தமிழர் தலைவர் வரையறுத்துத் தரும் செயல்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் செயல்படுத்திக் காட்டும்!

எழுச்சித் தமிழருக்குப் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதும், ரூ.ஒரு லட்சம் அளிப்பும்!

திருமாவளவன் தனி மனிதரல்ல - இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தமிழர் தலைவர் காட்டியுள்ளார்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஏற்புரை

சென்னை, டிச.25  திருமாவளவன் தனி மனிதரல்ல - இதோ நாங்கள் இருக்கிறோம் என்று திராவிடர் கழகம் அறி வித்துள்ளது என்பதற்கு அடையாளம்தான் இந்த விருது; தமிழர் தலைவர் வரையறுத்துத் தரும் செயல் திட்டங்களின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் செயல்படும் என்றார்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

24.12.2020 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு நாளில், ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது'' மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அன்பார்ந்த பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா சார்பில், சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவை அமெரிக்காவிலிருந்தபடியே, தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று உரையாற்றி சிறப்பித்திருக்கின்ற பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,

காணொலியின்மூலம் அமெரிக்காவிலிருந்தே இந்த விருதினை வழங்கி சிறப்பித்து, நமக்குப் பெருமை சேர்த் திருக்கின்ற டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களே,

அவர்களின் சார்பில், இங்கே நேரில் அந்த விருதினை, பண முடிப்பை நமக்கு வழங்கி சிறப்பித்திருக்கின்ற டாக்டர் மீனாம்பாள் அவர்களே,

நன்றியுரை ஆற்றவிருக்கின்ற பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று நம்மை வாழ்த்தி சிறப்பித் திருக்கிற, பெருமை சேர்த்திருக்கிற, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவரும், சமூகநீதியின் காவலருமான  தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

திரளாகக் கூடியிருக்கிற தமிழ்ச் சொந்தங்களே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றியை, லட்சோப லட்ச விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் முதலில் உரித்தாக்குகிறேன்

ஆசிரியர் அய்யா அவர்களின் பெயரில் எனக்கு விருது வழங்கி, என்னுடைய பொதுவாழ்விற்கு ஓர் அங்கீகாரத்தை அளித்திருக்கின்ற பெரியார் பன்னாட்டமைப்பிற்கும், அய்யா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை, லட்சோப லட்ச விடுதலை சிறுத்தைகளின் சார்பில் முதலில் உரித்தாக்குகிறேன்.

நான் பெற்ற முதல் விருது, ‘‘அம்பேத்கர்'' பெயரிலான தமிழக அரசு விருது. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது எனக்கு வழங்கினார். அதற்குப் பிறகு நான் பெற்றிருக்கிற விருது, நம்முடைய தமிழர் தலைவரின் பெயரிலான இந்த விருது.

இது ஒரு மகத்தான அங்கீகாரம்; தனிப்பட்ட முறையில், எனக்கான அங்கீகாரமாக நான் இதனைக் கருதவில்லை. சமூகநீதிக்காகப் போராடக் கூடிய விடுதலை சிறுத்தைகள் என்கிற ஒரு பேரியக்கத்திற்கான அங்கீகாரமாக இவ்விரு தினை நான் ஏற்று,  உளமார்ந்த நன்றியை, மனமார்ந்த நன்றியை நான் மீண்டும் ஒருமுறை அய்யா அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.

உரிய காலத்தில் இந்த விருதினை

நாம் பெற்றிருக்கிறோம்!

திருமாவளவனைத் தனிமைப்படுத்திவிடவேண்டும்; விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேர்தல் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கிவிடவேண்டும் என்றெல்லாம் திட்டம் தீட்டி, சதிக் கும்பல் பல்வேறு முயற்சிகளை, பகீரத முயற்சி களை மேற்கொண்டு வருகின்ற சூழலில், திருமாவளவனை ஒருபோதும் தனிமைப்படுத்திவிட முடியாது; விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒதுக்கிவிட முடியாது; இதோ நாங்கள் இருக்கிறோம் என்று, உலகிற்கு உணர்த்தக் கூடிய வகையில், அந்த சதிகாரக் கும்பலின் புத்தியில் உரைக்கும்படி உணர்த் தக்கூடிய வகையில், உரிய காலத்தில் இந்த விருதினை, அய்யா அவர்களின்மூலம் நாம் பெற்றிருக்கிறோம்.

திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகளுக்கு துணை இருக்கும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்

நமக்கு இந்த விருதினை வழங்கி, ஒரு பாதுகாப்பு அரணாக திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகளுக்குத் துணை இருக்கும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார், தமிழர் தலைவர் அவர்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் இயக்கம். திராவிடர் கழகம் அய்யா பெரியார் அவர்களால் வரையறுக் கப்பட்ட கொள்கைகளை, முன்மொழிந்த கொள்கைகளை, பெரியார் அவர்கள் பரப்பிய அந்தக் கொள்கைகளை உலகம் தழுவிய அளவில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது, தொடர்ந்து அதனை செய்து கொண்டிருக்கிறது, எனினும் இன்னும் அதுபோன்ற பல இயக்கங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தேவையை இட்டு நிரப்பக் கூடிய, களப்பணிகளை ஆற்றுகிற ஒரு பேரியக்கமாகத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கட்டமைத்து இயக்கி வருகிறோம்.

