பது புறக்கணிப்பல்ல. நான் அதுவல்லாமலே வெற்றி பெற்று இருக்கிறேன்.

என்னை அந்தக் காலத்தில் இருந்த நீதிக்கட்சியினர், பிறகு கவர்னருக்கு ஆலோசகராக இருந்தவர்கள், ஈரோட்டிற்கே வந்து, கட்டாயம் நாங்கள் கொடுக்கின்ற மேலவைப் பதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொன்னபொழுது,

‘‘மன்னிக்கவேண்டும், நான் ஏற்று இருக்கிற போராட்டத்திற்கு அது ஒத்து வராது'' என்று சொன்னார்.

இன்றைக்குக் கட்சித் தொடங்குவதற்கு முன்பே நான்தான் முதலமைச்சர் என்று அறிவிக்கிறார்.

அவர்கள் சொத்துக் கணக்கு என்ன? வரி கட்டு கிறார்களா? என்றெல்லாம் தெரியாது.

உழைத்து சம்பாதித்த- பாரம்பரிய சொத்துக்களை வைத்துத்தான் பொதுமக்களுக்கு சேவை செய்தார்!

ஆனால், பெரியார் தொடங்கிய இயக்கத்திற்கு எல்லாம், அவர் குடும்பச் சொத்து, அவர் உழைத்து சம்பாதித்த பாரம்பரிய சொத்துக்களை வைத்துத்தான் பொதுமக்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்.

சேவை செய்வதாக, அரசியலில் ஈடுபட்டு கோடீஸ் வரரானவர் அல்ல பெரியார். மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக இன்றும், நாளைக்கும் அமையவேண்டும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுதே 1948 ஆம் ஆண்டிலேயே பொதுவுடைமை அனுதாபியாக மாணவர் சங்கத்திலே சேர்ந்துவிட்டேன். பிறகு 1953 ஆம் ஆண்டில்தான் கட்சியின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன், காரைக்குடியில். பிறகு 1953 ஆம் ஆண்டிலிருந்துதான் ஜீவாவை தெரியும்.

நான் அப்பொழுது திரும்பத் திரும்ப ஜீவாவிடம் கேட்டேன்; சிங்காரவேலர் - ஜீவா  - பெரியார் மூவரும் சேர்ந்து, பகுத்தறிவு சமதர்ம இயக்கம் தொடங்கி, தந்தை பெரியார் அதற்குத் தலைவராக இருந்தார். அதில் ஏன் பிளவு ஏற்பட்டது? உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டேன்.

இந்தியாவிற்குள்ளே ஆரியம் புகுந்தது - மார்க்சியவாதிகளுக்குத் தெரியாது

ஒன்றே ஒன்றுதான், மார்க்சியத்தை மேல்நாட்டில், ஆங்கிலத்தில் படித்துவிட்டு, இந்தியாவிற்கு வந்து தலைமை தாங்கியவர்களுக்கு, மார்க்சியம் நன்கு தெரியும். இந்தியாவிற்குள்ளே ஆரியம் புகுந்தது தெரியாது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தவர்கள் - பெரியவர் மோகன் குமாரமங்கலத்திடம்தான் நான் ஜூனியராக இருந்தேன். தந்தை பெரியாரை ஒருமுறை மருத்துவமனையில் சென்று சந்தித்தோம்.

அப்பொழுது பெரியார் அவர்கள், ‘‘வாப்பா, சுப்ப ராயன் பிள்ளை அல்லவா! மெத்தையில் உட்கார்'' என்று உட்கார வைத்தார்.

அப்பொழுதுதான் எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர்.இராதா வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பெரியார், ‘‘ஏம்பா, இவ்வளவும் சொல்கிறீர்கள்; நாங்கள் சொல்வதில் நீங்கள் எதிலே மாறுபடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

பிறகு சொந்த முறையில் பலவற்றை விசாரித்தார். சுப்பராயன் மந்திரியாக இருந்தது, தானும் அதற்கு ஆதரவு கொடுத்தது; பிறகு 1920 இல் இந்த வகுப்பு வாரி முறையில் ஒரு சுழற்சி முறையில், பிராமணரல் லாதாருக்கும் இதில் ஒரு ஓரத்தில் இடம் உண்டு என்பதில், அதாவது 100 பேராக இருக்கின்றவர்களில், 90 பேராக இருக்கக் கூடிய மக்களுக்கு 3, 4 சதவிகிதம் புகுந்து வருவதற்கு. அதற்கும் என்ன வேலை கொடுத் தார்கள்; அரசு ஊழியர்கள் கடைநிலையில் எந்த மட்டமோ, அந்தப் பணியில்தான் அமர்த்தினார்கள்.

