வேளுக்குடி வேதியர்க்கு வினாக்கள்


இவ்வார 'துக்ளக்' (11.11.2020) முழுவதும் மனுஸ்மிருதிக்கே அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.


சகோதரர் திருமாவளவன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டக் கருத்தரங்கில் மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் உண்மையை எடுத்துச் சொன்னாலும் சொன்னார் - பா.ஜ.க.வினரும் சங்பரிவார்களும் பார்ப்பனர்களும் இடுப்பு வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் ஆத்திரத்தில் அம்மணமாக ஆடித் திரிகிறார்கள்.


ஆதாரப் பூர்வமாக இத்தனையாவது அத்தியாயம் - இத்தனையாவது சுலோகம் என்று எடுத்துக்காட்டிய நிலையில் அதற்குப் பதில் சொல்ல முடியாத பரிதாப நிலையில் விழி பிதுங்கி, உடல் வியர்த்து உளற ஆரம்பித்து விட்டனர்.


இப்படி ஆதாரத்தோடு அத்தியாயம் எண், சுலோகம் எண்களைக் கூறி எடுத்துச் சொன்ன பிறகும்கூட யாரோ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் என்ற நாமதாரியை தேடிப் பிடித்து இவ்வார துக்ளக்கில் (பக்கம் 13) எழுத வைத்துள்ளனர்.


அத்தியாயம் - சுலோகங்களைக் குறிப்பிட்டு எழுதிய பிறகும், அய்யங்கார் வாள் எழுதுகிறார்:


பெண்கள் இழிவாகக் கூறப்பட்டிருந்தால், அது எந்த ஸ்லோகம் என்று குறிப்பிட்டு, அதன் அர்த்தம் தெரிந்தால் அதையும் சொல்ல வேண்டும். ஆனால் மனுஸ்மிருதியை விமர்சிக்கும் யாரும் அப்படி தெளிவாகக் கூறவில்லை என்று எழுதுகிறாரே - இவர்களை என்ன சொல்ல!


ஏதோ இந்த அய்யங்கார் தான் நாம் எழுதியதைப் படிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் - 'விடுதலை' ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியவற்றை அறிவு நாணயத்தோடு துக்ளக் ஆசிரியர் குழுவில் ஒரே ஒருவராவது யோக்கியமாக எடுத்துக் காட்டியிருக்க வேண்டாமா?


கிருஷ்ணன் அய்யங்கார் ஸ்வாமிகள் கேட்ட தற்காக ஒன்றிரண்டை மீண்டும் ஆதாரத்தோடு இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.


1) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 14 என்ன கூறுகிறது!


மாதம் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.


2) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 17 என்ன கூறுகிறது?


படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.


3) மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 19 என்ன கூறுகிறது?


மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ள வர்களென்று அனேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குத் திருஷ்டாந்தரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில்  சொல்லிய பிரயாச்சித்தத்தைக் கேளுங்கள்.


எடுத்துக்காட்டுக்கு இவை மூன்றும் போதும் என்று கருதுகிறோம்.


அடுத்த 'துக்ளக்' இதழில் திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இதுகுறித்து வியாஸம் எழுதுவாரா?


அறிவு நாணயம் இருந்தால் 'துக்ளக்' அவரிடம் பதிலைப் பெற்றுப் பிரசுரிக்குமா? எங்கே பார்ப்போம்.


எந்தப் பதிப்பில் யார் எழுதி, யாரால் வெளியிடப் பட்டது என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள். அதற்கும் இடம் கொடுக்காமல் அதற்கும் இதோ ஆதாரம்:


இவ்வளவுக்குப் பிறகும் பழைய பொய் மூட்டைகளை  அவிழ்த்துக் கொட்டினால் உங்கள் யோக்கியதையின் ஆபாசம் இதுதான் இதுதான் என்று தமக்குத்தானே அம்பலமாகும்.


Comments