அதனால்தான், தமிழர் தலைவர் அவர்கள் மேடைகளில் பேசுகின்றபொழுது, திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இதுவரையில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்தன; திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் இணைத்து, மூன்று குழல் துப்பாக்கியாக  இது மாறியிருக்கிறது; நாங்கள் இப்பொழுது மூன்று குழல் துப்பாக்கியாக இருக்கிறோம் என்று பலமுறை மனமுவந்து பெருமை பொங்க பேசியிருக்கிறார்.

அது நமக்கு மிகப்பெரிய ஓர் அங்கீகாரம் என்பதை மீண்டும் ஒருமுறை நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும்கூட, திராவிடர் கழகம் முன்மொழியக் கூடிய கொள்கைகளைக் கொஞ்சமும் பிசகாமல், அதிலிருந்து நழுவாமல், வழுவாமல் தொடர்ந்து உறுதியாகப் பேசிக் கொண்டிருக்கிறது; அய்யா அவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

 திராவிடர் கழகத்தின் கருத்துகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் இயக்கம் விடுதலை சிறுத்தைகள்

தேர்தல் அரசியலில் அதனால் எந்தப் பாதிப்பு ஏற்பட் டாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், திராவிடர் கழகத்தின் கருத்துகளைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் இயக்கமாகவே விடுதலை சிறுத்தைகளை நாம் முன்னெடுத்துச் செல்லு கிறோம். ஏனென்றால், சமூகநீதி, அதுதான் இன்றைய மாமருந்து; சமத்துவத்திற்கான ஒரே தேவை.

அய்யா பெரியார் அவர்களும் சரி, புரட்சியாளர் அம் பேத்கர் அவர்களும் சரி, சமத்துவத்தை வென்றெடுப்பதற்காக தங்களுடைய வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்கள்.

அதற்கு ஒரே வழிமுறை சமூகநீதிதான்; சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான ஒரு வழிமுறை சமூகநீதிதான். ஆகவே, அந்த சமூகநீதி என்ற கருத்தியலை இன்றைக்குக் கட்டிக் காப்பாற்றி, அதற்காகத் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடி வருகிற, ஒரு மகத்தான போராளி அய்யா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

47 ஆண்டுகளாக இந்த இயக்கத்தைக்

கட்டிக் காப்பாற்றி வருகிறார் தமிழர் தலைவர்

1973 ஆம் ஆண்டிலே  நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார், காலமாகிவிட்டார். அதற்குப் பிறகு இந்த இயக்கம் நீர்த்துப் போகும், இந்த இயக்கம் அவ்வளவுதான் என்று பலரும், சனாதன சக்திகள் பலரும், மனப்பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், இந்த  இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது; இன்னும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லுவோம் என்று தலைமையேற்று ஏறத்தாழ 47 ஆண்டுகளாக இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி வருகிற தலைவர், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பின்னர், இந்த இயக்கத் தைப் பரந்து பட்ட வெகுமக்கள் இயக்கமாக, மேலும் வலி மைப்படுத்திய பெருமை தமிழர் தலைவர் அவர்களைச் சாரும்.

உலகம் முழுவதும்

பெரியார் - அம்பேத்கர் பெயரில் படிப்பு வட்டங்கள்

ஏராளமான கல்வி நிறுவனங்களையும், பிரச்சார நிறுவனங்களையும் உருவாக்கி, வலுப்படுத்தி, இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியார் - அம்பேத்கர் பெயரில் படிப்பு வட்டங்களை  இளம்தலைமுறையினர் உருவாக்குக்கின்ற அளவிற்கு, விழிப்புணர்வினை ஏற்படுத்திய பெருமை தமிழர் தலைவர் அவர்களை சாரும்.

நாமெல்லாம் இன்றைக்கு சமூகநீதியைப்பற்றி பேசுகின் றோம் என்று சொன்னால், துணிச்சலோடு பேசுகின்றோம் என்று சொன்னால், அந்த நெஞ்சுரத்தை நமக்கு வழங்கிய பெருமை, தமிழர் தலைவர் அவர்களைச் சாரும்.

நான் பெரியாரைக் கண்டதில்லை; நான் 10 வயதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியார், ஒரு பயணத்தின்போது, கடலூர் வருகிறார் என்று என்னுடைய தந்தையும், மற்றவர்களும் பேசிக் கொண்டிருந்தபொழுது, நான் காதிலே கேட்டிருக்கிறேன். அவரோடு எப்பொழுதும் ஒரு நாய்க்குட்டி வரும் என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டிருக்கிறேன்.

விநாயகர் சதுர்த்தி மறுப்பு துண்டறிக்கை

பெரியார் என்கிற அந்தப் பெயர்ச் சொல்லை முதன் முதலாக நான் 10 வயதில் கேள்விப்பட்டேன். ஒருமுறை என்னுடைய தந்தை வெளியூருக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்கு வருகின்றபொழுது ஒரு துண்டறிக்கையை கொண்டு வந்திருந்தார். அந்தத் துண்டறிக்கையை நான் படித்துப் பார்த்துவிட்டு, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பள்ளிக்குச் சென்றுவிட்டேன். ஆசிரியர் வருவதற்கு நேரமானது; அப்பொழுது நான் அந்தத் துண்டறிக்கையை எடுத்து, சக மாணவர்களுக்குப் படித்துக் காட்டி, அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தத் துண்டறிக்கையைப் படித்துக் கொண்டிருந்தபொழுது, என்னுடைய வகுப்பா சிரியர் பின்புறமாக வந்து, நான் என்ன படித்துக் கொண் டிருக்கிறேன் என்று பார்த்ததை நான் கவனிக்கவில்லை. என்னுடைய முதுகில் தட்டி, அது என்னவென்று கேட்டார்.