இங்கே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அய்யா அரிபரந்தாமன் வந்திருக்கிறார். தலைமை நீதிபதியாக இருந்தவர்களின் பெயர்களையெல்லாம், உயர்நீதிமன்றத்தில் பெயர்ப் பட்டியலில் போடப்பட்டு இருக்கும். வெள்ளையர்கள் காலத்தில் பார்த்தால், அவ்வளவு பேரும் வெள்ளையர்கள். அதிலே ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்தவர் இருப்பார். வேறு யாருடைய பெயரும் இருக்காது.

அரசியல் சட்டத்தையே திருத்த வைத்த

ஓர் அதிசய மனிதர்தான் தந்தை பெரியார்

1947 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான், 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, இட ஒதுக்கீடு என்று உத்தரவாதம் செய்யப்பட்டு, அதை நீதிமன்றம் செல்லாது என்று - இந்த அரசியல் சட்டம் எழுதுவதில் ஒரு உறுப்பினராக இருந்த வழக்குரைஞர் வாதாடி, இந்தக் காரியங்கள் எல்லாம் நடைபெற்றது. ஒரு திருமணமும் செல்லாது என்றும், ஏழு முறை சுற்றி வரவில்லை; நான்கு சுற்றோடு நின்றுவிட்டாய், ஆகையால், அந்தத் திருமணம் செல்லாது என்று, குழந்தைகள் பிறந்த பிறகு அறிவித்த ஒரு சட்டம் - இதெல்லாம் நீதிமன்றத்தின் பெயரால் வந்தபொழுது, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ திராவிடர் கழகத்திற்கென்று, அதன் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓர் அங்கத்தினர்கூட இல்லை.

வெறும் தடியை கையில் எடுத்துக்கொண்டு, தெருத் தெருவாக தமிழ் மக்களைத் திரட்டி, அரசியல் சட்டத் தையே திருத்த வைத்த ஓர் அதிசய மனிதர்தான் தந்தை பெரியார்.

எனவே, சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து, நாடா ளுமன்றத்திற்குள்ளே நுழைந்து செய்வேன் என்று சொன்னார்களோ, அவர்கள் அத்தனை பேரும் அதனை செய்யாமல், வீழ்ந்தார்கள்.

நாடாளுமன்றத்திற்குள் நுழையாமலேயே, இந்த நாட்டை தன் பேச்சு வன்மையால், அதுவும் மேடைத் தமிழ் என்று ஒன்று வந்துவிட்டதல்லவா, அழகிய தமிழாகப் பேசவேண்டும் என்று! அதையும் விட்டு விட்டு, மகனோடு எப்படி தந்தை பேசுவாரோ, அதே பாணியில் பேசினார்.

முழு நேர ஊழியனாக ஆகவேண்டும் என்று எனக்குக் கட்டளை!

என்னை, முதன்முதலாக ஒரு கூட்டத்திற்கு சகோ தரர் அழைத்து வந்தார். அப்போதுதான் எங்கள் கட்சியிலிருந்து, நீ வக்கீல் வேலையை விட்டு விட வேண்டும்; முழு நேர ஊழியனாக ஆகவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

அதனை ரகசியமாக இவருடைய காதுக்குள் சொன்னேன். எங்கள் கட்சியில் இப்படி தீர்மானம் போட்டு விட்டார்கள்; இருந்த கட்டுக்களை எல்லாம் பிரித்துப் போட்டுவிட்டேன். வக்கீல் அணியும் கவுன் இருந்தாலும், பழையபடி அந்த நினைவு வரும் என்று அதையும் கொடுத்துவிட்டேன். இப்பொழுது முழு நேர கட்சி ஊழியனாகிவிட்டேன் என்றேன்.

