சிறுமீன்கள்தான், திமிங்கலங்கள்

சிறுமீன்கள்தான்? திமிங்கலங்கள்...?மூடநம்பிக்கைகள் எப்படி நம் மக்களின் வாழ்வைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கி, மற்றவர்கள் முன் பரிதாபத்திற்குரிய கேலிப் பொருளாக, பாதிக்கப்பட்டவர்களை ஆக்கி விடுகிறது என்பதற்கு அன்றாட ஏடுகளில், ஏமாற்றுவோரும், அவர்களை நம்பி ஏமாறுப வர்களும் பற்றிய ஏராளமான செய்திகளுக் குப் பஞ்சமே இல்லை!


எவ்வளவுதான் இத்தகைய கேடுகள் பற்றிய செய்திகள் நாளும் தவறாமல் வந்தா லும் அதிலிருந்து எந்த பாடத்தையும், படிப் பினையும் கற்று வாழும் வாழ்க்கையை நம் மக்கள் கற்றுக்கொள்ளவில்லையே!


அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவின் படி, அடிப்படைக் கடமைகளில் ஒன்று அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவது என்பதாகும். அந்தப் பிரிவு வெறும் ஏட்டுச் சுரைக்காயே! காரணம் நம் நாட்டு ஊடகங் களில், செய்தித் தாள்களில் இப்படிப்பட்ட செய்திகளை ஒருபுறம் வெளியிட்டுக் கொண்டு மற்றொரு புறம் இராசிபலன், எண் கணித பலன், குரு பெயர்ச்சி பலன் என்று மக்கள் அறியாமையை தங்களது கல்லாப் பெட்டியை நிரப்பக் கிடைத்த மூலதனம் என்று நினைப்பது அதைவிடக் கொடுமை யிலும் கொடுமை!


எத்தனை பெரியார்கள் தேவையோ, தெரிய வில்லை; தாங்களாக செய்யத் தவறினும், பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்றவர்களைத் தடுக்காமலிருந்தால் இதுபோன்ற குற்றங்க ளும் குறைய நிறைய வாய்ப்பு ஏற்படக் கூடும்!


30.10.2020 அன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி!


பில்லி - சூனியம் எடுப்பதாக


102 பவுன் நகை, ரூ.9 லட்சம் மோசடி


பெண் உள்பட 3 பேர் கைது


ஆலந்தூர், அக். 30- சென்னையை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:


‘‘பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நாராயணி (வயது 45) என்பவர், எங்கள் குடும்பத்தினருக்கு பில்லி, சூனியம் வைத்து இருப்பதாகவும், அதை எடுக்க 45 நாள் பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி என்னிடமும், எனது உறவினர் களிடமும் இருந்து 102 பவுன் தங்க நகை கள், ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் வரை வாங்கி விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்.'' இவ்வாறு அதில் கூறி இருந்தார்.


இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கத்தில் இருந்த நாராயணியை கைது செய்தனர். மோசடி செய்த நகைகளை அடமானம் வைத்து உல்லாசமாக இருந்ததாகவும், 2-வது மகளுக்கு ஆடம்பரமாக திரு மணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.


இதையடுத்து நாராயணியிடயிருந்து வாங்கிய நகைகளை உருக்கி தங்கமாக விற்ற அடகுகடைக்காரரான பாலவாக் கத்தைச் சேர்ந்த ரத்தினலால் (52) மற்றும் அவரது மகன் ஹேம் நாத் (29)  ஆகி யோரும் கைது செய்யப்பட்டனர்.


- மேற்கண்ட செய்தித் தமிழ்நாட்டில் இந்த மோசடிப் பேர்வழிகளது அன்றாடப் பித்தலாட்டச் செயல்களுக்குச் சான்றல்லவா? மேலும் நித்தியானந்தாக்கள் இன்னமும் அரசுகளின் ‘கண்ணாமூச்சி' விளையாட் டினால், தயவால் கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட், விசா, தனி நாணயம் எல்லாம் தயாரித்து அடிக்கடி தொலைக்காட்சிகளில்  காட்சி தருவதும் எப்படி சாத்தியம்?


மனம் வைத்தால் இத்தகைய மோசடி சாமியார்களான சோம்பேறிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யும் ஆற்றல் இல்லாதவர்களா நமது காவல்துறையினர்?


சிறிய மீன்கள் தான் எங்களுடைய வலைக்குள் சிக்கும்; பெரிய திமிங்கலங்கள் வலைக்குள் நுழையாது; நாங்களும் கண்டு கொள்ள மாட்டோம் என்பதா?


சிறுமீன்களைவிட, பெரிய திமிங்கலங் களின் மோசடியை அனுமதித்தால், நாடு சாமியார்களின் நாடாகி விடும்! அதைவிட காடு சிறந்தது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆகிவிடக்கூடும்!


எச்சரிக்கைப் பாடம் பெறுங்கள்!


Comments