உடனே நான் பயந்துபோய், அந்தத் துண்டறிக்கையை மடித்து என்னுடைய சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

ஆசிரியர், அந்தத் துண்டறிக்கையை எடுத்து, என்ன வென்று பார்த்தார். பெரியார் படம் போட்ட துண்டறிக்கை. ‘கடவுளை மற, மனிதனை நினை!' என்று ஒரு ஓரத்தில் அச்சிடப்பட்டு இருந்தது.

உனக்கு ஏது இந்தத் துண்டறிக்கை?' என்று கேட்டார் ஆசிரியர்.

என்னுடைய அப்பா கொண்டு வந்த துண்டறிக்கை' என்றேன் நான்.

அதை ஏன் இங்கே எடுத்துக் கொண்டு வந்தாய்?' என்று கேட்டார்.

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

பெரியாரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டார் ஆசிரியர்.

இப்பொழுதுதான் நான் முதன்முறையாக இந்தத் துண்டறிக்கையைப் பார்க்கிறேன், படிக்கிறேன்' என்றேன்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற ஒரு துண்டறிக்கை - விநாயகர் சதுர்த்தியைப்பற்றி விமர்சனம் செய்த துண்டறிக்கை  அது. அப்பொழுதெல்லாம் பிள் ளையார் சதுர்த்தி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்.

உடனே என்னுடைய வகுப்பாசிரியர், அவருடைய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு படத்தினை எடுத்துக்காட்டி, ‘‘இவர் யார் என்று சொல்?'' என்று கேட்டார்.

சட்டென்று நான் பதில் சொன்னேன், ‘‘இவர் அம்பேத்கர்'' என்று சொன்னேன்.

வகுப்பாசிரியர் சட்டைப் பாக்கெட்டில் தந்தை பெரியார் படமும் இருந்தது, அம்பேத்கர் படமும் இருந்தது.

அதன் பிறகு, அவருடைய ஏற்பாட்டில், திட்டக்குடியில் நடைபெற்ற  ‘‘அண்ணா ஓர் காவியம்'' என்ற நாடகத்தைப் பார்ப்பதற்காக நான் செல்ல நேர்ந்தது. அப்பொழுது பெரியார் வேடம் போட்டு, (பின்னர் தெரிந்துகொண்டேன் அவர் ஈரோட்டு அடியார் என்று) அவர் பேசிய அந்தப் பேச்சு, அந்தப் பிஞ்சு உள்ளத்தில் எனக்குப் பதிந்தது.

துண்டறிக்கையும், அந்த நாடகமும்தான், என்னை பெரியார் திடலுக்குக் கொண்டு வந்து சேர்த்தது

என்னுடைய வாழ்க்கையில் நான் திரும்பிப் பார்க்கிறேன், அந்தத் துண்டறிக்கையும், அந்த நாடகமும்தான், என்னை பெரியார் திடலுக்குக் கொண்டு வந்து சேர்த்தது என்று நான் நம்புகிறேன்.

நான் சென்னை வந்த பிறகு, படிக்கிற மாணவர்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கவோ, கடற்கரைக்குச் செல் லவோ, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ செல்லவில்லை - நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன்.

வியாழக்கிழமை தோறும் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறேன். ஆசிரியர் அவர்களும், அவ்வப்பொழுது பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

எந்தப் போராட்டம் நடைபெற்றாலும், அந்தப் போராட் டத்தில் அழைப்பில்லாமல் நான் பங்கேற்று இருக்கிறேன். ஒருமுறை இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கு இந்த மேடையில் நடைபெற்றபொழுது, தோழர் அருள் மொழியோடு சட்டக் கல்லூரி மாணவர்களாக இருந்த நாங்கள் பலரும் வந்தோம். பேசுகின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அய்ந்து நிமிடம் நான் பேசினேன். அன்று வெளிவந்தவிடுதலை' நாளிதழில் ‘‘மாணவர்கள் போர் முழக்கம்'' என்ற தலைப்பிட்டு, மாண வர்களாகிய நாங்கள் பேசிய பேச்சும் அதில் பதிவாகி இருந்தது. திருமாவளவன் என்ற நான் பேசிய பேச்சும், இந்தியை எதிர்ப்பதற்காக மாணவர்களாக இருக்கின்ற நாங்கள், போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்; எங்கள் ரத்தத்தையும், சதையும் நாங்கள் தாரை வார்க்கவும் தயாராக இருக்கிறோம்; ரத்தம் சிந்தத் தயாராக இருக்கிறோம் என் றெல்லாம் நான் பேசிய அந்தப் பேச்சுதான், ‘விடுதலை'யில் அன்றைக்குத் தலைப்பாகவே இருந்தது.

நான் எப்படி பெரியார் திடலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன்?

சட்டக் கல்லூரி மாணவப் பருவத்தில் இந்த அரங்கத்தில் முதன்முதலாகப் பேசுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு, ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கான பல போராட்டங்கள். அதிலே ஒரு போராட்டம்,  ரயில் மறியல் போராட்டம். திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம். அந்தப் போராட்டத்தில், சைதாப்பேட்டையில் நான் கலந்துகொண்டேன்.

