அடுத்து புத்தர் சிலை உடைப்பு காலித்தனம் எல்லை மீறிவிட்டது


பல்லாவரம்,நவ.4, சென்னை பல்லாவரத்தில் மலையில் உள்ள புத்தர் சிலை சேதப்படுத்தப்பட் டுள்ளது.


சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் உள்ள பல்லாவரம் பெரிய மலை மேற்பகுதியில், அருள் நிலை புத்தர் ஆலயம் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்த கோவில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இம்மலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, இரண்டரை அடி உயரத்தில், கல்லால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 1ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத நபர்கள், புத்தர் சிலையின் தலை மற்றும் கையை உடைத்து சேதப்படுத்தினர். மறுநாள் காலையில், நிர்வாகிகள் சென்ற போது, சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின், உடைக்கப்பட்ட பகுதிகள் ஒட்டப்பட்டன. மலையில் உள்ள புத்தர் சிலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம், பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற் கிடையில், குடிபோதையில் புத்தர் சிலையை உடைத்து சேதப் படுத்தியதாக, ஜமீன் பல்லாவரம், வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜி, 26, வினோத்குமார், 26, ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக, பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் தெரிவித்தார்.


 


பேரறிவாளன் விடுதலை விவகாரம்


ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி


புதுடில்லி, நவ.4, முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, அதிருப்தி அளிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பேரறிவாளன் உள்பட 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2018 செப்., 9இல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம், ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஆளுநர் முடிவு அறிவிக்காத நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி, பேரறிவாளன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று (3.11.2020) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது, ஆளுநர் முடிவு அறிவிக்காமல் இருக்கிறார். இந்த நேரத்தில், அதிகார வரம்பை பயன்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனால், மாநில அரசின் பரிந்துரை, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 


மனு ஆட்சியே வந்துவிட்டதா?


மனு ஸ்மிருதி குறித்து கேள்வி அமிதாப்மீது காவல்நிலையத்தில் புகாராம்


மும்பை,நவ.4, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மனு ஸ்மிருதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மராட்டிய மாநில, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.


நடிகர் அமிதாப் பச்சன், 'கோன் பனேகா குரோர்பதி' எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை, பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின், 12ஆவது, 'சீசன்', 'சோனி டிவி'யில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த, 30ஆம் தேதி ஒளிபரப்பான சிறப்பு அத்தியாயத்தில், சமூக செயற்பாட்டாளர் பெசவாடா வில்சன் மற்றும் நடிகர் அனுப் சோனி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அமிதாப், கடந்த, 1927ஆம் ஆண்டு டிசம்பர், 25ஆம் தேதி, அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளை தீயிட்டு எரித்தனர்' என, கேள்வி கேட்டார். இதற்கு விடையாக, விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக் வேதம், மனு ஸ்மிருதி என்ற நான்கு பதில்களை தேர்வாக கொடுத்தார். போட்டி யாளர்கள், மனு ஸ்மிருதி என்ற விடையை அளித்தனர்; இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங் களிலும், இது விவாதப் பொருளாகி உள்ளது.


இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் 'சோனி டிவி' நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மராட்டிய மாநில, பா.ஜ.க. எம்.எல்.ஏ., அபிமன்யு பவார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: அமிதாப்பின் கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளுமே, ஹிந்துக்களின் புனித நூல்களின் பெயர்களாக உள்ளன. ஹிந்துக்களின் உணர்வு களை புண்படுத்த வேண்டும் என்ற அவரது நோக்கம் தெளிவா கிறது. இதன் வாயிலாக, ஹிந்துக்களின் புனித நூல்கள் எரிக்கப்பட வேண்டியது என்ற தவறான புரிதல் ஏற்படக்கூடும். இது, ஹிந்துக்கள், பவுத்தர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Comments