என்னுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்; தந்தை பெரியார் அன்றைக்கு அவருடைய அறையில் தங்கியிருந்தார்.

ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, ஒரு நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘வாப்பா, என்றார் பெரியார்.''

இவர் சொன்னார், ‘‘வக்கீல் வேலையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்; காலேஜ் வாத்தியார் வேலையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்; முழு நேர கட்சி ஊழியராக ஆகிவிட்டாராம்'' என்றார்.

முழு நேர ஊழியரா?

முழு நேரம் எவன் கிழிக்கிறான்!

பெரியார், அந்தக் கண்ணாடியை பக்கத்தில் வைத்து விட்டு, என்னை ஏறிட்டுப் பார்த்து, ‘‘நீ அறிவாளி என்று அல்லவா நினைத்தேன். உனக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா! அவர்களை யார் காப்பாற்றுவார்கள்; நீயும் ஜீவானந்தாம் மாதிரி ஏமாந்துவிட்டாயா? என்ன சொன்ன, முழு நேர ஊழியரா? முழு நேரம் எவன் கிழிக்கிறான்'' என்றார்.

என் தந்தை என்ன சொல்லுவாரோ, அதேபோல் என்னைப் பற்றி அறியாத தந்தை பெரியார் சொன்னார். இவருக்கு என்ன என்மீது அக்கறை, என் குழந்தைபற்றி எவ்வளவு அக்கறை?

வக்கீல் பணியை விடாமல், மோகன்குமாரமங்கலம் போன்று இருந்துகொண்டு, 6 மணிக்கு முகத்தைக் கழுவிக் கொண்டு, 7 மணிக்குப் பவுடர் போட்டுக் கொண்டு, ஒலிபெருக்கியின் முன் பேசுவதுதானே அரசியல். நீ என்னமோ முழு நேரமும் கிழிக்கப் போறதாகச் சொல்றியே!

நீதித்துறையில் இருந்து கொண்டு

நீ போராடலாமே!

என்ன தமிழ்!

எத்தனை அன்பு

இவன் யார்? எங்கு பிறந்தவன் என்று தெரியாதவர். எவ்வாறு அவரால் இவ்வளவு கவலையோடு, ‘‘நீதித்துறையில் இருந்து கொண்டு நீ போராடலாம்; அங்குதான் அவர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது; அதனை ஏன் நீ விட்டுவிட்டாய்'' என்று கேட்கிறார்.

இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பொழுது காங் கிரஸ் தலைவராக இருந்த .வெ.கி.சம்பத் அவர்களை சந்தித்தேன். அவரும், அதே வார்த்தைகளைச் சொன்னார்.

ஆனால், நான் இப்பொழுது முழு நேர ஊழியனாக ஆகிவிட்டதாலோ, பட்டபாடுகளுக்காகவோ கவ லைப்படவில்லை. அந்தப் புதிய பாதை இருந்த புத்தகங்களை எடுத்துப் படிக்க வைத்த அந்த நிகழ்ச்சி, 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தந்தை பெரியாரைத் தெரிந்தது.

தந்தை பெரியார் எழுதியதை 40 ஆண்டுகளாகப் படிக்காமல் இருந்தது மிகப்பெரிய கேடு!

நான் அவ்வளவு வேகமாக, மார்க்சையும், ஏங்கல் சையும் படித்தவன், தமிழ்நாட்டில் இருந்த ஒரு மாபெரும் அறிஞர் எழுதியதை, 40 ஆண்டுகளாகப் படிக்காமல் இருந்தது எவ்வளவு கேடோ, அதேபோன்று தமிழகமும் இன்றைக்கும் படிக்காமலே இருக்கிறது.