ரயிலை மறித்து, தண்டவாளத்தில்  அய்ந்து, ஆறு மாணவர்களும், அந்தப் பகுதியில் உள்ள திராவிடர் கழகத் தோழர்களும் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றோம்.காவல்துறையினர் எங்களைக் கைது செய்து, சின்னமலையில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குக் கொண்டு போனார்கள். மாலை 6 மணியளவில் எங்களை விடுவித்தார்கள். அதற்குப் பிறகு, நாங்கள் பெரியார் திடலுக்கு வந்து, அய்யா அவர் களைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குத் திரும்பியிருக்கிறோம்.

இவையெல்லாம் அந்தக் காலத்தில் நான் எப்படி பெரியார் திடலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன் என்பதற்கான சில நிகழ்வுகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

திராவிடர் கழகம்

போர்க் குணம் வாய்ந்த ஒரு பேரியக்கம்

திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஓர் இயக்கம். ஆனால், இன்னும் தேய்ந்து போகாமல், திடமோடு மக்களைத் திரட்டிப் போராடிக் கொண் டிருக்கின்ற, போர்க் குணம் வாய்ந்த ஒரு பேரியக்கம். அதுதான் வியப்பிலும், வியப்பு.

எத்தனையோ பல இயக்கங்கள் தோன்றி, மறைந் திருக்கின்றன. காணாமல் போயிருக்கின்றன. ஆனால், அய்யா பெரியாருக்குப் பின்னால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம், தமிழர் தலைவர் தலைமையில், உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திராவிடர் கழகம், மேலும் பல்கிப் பெருகி வலிமைப் பெற்றிருக்கிறது. அதுதான் தமிழர் தலைவரின் ஆளுமை சிறந்த தலைமை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தலைமையின்மீது அப்படியொரு நம்பிக்கை

விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசுவதுண்டு. திராவிடர் கழகத்தில் இருக்கின்ற யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு இல்லை; விளம்பரத்திற்கு ஆசைப் பட்டு இல்லை. எம்.எல்.., ஆகலாம், எம்.பி., ஆகலாம் என்கிற கனவுகளோடு ஆசிரியர் அவர்களைச் சுற்றிவர வில்லை. ஆனால், அவர் முன்னெடுக்கின்ற அத்தனைப் போராட்டங்களுக்கும், உரிய நேரத்தில், பல்லாயிரக்கணக்கில் திராவிடர் கழகத் தோழர்கள் கருஞ்சட்டையோடு வந்து நிற்கிறார்கள், அது எவ்வளவு பெரிய ஈடுபாடு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு செயல்திட்டத்தை அவர் பிரகடனப்படுத்துகிறார் என்றால், அறிவிப்புச் செய்கிறார் என்றால், உடனடியாக அந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அவரவர் தங்களால் இயன்ற நிதியை, மனமுவந்து  வந்து, நம்பிக்கையோடு தருகிறார்கள். தலைமையின்மீது அப்படி யொரு நம்பிக்கை. சரணம் கச்சாமி என்று தலைமையைப்பற்றி சொன்னாரே, அந்தத் தலைமையின்மீது நம்பிக்கை - அந்தத் தலைமையிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள் கின்ற அந்த நம்பிக்கை - திராவிடர் கழகத்தில் இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது. பெரியார் அய்யா அவர்கள் மறைந்து, அரைநூற்றாண்டு காலம் ஆன பிறகும் கூட.

திருச்சி சிறுகனூரில் ‘‘பெரியார் உலகம்!''

‘‘பெரியார் உலகம்'' என்று ஆசிரியர் அய்யா அவர்களின் முயற்சியில், திருச்சி சிறுகனூர் அருகே ஒரு மாபெரும் வரலாற்று நினைவகத்தைக் கட்டுவதற்கு, ஆசிரியர் அய்யா அவர்கள் செயல் திட்டம் வரையறுத்திருக்கிறார். திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள், இதனால் எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் - திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருப்பதால் என்ன பயன்? பேனர் அடித்து, பெரிய அளவில் தங்கள் படத்தைப் போட்டுக் கொள்கிறார்களா? துண்டறிக் கையில் தங்களுடைய படத்தைப் போட்டுக் கொள்கிறார் களா? அல்லது வேறு எந்த வகையிலாவது ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? இல்லை. பெரியார் முன்னெடுத்த அந்தக் கொள்கைகளை, வெகு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில், உறுதியோடு நின்று போராடுகிறார் தமிழர் தலைவர் அவர்கள் - அந்தத் தலை மையை வலிமைப்படுத்தவேண்டும்; அந்த இயக்கத்தை வலிமைப்படுத்தவேண்டும் என்கிற அந்த ஈடுபாடு.

நான் எப்பொழுதும் பிற அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதில்லை. திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளை, செயல்திட்டங்களை நான் ஒப்பீடு செய்து தோழர்களுக்கு சொல்வது உண்டு.

கொள்கை என்பதற்காக மட்டும் ஓர் இயக்கம் - ஓட்டுக்காக அல்ல.

கோட்பாடு என்பதற்காக மட்டும் ஓர் இயக்கம் - தேர்தல்  பதவிகளுக்காக அல்ல.

