திராவிடம் வெல்கவே! நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 17, 2020

திராவிடம் வெல்கவே! நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 17.12.2020).

இந்நாள் தமிழ்நாட்டு வரலாற்றில், குறிப்பாக பார்ப் பனர்கள் அல்லாதசூத்திரர்' ‘பஞ்சமர்' என்று ஆக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் - ஆட்சி ரீதியாக திருப்பம் ஏற்பட்ட வைரக் கல்வெட்டு நாள்.

ஆம்! இந்நாள்தான் (17.12.1920) நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், சென்னை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடலூர் .சுப்பராயலு (ரெட்டியார்) தலைமையில் மூவர் கொண்ட அமைச்சரவை பதவி யேற்ற நாள்! (மற்ற இரு அமைச்சர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி).

இந்த டிசம்பர் 20 இல்தான் (1916) வெள்ளுடை வேந்தர்  பிட்டி தியாகராயரால் நீதிக்கட்சி சார்பில் ‘‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை'' (The Non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.

ஒரு நூறாண்டுக்கு முன் பார்ப்பனர் அல்லாத திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சி 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் செய்த சாதனைகள் அனைத்தும் இன்று நம் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கும், வாய்ப்புகளுக்கும், வளமைகளுக்கும் போடப்பட்ட மிகப் பலமான அடிக்கற்கள் ஆகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே சட்ட ரீதியாக இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் இன்று தமிழ்நாட்டு மக்கள் 69 விழுக்காடு அளவில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பயன் பெறுகிறார்கள் என்றால், அதற்கான தொடக்கத்தைக் கொடுத்த அந்தத் தூயதான நல்லாட்சிக்கு நன்றி உணர்வுடன் இந்நாளில் நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்!

எத்தனை எத்தனை மகத்தான சாதனைகள் அவை. இப்பொழுது நினைத்தால்கூட மயிர்க்கூச்செரிகிறது.

‘‘ஜனநாயகக் குழந்தை தவழ்ந்து விளையாடும் தொட்டில்'' என்று போற்றப்படும் இங்கிலாந்தில்கூட முழுமையான வடிவத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை 1928 இல் தான் கொண்டுவரப்பட்டது - தொடர் போராட் டங்களுக்குப் பிறகு.

ஆனால், நீதிக்கட்சி நிர்வாகம் செய்த சென்னை மாநிலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசு ஆணை எண்: 108, நாள்: 10.5.1921).

எடுத்துக்காட்டாக நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய ஆணைகளும், சட்டங்களும் இதோ:

* முதல் வகுப்புரிமை ஆணை (M.R.O. Public Ordinary Service G.O. No.613, Dated: 16.9.1921).

* பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. (M.R.O. Public Ordinary Service G.O. No.658, Dated: 15.8.1922).

* ‘‘பஞ்சமர்'' என்ற சொல் நீக்கப் பெற்று, ‘‘ஆதிதிராவிடர்'' என அழைக்கப்படவேண்டும். (அரசாணை எண்: 817 நாள்: 25.3.1922).

* கல்லூரிகளில் முதல்வர்கள் பார்ப்பனர்களாக இருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் கல்லூரிகளில் சேர முட்டுக்கட்டை நிலவிய சூழலில், ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் குழுக்கள் (Selection Board) அமைக்கப் பட்டது. (அரசாணை எண்: 536 நாள்: 20.5.1922).

* கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கென்றே தனி ஆணை (அரசாணை எண்: 849 நாள்: 21.6.1923).

* சென்னை பல்கலைக் கழக செனட்டின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும், பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்யும் ஆணை (பல்கலைக் கழக சட்டம் ஆணை 1923).

* பொதுக் கிணறு, குளம், சாலைகளில் தாழ்த்தப் பட்டோர் புழங்கும் உரிமை (தீர்மானம் முன்மொழிவு: இரட்டைமலை சீனிவாசன் - கெசட்டில் வெளியீடு 24.2.1925).

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்கப்பட வேண்டும். (அரசாணை எண்: () 205 நாள்: 11.2.1924, () 825 நாள்: 24.9.1924). தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவே தனியே லேபர் துறை.

* இந்து சமய அறநிலைய சட்டம் (அரசாணை எண்: 29 நாள்: 27.1.1925).

* சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கென்றே ஓர் ஆணை (எண்: () 636 நாள்: 2.5.1922 () 1880 நாள்: 15.9.1928).

* ஆங்கிலேயர் எதிர்ப்புக்கிடையே மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கியது பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவை.

* மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் தேவை என்ற நிபந்தனையை நீக்கியதும் பனகல் அமைச்சரவையே.

* நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு முதன்முதலில் செயல்பாட்டுக்கும் வந்த வகுப்புரிமை ஆணை (G.O. M.S. No.1880 Education Dated: 15.9.1928 மற்றும் அரசு ஆணை எண்: 226 நாள்: 27.2.1929).

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கான சட்டம் இயற்றல் (1928 டிசம்பர் 21).

* சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கம் (அரசாணை எண்: 484 நாள்: 18.10.1929).

* தேவதாசி ஒழிப்புச் சட்டம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால். (1930 இல்)

* சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் படிப்பு உண்டு. ஆனால், தமிழுக்கென்று ஒரு துறை இல்லை. இந்த நிலையை மாற்றியது நீதிக்கட்சி.

* சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300; தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியாருக்கு மாதச் சம்பளம் ரூ.81. இந்தப் பேதத்தை நீக்கியதும் நீதிக்கட்சி ஆட்சியே!

* வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மேயராக இருந்தபோதுதான் முதன்முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நண்பகல் உணவளிக்க வழி செய்யப்பட்டது. அதன்பின் தான் நகராட்சி சட்டத்தைத் திருத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் மாநில அரசே மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. (அரசாணை எண்: 1008 (L&M) நாள்: 7.6.1922).

* தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக இருந் ததை மாற்றி தமிழும் சொல்லிக் கொடுக்க ஆவன செய்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான .டி. பன்னீர் செல்வம். (ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தவர்).

* அரசு மாணவர் விடுதிகளான ராஜா மடம், உரத்தநாடு விடுதிகள் பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமாகவே இருந்ததை அனைவருக்கும் பயன் படும்படிச் செய்தவரும் அவரே!

* இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய தலைவர் .பு.. சவுந்தரபாண்டியன் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து என்று ஆணை பிறப்பித்தார்.

* தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் ஆவார்.

இந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் அரசியல் ரீதி யில் தி.மு..வாகும்.

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்; சுயமரியாதைத் திருமணச் சட்டம்; இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான்; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், சுயமரியாதை இயக்க வீராங் கனைகளின் பெயரில் மகளிர் வளரச்சி - உரிமை சட்டங் கள் - திட்டங்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர்க்கு தங்கம் - நிதி உதவி.

நுழைவுத் தேர்வு ரத்து - நீட்டை எதிர்த்து வழக்கு.

பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கியது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இலவச கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோருக்கு என்று தனித்தனி துறைகள், அரசு ஊழியர் இரகசிய குறிப்பாணை (Personal File) இரத்து,

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம்; தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடங்கும் ஆணை.

பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சிப் பதவிகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு, இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்ற நிலை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு, கோவில்களில் கருணை இல்லம், மீனவர்களுக்கு இலவச வீடுத் திட்டம், பசுமைப் புரட்சி திட்டம், வெண்மைப் புரட்சி திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், தமிழ் செம்மொழியாக அங்கீகாரம், தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி உழவர் சந்தை, சமச்சீர் கல்வி முறை, திருவாரூர், கோவையில் மத்திய பல்கலைக் கழகங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,

தி.மு.. ஆட்சியின் சாதனைகளில் பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் - அதற்குள் மய்யக் கருவாக - புள்ளியாக சமூகநீதி  - இனப் பண்பாடு எனும் கண்ணோட்டமும் கண்டிப்பாக இருக்கும்.

இந்தியாவிலேயே சமூகநீதி என்ற சமுதாயக் கொள்கை உடைய ஓர் அரசியல் கட்சி உண்டு என்றால், அது தி.மு..தான்!

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவைக்கான நூற்றாண்டு என்னும் வைர ஒளி மின்னும் நாளில் (17.12.1920) இவற்றையெல்லாம் அசை போடுவோம்!

அன்று எதிர்க்கத் தொடங்கிய உயர்ஜாதி ஆணவ எதிர்ப்பு இன்றுவரை தொடர்வதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், அதன் வழி வந்த விழுதான தி.மு..வை ஆட்சிப் பீடத்தில் நிறுத்த உறுதி எடுப்போம்!

வெல்க திராவிடம் -

வெல்கவே!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

17.12.2020

1 comment:

  1. வாழ்க பெரியார்!
    வளர்க பகுத்தறிவு!

    ReplyDelete