பா.ஜ.க.வின் வன்முறை பீகாரில் தொடக்கம்!

பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், பீகாரின் பல பகுதிகளில் பாஜகவினர் ஆடிப்பாடி வெற்றிக் கொண்டாட்டங்களில் களம் இறங்கினர். அதன் ஒரு பகுதியாகக் கிழக்கு சம்பாரனில் உள்ள ஜாமுவா என்ற கிராமத்தில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.


ஜாமுவா பகுதிக்குட்பட்ட தொகுதியில் பாஜகவின் பவன் குமார் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றுள்ளார். இதைக் கொண்டாடிய அக்கட்சியினர், வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதன் படி ஊர்வலம் சென்ற பாஜகவினர் அங்கே உள்ள மசூதி ஒன்றைச் சூறையாடினர். அப்போது உள்ளே தொழுகையில் இருந்த 5 பேருக்குக் காயம் ஏற்பட்டது.


'ஜெய் சிறீராம்' என்ற முழக்கமிட்டபடி மசூதியைச் சூறையாடிய அவர்கள், இரண்டு வாயில்களையும் அடித்து நொறுக்கினர். மசூதியின் ஒலிப் பெருக்கியும் தாக்குதலின் போது சேதப்படுத்தப்பட்டது.


இது குறித்து மசூதியின் காப்பாளர் மஹர் ஆலம் கூறியதாவது:


"பவன் ஜெய்ஸ்வாலின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர்வலத்தில் 500 பேர் இருந்தனர். அவர்கள் மசூதி அருகே வந்தபோது திடீரென கற்களை வீசத் தொடங்கினர். 'ஜெய் சிறீராம்' என்றபடியே கற்களை வீசி மசூதியைச் சேதப்படுத்தினர்" என்று கூறினார்.


இது குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் பவன் குமார், தேர்தல் பிரச்சாரத்தின் போது "முசுலீம்கள் எங்கிருந்து இங்கு வந்தார்களோ அங்கேயே அவர்களை அனுப்புவோம், இங்குள்ளவர்கள் எல்லாம் நமது கலாச்சாரத்தில் வாழவேண்டும், ராமர் கோவில் தான்  இங்கு இருக்கவேண்டும் மற்றவை நமக்கு ஏன்?" என்று பேசியிருந்தார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டது. ஆனால், அவர் குறிப்பிட்ட மதத்தைக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று கூறியதை ஏற்று அந்தப் புகாரைத் தேர்தல் ஆணையம் நிரகரித்துவிட்டது.


அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஆட்சி அமைந்தாலும் இவர் கட்சியைவிட பா.ஜ.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் நடைமுறையில் பா.ஜ.க. ஆட்சிதான் அங்கு கொடி கட்டிப் பறக்கப் போகிறது.


அரசியலில் பழம் தின்ற அனுபவசாலியான நிதிஷ்குமார் சேராத இடம்தனில் சேர்ந்த குற்றத்திற்காக - பதவி கிடைத்தாலும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கப் போகிறார் என்பது மட்டும் இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.


பதவி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பதற்கு நிதிஷ்குமார் ஓர் எடுத்துக்காட்டு என்பதில் அய்யமில்லை. இவர் பொம்மை முதல் அமைச்சராகவேயிருப்பார் - இலகான் பா.ஜ.க.வின் முரட்டுக் கைகளில்தான் இருக்கும்.


பா.ஜ.க. தன் வன்முறை நிகழ்ச்சி நிரலுக்கு ஆரம்பப் புள்ளியை வைத்து விட்டது. தேர்தல் வெற்றி விழா என்ற பெயரில் சிறுபான்மையினரின் மசூதியைத் தாக்குவது என்பது அவர்கள் கலாச்சாரமே!


450 ஆண்டு கால வரலாறு படைத்த ஒரு மசூதியை, மட்டரகமான புத்தியோடு, இடித்துத் தரை மட்டமாக்கியவர்களுக்கே அந்த இடம் சொந்தம் - அங்கே ராமன் கோயிலை இடித்தவர்களே கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாட்டில் எதுதான் நடக்காது?


நாட்டின் எதிர்காலம் இருள் கவ்விக் கிடக்கிறது. மதச் சார்பற்ற சக்திகள் வீறு கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும். வீதி மன்றங்கள்தான் பாசிச சக்திகளுக்குத் தீர்ப்பு வழக்கும் சக்தியாகும்.


பீகாரின் எதிர் காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்றாலும், லாலுவின் மகனான இளைஞர் (வயது 31) மக்கள் சக்தி படைத்தவர் என்ற முறையில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார் என்று நம்பலாம்!


Comments