பன்மடங்கு கூடுதலான வேகத்தோடு,

தமிழர் தலைவர் முன்னெடுத்திருக்கிறார்

ஆகவே, அய்யா பெரியாருக்குப் பின்னால், அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தை அதே வீரியத் தோடு, அதே வேகத்தோடு, இன்னும் சொல்லப்போனால், பன்மடங்கு கூடுதலான வேகத்தோடு, தமிழர் தலைவர் முன்னெடுத்திருக்கிறார் என்று சொன்னால்,

சமூகநீதி அதனால்தான்  பாதுகாக்கப்பட்டு இருக் கிறது. சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான அவர் அமைத்த களங்கள், எண்ணற்ற பல களங்களாகும்.

மண்டல் பரிந்துரையை நிறைவேற்றுவதற்கான போராட்டக் களங்களாக இருந்தாலும்,

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை பாதுகாப்பதற்கான அந்த அறப்போராட்டக் களங்களாக இருந்தாலும்,

நீதிபதிகள் நியமனங்களாக இருந்தாலும்,

பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளை நியமிக்கின்ற அந்தப் பணிகளாக இருந்தாலும்,

ஒவ்வொரு நாளும், எதிரிகளின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து, பகை சக்திகளின் சதித் திட்டங்களை உற்றுக் கவனித்து, அதற்கேற்ப உடனுக்குடன் எதிர் வினை ஆற்றக்கூடிய வல்லமை அய்யா தமிழர் தலைவர் அவர்களிடத்தில் நாம் பார்க்க முடிகிறது.

50 வயது இளைஞரைப் போல ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்

88 வயது என்று சொல்கிறார்,  நம்ப முடியவில்லை. நம்மால்கூட அவர் போல் வேகமாக, இந்த வயதிலே செயல் பட முடியவில்லை. உண்மையிலேயே நான் ஒப்புக் கொள்கிறேன். 30 வயது அவருக்கும் எனக்கும் இடைவெளி. ஆனால், 88 வயதில் அவர் 50 வயது இளைஞரைப் போல ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டே இருக்கிறார். அவருடைய உழைப்பு  நமக்கு வியப்பைத் தருகிறது.

எல்லாவிதமான தளங்களிலும், அனைத்துவகை தளங்களிலும், கால்களைப் பரப்பி, எந்த இடத்திலும், இந்த சமூகத்திற்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, உழைக்கின்ற மக்களுக்குப் பாதிப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதில், கண்ணுங்கருத்துமாக இருந்து, ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டு வருகிறார்.

திராவிடர் கழகம் மட்டும் இல்லை என்று சொன்னால், சமூகநீதிக்கு எப்பொழுதோ பெரும் ஆபத்து வந்திருக்கும்.

இன்றைக்கும் ஆட்சியில் இருப்பவர்களின் நோக்கம் என்ன? சமூகநீதியைத் தகர்க்கவேண்டும் என்பதுதான்.

திராவிடர் கழகம் ஆற்றி வருகின்ற பணி மகத்தானது

சமூகநீதி இங்கே வந்த பிறகுதான், அதனுடைய கோட்பாடு இங்கே வெற்றி பெற்ற பிறகுதான், அது இங்கே நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான், நாமெல்லாம் வெள்ளைச் சட்டை போட முடிந்தது; அல்லது ஆட்சி நிர்வாகத்தில் போய் அமர முடிந்தது. அரசியல் களத்தில் இன்றைக்கு வீரியத்தோடு போராட முடிகிறது.

இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகாலம் கட்டிக் காப்பாற்றி வந்த சமூக ஒழுங்கு, இன்றைக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. அவர்கள் விரும்பிய சமூக ஒழுங்கு. மேல் ஜாதி - கீழ்ஜாதி என்கிற அடிப்படையிலான, படிப்படியான சமத்துவமில்லாத ஒரு சமூகக் கட்டமைப்பு. அதைத் தகர்த்தெறிவதில், திராவிடர் கழகம் ஆற்றி வருகின்ற பணி மகத்தானது.

சமூகநீதிக்காகப் போராடுகிற ஒரு போரியக்கம், பேரியக்கம் திராவிடர் கழகம்தான்!

இந்திய அளவிலேயே இன்றைக்குக் கொள்கை சார்ந்து, சமூகநீதிக்காகப் போராடுகிற ஒரு போரியக்கம், பேரியக்கம் திராவிடர் கழகம்தான்.

நாமெல்லாம் சமூகநீதியைப்பற்றி பேசலாம், அதற்காகப்  பல அமைப்புகள் இருக்கலாம். ஆனால், அகில இந்திய அளவில், உலக அளவில், அந்தக் களத்தில் இன்றைக்கும் உறுதியோடு நின்று போராடுகின்ற ஒரு மாபெரும் தலைமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை.

சமூகநீதி என்கிற இந்தக் கோட்பாடு சனாதன சக்திகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.அவர்களைத் தூங்க விடா மல் அடிக்கிறது. எனவே, சமூகநீதியை அழித்தொழிப்பதற்கு என்னனென்ன சதித் திட்டங்களையெல்லாம் தீட்ட முடியுமோ அதைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியல் எனக்குத் தடையாக இருக்குமேயானால், அதனை உதறிவிட்டு, 

திராவிடர் கழகத்தைப்போல செயல்படுவோம்!