பெரியார் எழுதிய ஒரு கட்டுரையில், எல்லோரும் பேசும்பொழுது, என்னை ஏசுகிறார்கள்; நீ மேடைக்கு வா! என்னோடு பேசு என்று குடிஅரசு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

1922 ஆம் ஆண்டுமுதல், கடைசி மாநாட்டு வரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு புத்தகமாக வெளிவந்ததை நாகநாதன் கொடுத்தார். அந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்பொழுது ஏற்படும் ஆச்சரியம் என்னவென்றால்,

நெல்லை மாவட்டத்தில், ஆசிரமம் அமைக்கிறார் .வெ.சு.அய்யர். அதற்கு நிதி காப்பாளராக இருந்து, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்து 500 ரூபாய் முதலில் கொடுத்தவர் தந்தை பெரியார்.

பலமுறை தந்தை பெரியாரை, தமிழ்நாடு காங் கிரசின் தலைவராக ஆகச் சொல்லுகிறார்கள். சீனிவாச அய்யங்கார் மற்றவர்கள் எல்லோரும் கூடி, அவரைத் தலைவராக வரவிடாமல், பொருட்காப்பாளர், பிரச் சாரத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

நாகை முருகேசன், ஜீவா போன்றவர்களிடம் கேள்வி கேட்டேன்; பதில் இல்லை!

தேசிய இயக்கத்திலேயே, மகாத்மா காந்தியடிகள், மதுவிலக்கு என்றால், நாகம்மையாரிடம் வந்துதான் அந்தப் பொறுப்பைக் கொடுக்கிறார்.

வைக்கத்தில் மறியல் என்று சொன்னால், பெரி யாரிடம்தான் கொடுக்கிறார்.

அப்படியிருந்த அவர், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேற நேர்ந்தது. எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம், நாகை முருகேசன், ஜீவா போன்றவர்களிடம் துருவித் துருவி கேட்டேன், கட்சியின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர். மீனவர்களின் மத்தியில் பிறந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். கான்பூர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, சொற்பொழிவாற்றியதை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். எப்பொழுது? 2019 ஆம் ஆண்டு. அதுவரையில்  புத்தகமாக வெளியிடவில்லை. முதல் மாநாட்டிற்கே தலைமை வகித்தவர் சிங்கார வேலர். ஆனால்,  கட்சி அதிகமாபூர்வமாக தமிழ்நாட்டில் தொடங்கப்படுவது 1933 ஆம் ஆண்டு. கான்பூரில் தொடங்கப்பட்டது 1925.

1925 ஆம் ஆண்டு நடைபெற்ற நிறுவன மாநாட் டிற்குத் தலைமை தாங்கியவர், அவர் ஆற்றிய சொற்பொழிவு, 1933 ஆம் ஆண்டு இங்கே நிறுவப் படுகிறது - எஸ்.வி.காட்டேபன், .சுப்பையா பாண்டிச் சேரி தலைவர், ரஷ்யா மாணிக்கம் என்று ஒரு ஏழு பேர் சேருகிறார்கள். ஆனால், நிறுவன மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய சிங்காரவேலர், விவேகானந்தர் சிலை இருக்கும் பகுதிக்கு அருகில் குடியிருக்கிறார். அவர் அந்தக் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சேர்க்கப்படவில்லை!

தமிழ்நாட்டில் கட்சி நிறுவப்படுகின்றபொழுது, பி.சுந்தரய்யா, அவர் கலெக்டருடைய மகன். சட்டக் கல்லூரியில் படிக்கிறார். அப்பொழுது ஒரே சட்டக் கல்லூரிதான். அதில் படித்துக் கொண்டிருந்த பி.சுந் தரய்யா, செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். .சுப்பையா, ரஷ்யா மாணிக்கம் போன்றவர்கள் உறுப் பினராகிறார்கள். ஆனால், சிங்காரவேலர் சேர்க்கப் படவில்லை.

இது ஏன்? என்று கேட்ட கேள்விக்கும், எனக்கு 1960 வரையில் பதில் கிடைக்கவில்லை; இன்றும் கிடைக்க வில்லை.

