புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "கறுப்பு" (1)

தமிழ் ஆராய்ச்சி உலகின் தன்னேரில்லாத பேராசிரியர் ஆய்வறிஞர் தொ.பரமசிவன் அவர்கள்!

புராண கால 'பழைய பரமசிவனுக்கு கற்பனையான நெற்றிக்கண் இருந்ததாக எழுதி பரப்புவது வாடிக்கையான வேடிக்கை!

ஆனால், இந்த புதிய தொ. பரமசிவனுக்கோ அறிவுக்கண் - அதில் எப்போதும் பெரியாரின் ஆராய்ச்சி ஒளி வீசிக் கொண்டே இருக்கும்;

புதுப்புது வெளிச்சங்களையும், புத்தாக்கச் சிந்தனைக்கான விருந்துகளும், வாசகர்களுக் கும், தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் வற்றாது கிடைத்துக் கொண்டே இருக்கும்.

நிறங்களால் உலகில் இன்றளவும் நடைமுறை யில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், பேதங்களும், அதன் காரணமாக ஏற்படும் கலகங்களும், நாளும் பெருகி வரும் நிலையில், நிறம்பற்றி ஒரு அற்புத மான ஆய்வினை - "கறுப்பு"  என்ற தலைப்பில், எந்த நிறத்தை சற்று மட்டமாகவும், மாற்றுக் குறைந்ததாகவும் மூடத்தனமாக இன்ன மும் உலகத்தில் உள்ள பலரும் - ஏன் மண மக்களைத் தேடுவோரும்கூட கறுப்பு என்றால் முகம் சுளிப்பதும், பிறகு அதே கறுப்பு வண்ணத் தினை பல மணி நேரம், பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கறுப்பு அடித்து, முதுமையை மறைத்து, இள மையை நாடி, தேடுகின்ற நிலையும் ஒரு வேடிக் கையான நகை முரண்தான்! ஆய்வறிஞர் தொ. பரமசிவன் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூல்.

அதில் 'கறுப்பு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை அவரது அறிவுக் கண்ணொளியை நமக் கெல்லாம் பாய்ச்சி, படிப்போருக்கு கருத்தொ ளியை வழங்கி மகிழும் தொ..வின் சிந்தனை கருவூல ஆய்வினை படியுங்கள்!

"இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந் தன. இக்காலத்தில் நிறத்தை யும் குறிக்கும்வண்ணம்' என்ற சொல் அக்காலத் தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறு பாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறு மைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல் லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடி மைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறி யீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இட ஒதுக்கீட் டுக்கெதிராக ஒரு கருத்தைச் சொல்லும் திரைப் படத்தில் கறுத்த நிறமுடையவன் கல்லூரிக்குச் செல்லுகிறான். சிவந்த நிறமுடையவன் இடங் கிடைக்காமல் வெளியே நிற்கிறான். கருத்தைச் சொல்லுவதற்கு இங்கே தோலின் நிறம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் கீழ்ச் சாதிக் காரன், மேல்சாதிக்காரன் என்பதைக் குறியீடு களாகச் சுட்டி நிற்கின்றன. சமூக முரண்பாடுகள் மனிதனின் தோலின் நிறத்தைக்கொண்டு வெளிப் படுகின்ற வழக்கம் எவ்வாறு உருவானது? மனி தத்தோலின் நிறத்தையும், அழகையும் இணைக் கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விளக்க முயலுவோம்.

இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளி லும் கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப் பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரிகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. திருமணச் சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற் குக் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சி யைப் பொறுத்தமட்டில், கறுப்பு என்பது அழகற்ற நிறம் என்று அனைத்து மனிதர்களும் கருது கிறார்கள். அழகுணர்ச்சியில் இந்தப் பாகுபாடு புகுந்த முறை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது. எனவே மனிதத் தோலின் நிறமும் அழகுணர்ச்சியும் பற்றிய மதிப் பீடுகளை அறிய இலக்கியச் சான்றுகளைக் காண்போம். நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும் என்னும் செய்தி தொல்காப்பியத் தில் காணப்படுகிறது. ஆனால் இரண்டு நிறங்க ளைப் பற்றியே தொல்காப்பியர் பேசுகிறார்.

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

கறுப்பு, சிவப்பு என்பன சினத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இந்த இலக்கணம் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்

என்ற திருக்குறளில் 'கறுத்து' என்ற சொல்சினந்து' என்ற பொருளைத் தருகிறது.

செருநரை நோக்கிய கண்தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவேன்

என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.

சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின் றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும், வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே "மனிதத் தோலின் நிறம்" பேசப்படுகிறது.

இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும், பலராமனுக்கும் நிறம் சொல்லப் பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும், நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.

(நாளை தொடரும்)

Comments