தேர்தல் அரசியலில் இருக்கின்ற நமக்கு, விடுதலை சிறுத்தைகள் உள்பட சொல்கிறேன். வாக்கு வங்கி சிக்கல் இருக்கிறது. எப்படி இதனை நேரிடையாக எதிர் கொள்வது என்கிற சிக்கல், உளவியல் ரீதியாகவும் எதிர் கொள்ளவேண்டிய ஒரு நிலை இருக்கிறது. கூட்டணியில் இருக்கின்றவர்கள் என்ன நினைப்பார் களோ,  ஏது நினைப்பார்களோ என்கிற அச்சம். அதனால்தான், ஒரு கூட்டத்திலே நான் சொன்னேன், ‘‘ஒருவேளை அந்தத் தேர்தல் அரசியல் எனக்குத் தடையாக இருக்கு மேயானால், அதனை உதறிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல செயல்படுவேனே தவிர, அதற்காக ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்'' என்றேன்.

நான், மனுதர்ம சட்டத்தைப்பற்றி பேசினாலும் சரி, சமூகநீதியைப்பற்றி பேசினாலும் சரி, சமத்துவத்தைப்பற்றி பேசினாலும் சரி, அது பெரியார் திடலின் தாக்கம், தந்தை பெரியாரின் அரசியல், புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் என்பதுதான். வேறொன்றும் புதிதாக நாம் கண்டறிந்து விடவில்லை; புதிதாகப் பேசிடவில்லை. புதிதாக நாம் எதையும் வரையறுத்துவிடவில்லை.

நாம் மிகவும் கவனமாகவும்,

எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்

பெரியாரும், அம்பேத்கரும் இன்றைக்கு சமூகநீதியின் அடையாளங்களாக இருக்கிறார்கள்; கோடான கோடி மக்களின் பாதுகாப்பு அரண்களாக இருக்கிறார்கள். அத னால்தான் தோழர்களே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியாரைக் குறி வைக்கிறார்கள்.

‘‘திராவிடத்தை வீழ்த்துவோம்'' என்று சொல்லுகிறவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தோடு அல்லது .தி.மு.. வோடு, திராவிடர் கழகத்திலிருந்து உருவான வேறு அரசியல் கட்சிகளோடு முரண்படுவதில் ஒன்றும் பிரச்சினையல்ல. தேர்தல் அரசியல் என்றால், முரண்பாடுகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம், ஊழல்  குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், திராவிடர் கழகத்தையே குறி வைக் கிறார்கள், அதிலும் தந்தை பெரியாரைக் குறி வைக்கிறார்கள் என்றால், நாம் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் தோழர்களே!

அந்தப் புள்ளியில்தான் விடுதலை சிறுத்தைகள் வேகம் பெறுகிறோம். திராவிடக் கட்சிகளை விமர்சிப்பது வேறு; திராவிட இயக்கங்களை விமர்சிப்பது வேறு. அதிலும் குறிப்பாக, திராவிடர் கழகத்தின் பணிகளை விமர்சிப்பது, அதிலும் குறிப்பாக தந்தை பெரியாரின் கொள்கைகளை விமர்சிப்பது - ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப் புகளின் செயல் திட்டம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழ்த் தேசியத்தைப் பேசக் கூடிய தோழர்கள் இதனை ஒப்பீடு செய்து பார்க்கவேண்டும்.  தந்தை பெரியாரை, அந்த அடையாளத்தை முற்றாக சிதைக்கவேண்டும் என்பதில் சங் பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எல்லா தளங்களிலும் அதற்கான வேலை திட்டங்களை செய்கிறார்கள்.

தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கராக இருந்து, தளபதியாக இருந்து போராடி வருகிறார்

.பி.சி. என்கிற இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை, ஜாதி அடிப்படையில்,  ஜாதிப் பெருமிதத்தைப் பேச வைத்து, ஜாதி சங்கங்களின் நடவடிக்கைகளை  ஊக்கப்படுத்தி, அதைக் கூறு போட்டு சிதைக்கிறார்கள், சிதறடிக்கிறார்கள்.

அதேபோல, தலித் என்கிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒற்றுமையை சிதைக்கக் கூடிய வகையில், அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஜாதியையும் தனித்தனியே உடைத்துக் கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும்.

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதற்கு ஒரே காரணம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இங்கு தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கராக இருந்து, தளபதியாக இருந்து போராடி வருவதுதான்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், திராவிடர் கழகம் இல்லை என்றால், தமிழர் தலைவர் இங்கே இல்லை என்றால், இந்த சனாதனக் கும்பலின் கொட்டம் எந்த அளவிற்கு இங்கே தலைவிரித்தாடும் என்பதை தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அதற்குரிய பங்களிப்பை செய்திருக்கின்றன என்றாலும்கூட, கொள்கை சார்ந்து அந்தத் தளத்தில் உறுதியோடு நின்று போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான தலைவர் தமிழர் தலைவர் அவர்கள்.

எப்படியாவது இங்கே காலூன்றி விடலாம்; வேரூன்றி விடலாம் என்று சனாதனிகள் கருதுகிறார்கள்!

சனாதனிகள் இன்னும் அந்தப் பகீரத முயற்சியை விட்டுவிட வில்லை. இப்பொழுது தீவிரமாகி இருக்கிறார்கள். தலைவர்  கலைஞர் இல்லை; .தி.மு..வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் இல்லை. இதைப் பயன்படுத்தி எப்படியாவது இங்கே காலூன்றி விடலாம், வேரூன்றி விடலாம் என்று கருதுகிறார்கள் தோழர்களே!