ஆனால், சிங்காரவேலர், பெரியார் நடத்துகிற மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்கேற்று இருக்கிறார். பெரியாரைப்பற்றி எழுதிக்கொண்ட இருக்கிறார். குடிஅரசுப் பத்திரிகையின்மூலமாகத்தான் சிங்கார வேலர் எழுதுகின்ற கட்டுரைகள், விஞ்ஞான கட்டு ரைகள் எல்லாம் மொழி பெயர்க்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில்

மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள்

சோவியத் யூனியனுக்குச் சென்று பார்த்துவிட்ட பிறகுதான், கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து, பெரியாருடைய சகோதரர் வெளியிடுகிறார். பெரியாருக்கும் அதில் பங்கு உண்டு.

அன்றைக்கு இருந்த அரசாங்கம், பெரியாருடைய அண்ணனுடைய அச்சகத்தைப் பறிமுதல் செய்து, தண்டனை கொடுக்கிறது.

பகத்சிங், நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்று எழுதுகிறார். அதனை, ஜீவா மொழி பெயர்க்கிறார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப்படுகிறார்.

அதைக் கண்டித்து, குடிஅரசு பத்திரிகையிலும், விடுதலையிலும் பெரியார் எழுதுகிறார்.

இவை எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்ததே! ஆக, சிறந்த சிந்தனையாளர்களையும், செயல்வீரர்களையும் அது இழந்து, ஏதோ பொது வுடைமை, தொழிற்சங்கத்தை வைத்து நடத்தி னால், அதன்மூலம் புரட்சி வந்துவிடும் என்று, எதிர் பார்த்ததற்கு நேர்மாறாக, தொழிற்சங்கங்களே ஜாதியின் பெயரால் வந்துவிட்டது.

நெய்வேலியில், 72 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அந்த 72 தொழிற்சங்கங்களும் அந்தந்த ஜாதிக்குரிய சங்கங்கள். அதிலே பெரிய ஜாதி என்பதால், வன் னியர்கள்தான் ஆதிக்கம். அதற்கடுத்து, தாழ்த்தப் பட்டோர் பெயரிலாவது ஒரு சங்கம் இருந்தால் பரவாயில்லை. அதிலேயும் நான்கு சங்கம்.

பெரியார் சொன்னது நடந்திருக்கிறது; புரட்சியாளர்கள் சொன்னது,

அவர்களையே சாப்பிட்டு இருக்கிறது

எனவே, பெரியார் சொன்னது நடந்திருக்கிறது; புரட்சியாளர்கள் சொன்னது, அவர்களையே சாப்பிட்டு இருக்கிறது.

இவற்றையெல்லாம் நினைவுபடுத்தி, நடுநிலைமை யிலிருந்து கட்டாயம் படிக்கவேண்டும்.

பெரியார் பொதுவுடைமைவாதிகளைக் கண்டித்து எழுதியிருக்கிறார். பொதுவுடைமையை மறுத்து, சோவியத் யூனியனைக் கண்டித்து ஒருக்காலும் ஒரு சொல்லும் சொன்னதில்லை.

அதுதான் பெரியாருக்கும் - கம்யூனிஸ்டு இயக் கத்தை நடத்திய சில தலைவர்களுக்கும் உள்ள வித்தி யாசம்.

நான் வாங்கிய பட்டங்கள் - விருதுகளைவிட, பெரியார் விருது மாபெரும் மருந்து!

நடுநிலைமையிலிருந்து உண்மையை ஒப்புக் கொண்டு சொல்லவேண்டும். இப்பொழுதாவது ஒப்புக் கொள்ளவேண்டும் எனக் கேட்டு, ஒப்புக்கொண்டவன் பேசுகிறேன். அதன் அடையாளமாக பெரியார் விரு தினை வழங்கிய பெருமக்களுக்கு, என் வாழ்நாளில், சென்னை பல்கலைக் கழகம் கொடுத்த எம்.., பி.எல். பட்டத்தைவிட, அதற்குப் பிறகு எஸ்.டி.பி.அய். காயிதே மில்லத் விருது வழங்கினார்கள்; தமிழக அரசு, அம்பேத்கர் விருது வழங்கியிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகநீதிக்காகப் போராடவேண்டிய காலகட்டத்தில், நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருப்பதற்கு, நீங்கள் வழங்கிய விருது பெரிய மருந்து என்று கூறி, நன்றியோடு முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

Comments