கேள்விக்குறியாகப் போகும் கருத்துச் சுதந்திரம்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் டிஜிட்டல் செய்தி, ஓடிடி இயங்கு தளம் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்கள் செயல்படும் என்று உத்தரவை மத்திய அரசு உண்மையில் பிறப்பித்துள்ளது.


 விரல் விட்டு எண்ணக்கூடிய செய்தித் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களைத் தவிர்த்து பெரும்பான்மை ஊடகங்கள் மத்திய பா.ஜ.க. அரசின் செய்தித்தொடர்பு வெளியீடுகளாகவே மாறிவிட்டன.


 இந்த நிலையில் மக்களிடம் மத்திய அரசின் உண்மை முகத்தை கொண்டு செல்ல சமூகவலைதளங்களுக்கும்,  யூ டியூப் சேனல்கள் எனப்படும் காணொளித்தளங்களுக்கும்  பெரிதும் பயன்படுகின்றன, முக்கியமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் யு டியூப் சேனல்கள் பெரிதும் வரவேற்பை பெற்று வருகின்றன,


 தற்போது இதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அரசுக்கு எதிராகச் செயல்படும் அனைத்து தளங்களையும் முடக்கும் பணியில் இறங்கியுள்ளது.


 முக்கியமாக மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் இரண்டு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ.க. அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்ற ஒரே நோக்கோடு அமித்ஷா - மோடி கூட்டணி பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. அதில் சமூக ஊடகங்கள் மூலம் பா.ஜ.க.விற்கு எதிராக இருக்கும் அனைத்தையும் முடக்கவேண்டும் என்பது முக்கியமான ஒன்று. இதனால் தான் புதிய உத்தரவு ஒன்றை அண்மையில் பிறப்பித்துள்ளது.


தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப் பும், பதிவேற்றம் செய்யும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு என்று உரிய சட்டம் இதுவரை இல்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, டிஜிட்டல் ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை அளித்தாலும், இவை எந்தவொரு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்படவில்லை.


கடந்த நவம்பர் 9-ம் தேதி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இணைய ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உத்தரவில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவைச் செயலகத்தின் செயலாளரால் வெளியிடப்பட்ட உத்தரவில்,  "அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் டிஜிட்டல் ஊடகங்களை அதிகரப்பூர்வமாக கொண்டுவந்தாலும்,  டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை  மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் (அ) உரிய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் செய்தி  ஊடகங்கள் கொண்டு வரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.


தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் “ஆன் லைன் உள்ளடக்க வழங்குநர்களால் கிடைக்கப்பெற்ற திரைப்படங்கள் மற்றும் ஆடியோ-காட்சி திட்டங்கள்” மற்றும் “ஆன்லைன் தளங்களில் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களின் உள்ளடக்கம்” ஆகியவை அடங்கும் என்று இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகளை அமைச்சரவை செயலகம் திருத்தியுள்ளது.


Comments