அவர்களால், இங்கே நேரிடையாக வந்து எதையும் செய்ய முடியவில்லை. 20 ஆண்டுகாலம் அந்த முயற்சிகளை செய்து பார்க்கிறார்கள். ஆகவே,  இப்பொழுது நடிகர்களை இறக்கி விடு கிறார்கள். வெவ்வேறு முகமூடிகளைப் போட்டு அனுப்புகிறார்கள். அவர்களையும் முறியடிக்கக்கூடிய ஆற்றல் திராவிடர் கழகத்திற்கு உண்டு; விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உண்டு.

இந்தத் தளத்தில் திராவிடர் கழகத்தோடு நூறு விழுக்காடு நின்று போராடக் கூடிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று சொல்வதை நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனக்கு, 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டப் பேரவை தேர்தலைவிட, இந்த மண்ணில் காலூன்றத் துடிக்கின்ற சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் என்கிற  அந்த செயல் திட்டத்தைத்தான் நான் முதன்மையானதாக நான் பார்க்கிறேன்.

யார் வேண்டுமானாலும், இங்கே வந்துவிடலாம், கட்சியைத் தொடங்கிவிடலாம் - அது ஜனநாயக உரிமை. அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எந்த முகத்தோடு வருகிறார்கள், எந்த நோக்கத்தோடு வருகிறார்கள், எந்த இலக்கை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள் என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!

மிகவும் ஆபத்தான ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். இந்த ஆறு மாத காலத்தில் நாம் ஆற்றக் கூடிய பணிகள்தான் - தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சி - வீணாகாமல் பாதுகாக்கின்ற ஒரு முயற்சியாக அமையும். இல்லையென்றால், இங்கே ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும் கொட்டமடிப்பார்கள்.

இங்கே ராமரை சொன்னால் எடுபடாது என்பதால், தமிழர்களின் கடவுளான முருகனை தூக்குகிறார்கள்

வடமாநிலங்களில்  இராமர், இராமர் என்று சொல்லுகிறவர்கள், இங்கே ராமரை எடுக்க முடியவில்லை; முருகனை ஏந்துகிறார்கள். இங்கே ராமரை சொன்னால் எடுபடாது என்பதால், தமிழர்களின் கடவுளான முருகனை தூக்குகிறார்கள். அவர்கள் எவ்வளவு சாதுரியமாக உத்திகளைக் கையாளுகிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

வேல் யாத்திரை என்று பெயர் சூட்டுகிறார்கள்; மண்டல் பரிந்துரையை  நம்முடைய சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அதனைத் துணிந்து நடைமுறைப்படுத்தியபொழுது, ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், ஒடுக்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட, இதர பின்தங்கிய மக்களின் எதிர்காலமே முக்கியம் என்று, அந்த இட ஒதுக்கீட்டை, சமூகநீதியை நடைமுறைப்படுத்தினார்.

தமிழர் தலைவர் வரையறுத்துத் தருகின்ற செயல்திட்டத்தின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படும்

அந்த நேரத்தில், வெகுண்டெழுந்து, வீதிக்கு வந்து, மாண வர்களையும் வீதிகளில் இறக்கிவிட்டு, ரத யாத்திரை என்ற பெயரால், ஒரு ரத்த யாத்திரையை நடத்திய ஒரு கும்பல்தான், சமூகநீதியை அழித்தொழிக்கின்ற அந்தக் கும்பல்தான், தமிழ்நாட்டிலே இன்றைக்குக் காலூன்றத் துடிக்கிறார்கள். பலர் அதற்குத் துணை போகிறார்கள். அதனைத் தடுக்கக்கூடிய ஆற்றலும், ஆளுமையும் தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு இருக்கிறது. அவர் வரையறுத்துத் தருகின்ற செயல்திட்டத்தின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படும் என்கிற உறுதியை தர நான் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்தத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட வேண்டாம் என்று சொன்னால்கூட, அதனை நூறு விழுக்காடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்றுக்கொள்வோம்.

சனாதனத்தை முறியடிப்பதைவிட, நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குச் செல்லவேண்டும் என்பதல்ல முக்கியம். சனாதன சக்திகளை விரட்டியடிப்பதைவிட, வேறு என்ன வேலை நமக்கு முக்கியமாக இருக்கிறது?

ஆன்மிகம் என்றாலே, மதத்தோடு தொடர்புடையதுதான்

அரசியலில் அவர்கள் காலூன்றுவதன்மூலம் வெவ்வேறு வடிவங்களில் வருகிறார்கள்; வெவ்வேறு பெயர்களைச் சொல்லி வருகிறார்கள். ஆன்மிகம் என்றாலே, மதத்தோடு தொடர் புடையதுதான். மதத்தையும், ஆன்மிகத்தையும் தனியே பிரித்துவிட முடியாது. நுட்பமான வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், இரண்டையும் பிரிக்க முடியாது.

ஆகவே, இது யாருடைய முகம்? யாருடைய வடிவமாக அவர்கள் இங்கே வந்து இறங்குகிறார்கள்? எல்லாவற்றையும் நாம் கவனிக்கவேண்டி இருக்கிறது தோழர்களே!

