மின்துறையில் அதானி சாம்ராஜ்ஜியம்

மின்சார திருத்தச் சட்டம் கடந்த 2020 - ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் மின்சார தேவைக்கு தனியாரின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.


புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட குறைந்தபட்ச சதவீத மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு பரிந்து ரைக்க வழி செய்துள்ள இந்த சட்டத்தின் மூலம், மாநில அரசுகளை மத்திய அரசு தனியார் நிறுவனங் களிடமிருந்து மின்சாரம் வாங்க நிர்ப்பந்திக்கிறது.


இந்த தனியார் நிறுவனங்களை மாநில அரசு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப் படவில்லை; மாறாக மின்சார ஒப்பந்த அமலாக்கத் துறை எனும் மத்திய அரசு அமைத்துள்ள துறை பரிந்துரைக்கும் நபர்களிடம் இருந்து மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் வாங்க முடியும்.


இந்த சட்டத்தினால், மின்மிகை மாநிலமாக விளங்கிவரும் தெலங்கானா மாநிலத்தில், இதர மின் தேவைகளுக்காக தனியாரிடமிருந்து அதிகப்படியாக 7 சதவீத மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற மாநில அரசின் விதியை மத்திய அரசு மாற்றியிருப் பதோடு, இதனை 19 சதவீதமாக உயர்த்தி தனியாரி டம் வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்தி ருக்கிறது.


இப்படி தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்தை மாநில மின் விநியோகத் துறை மூலமாக விநியோகம் செய்து அவர்களுக்கான பணத்தை திருப்பி செலுத்தவேண்டும். மத்திய அரசின் ஒப்புதலோடு செயல்படும் அதானி நிறுவனத்துடன் மட்டுமே இந்த மின்சாரத்தைப் பெற முடியும் என்ற சூழல் தற்போது தெலங்கானாவில் நிலவி வருகிறது.


குறித்த காலகெடுவுக்குள் இதனைப் பெறாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்க இந்த சட்டத்திருத்தம் வழி செய்திருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களே இல்லாத அதானி குழுமம் போன்ற மின் உற்பத்தியாளர்களுக்கு வாடிக்கையாளர் பிடித்து தரும் முகவராக மத்திய பா.ஜ.க. ஆட்சி  செயல்பட்டு வருகிறது.


தெலங்கானாவில் 45,000 கோடி ரூபாய் முதலீட்டில் 8,000 மெகாவாட் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் அதானி குழுமத்திற்கு இதுவரை வாடிக்கையாளர் யாரும் இல்லாத நிலையில், மத்திய அரசின் இந்த சட்டத்தால், மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள தெலங்கானா மாநிலம் இதனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இதற்கு, தெலங்கானா மாநில அரசு உடன்படாத பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்துள்ளது. இதனால், தாமதிக்கும் ஒவ் வொரு ஆண்டும், முதல் ஆண்டு யூனிட் ஒன்றுக்கு 0.50 பைசா அபராதமும், இரண்டாம் ஆண்டு யூனிட் ஒன்றுக்கு ரூ.1-ம், அதற்கடுத்த ஆண்டுகளில் ரூ.2-ம் அபராதமாக விதிக்கப்படுமாம்.


மாநில அரசின் மொத்த மின்சார தேவையில் 19 சதவீதம் தனியாரிடமிருந்து பெறவேண்டிய சூழ்நிலை யில், பெரும் தொகையை அபராதமாக செலுத்த விரும்பாத தெலங்கானா அரசு தற்போது அதானியின் தயவை நாடவேண்டிய சூழ்நிலையில் உள்ளதுடன், மின்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டிய நிலையில் உள்ளது.


2014-இல் மின்சார பற்றாக்குறை மாநிலமாக இருந்த தெலங்கானாவை மாநில அரசின் முயற்சியால் நீர் மின், அனல் மின் நிலையம் உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களால் ஆறு ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மாநில அரசுகளுக்கு மேலாக மத்திய அரசு மட்டுமல்ல - அதானிகளும் கோலோச்சும் பரிதாப நிலை - நடப்பது கார்ப்பரேட் ராஜ்ஜியம் தானே!


இதே நிலைதான் ஒடிசா மாற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அனல்மின் நிலையங்களில் இருந்து தமிழகம் வரை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, தற்போது அந்த மாநிலங்களும் அதானியிடம் கையேந்தி உள்ளன.


மாநிலத்தைத் தனியாரிடம் கையேந்த வைப்பதற்கு ஒரு மத்திய அரசு தேவையா?


Comments