பெரியார் பன்னாட்டமைப்பிற்கு

என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றி

இந்தக் களத்திலே, இதை  நுட்பமாகப் பார்க்கின்ற ஆற்றல் தமிழர் தலைவர் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு. அவர் வரை யறுத்துத் தருகின்ற செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற களப் போராளிகளாக விடுதலை சிறுத்தைகள் இருப்போம் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கிய அந்த விருதினை,

சந்திரஜித் யாதவ் அவர்களுக்குவழங்கிய அந்த விருதினை,

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு வழங்கிய அந்த விருதினை,

மாயாவதி அம்மையாருக்கு வழங்கிய அந்த விருதினை, 

இன்றைக்கு எளியவன் திருமாவளவனுக்கு  வழங்கி, ஒரு மகத்தான அங்கீகாரத்தை அளித்த, பெரியார் பன்னாட்டமைப்பிற்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதிலும், பல விருதுகளுக்கு சமமான தகுதியை உடையவர். அவரே ஒரு விருதுதான், நம்முடைய ஆசிரியர் அவர்கள். அவ ருக்கு எந்த விருதும் தேவையில்லை. அவர் பெயரிலான விரு தினைப் பெறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகி றேன். ஒரு மகத்தான அங்கீகாரமாக எண்ணி, இரும்பூ தெய்துகிறேன்.

பெரியாருக்கு  அய்யா வீரமணி அவர்கள் கிடைத்ததைப்போல...

தமிழர் தலைவர் அவர்கள், இது தாய்வீட்டுச் சீதனம் என்று சொன்னார். திராவிடர் கழகம் என்பது, பெரியார் திடல் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு பாசறை - புரட்சியாளர்  அம்பேத்கர் பெயரில், தமிழகத்தில் இப்படி ஒரு பாசறை பெரிதாக உருவாக வில்லை. ஏன் அகில இந்திய அளவில்கூட, அவருடைய எழுத்தும், பேச்சும்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை எடுத்துச் செல்வதற்கு, பெரியாருக்கு  அய்யா வீரமணி அவர்கள் கிடைத் ததைப்போல, புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை, நிறுவனமயப்படுத்தி, அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் பெரிய நிறுவனம் இல்லை, கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய அமைப்பு இல்லை - இயக்கம் இல்லை. கட்சிகள் தோன்றலாம், அமைப்புகள் தோன்றலாம்.

தந்தை பெரியாராகவே கருதுகின்றோம்; புரட்சியாளர் அம்பேத்கராகவே கருதுகின்றோம்!

ஆகவே, பெரியாருடைய கருத்துகளையும், புரட்சியாளர் அம்பேத்கருடைய கருத்துகளையும் வேறு வேறாகப் பார்க்காமல், அந்தக் கருத்துகள் ஒரே கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை என்கிற அந்தப் புரிதலோடு, எப்படி  தந்தை பெரியார் காலத்தில், நம்முடைய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை உள்வாங்கிக் கொண்டு, அவரை வரவேற்று, அவரை அரவணைத்து, அவரோடு இயங்குகின்ற பெருந்தன்மையை, பரந்த உள்ளத்தை அன்றைக்குத் திராவிடர் கழகம் கொண்டிருந்ததோ, தந்தை பெரியார் கொண்டிருந்தாரோ, அதைப்போல, இன்றைக்கு நம்மை அரவணைத்துத் தட்டிக் கொடுத்து, ஊக்கங்கொடுத்து, இந்தக் களத்திலே பணியாற்றுவதற்கு உற்ற துணையாக இருக்கின்ற தமிழர் தலைவர் அவர்களை, தந்தை பெரியாராகவே கருதுகின்றோம்; புரட்சியாளர் அம்பேத்கராகவே கருதுகின்றோம். அந்த மாமனிதர்கள் ஓர் உருவமாக  ஆசிரியர் அய்யா அவர்களின் வடிவில் நம்மோடு இருக்கின்றனர் என்று நம்புகிறோம்.

பெரியாரும், அம்பேத்கரும் இணைந்து வந்து விடுதலை சிறுத்தைகளை வாழ்த்தியதாகவே, ஆசிரியர் அய்யா அவர்களின் வடிவத்தில் வந்து வாழ்த்தியதாகவே எண்ணி, நான் பெருமைப் படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியா முழுவதும் சமூகநீதிப் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் மேற்கொள்ளும்!

ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார், தமிழகத்தில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் சமூகநீதிப் பயணத்தை திருமாவளவன் மேற்கொள்ளவேண்டும் என்கிற வேண்டுகோளை அல்லது கட்டளையை, வழிகாட்டுதலை தந்திருக்கிறார். அய்யா அவர்களின் ஊக்கத்தோடு, அவருடைய உற்றத் துணையோடு இந்திய அளவில், விடுதலை சிறுத்தைகள் செயல்படுவதற்கு இந்த அரங்கில் உறுதியேற்கிறோம்.

சனாதனத்தை வேரறுப்போம்;

ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!

சமூகநீதியைக் காப்பதற்கான களத்தில், எப்பொழுதும் திராவிடர் கழகத்தோடு நிற்போம். உலக அளவில் சமூகநீதியைக் பாதுகாப்பதற்கான முயற்சிகளை, பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா  மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம்.

சனாதனத்தை வேரறுப்போம்,

ஜனநாயகத்தை வென்றெடுப்போம்,

அதற்கு சமூகநீதியை இந்த மண்ணில் நிலைப்படுத்துவோம் என்று சொல்லி,

அய்யா அவர்களின் பெயரிலான இந்த விருதிற்கு, மீண்டும் ஒருமுறை பெரியார் பன்னாட்டமைப்புக்கு நன்றி கூறி, அய்யா அவர்களுக்கும் நன்றி கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன் எம்.பி. அவர்கள் உரை யாற்றினார்.

Comments