சேலத்தில் தளபதி மு.க. ஸ்டாலின் சிங்கநாதம்!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் 21.11.2020 அன்று "தமிழகம் மீட்போம்! 2021” - தமிழக சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை - கர்ச்சனை சிறப்பானது.


'சேலம் செயலாற்றும் காலம்' - என்ற தலைப்பிட்டு அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் இன்றைக்கு 76 ஆண்டுகளுக்கு முன் தீட்டினார் ('திராவிட நாடு' 13.8.1944 'குடிஅரசு' 19.8.1944).


அந்த சேலத்தின் சிறப்புகள் பற்றியும் - அந்த சேலத்தில் தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (27.8.1944) - அந்த சேலத்தில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் தங்கி திரைப்படங் களுக்கான கதை வசனங்களைத் தீட்டினார் என்பது உட்பட, சேலத்தில் நடைபெற்ற திமுக மாநில மாநாடுகளின் முக்கியங்களைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துரைத்த தி.மு.க.தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சேலம் மாவட் டத்தில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுக் காட்டினார்.


ஓர் அரசியல் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனைச் சாதனைகள் என்பது சாதாரணமானதல்ல - வேறு எந்தக் கட்சியும் இந்த அளவு மார்தட்டிச் சொல்ல முடியுமா என்றால், அது கனவிலும் எதிர்பார்க்க முடியாததே!


சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா திமு.க.வின் சாதனைகள்பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதே நாளில்தான் தளபதி ஸ்டாலின் அவர்கள் ஒரு மாவட்டத்தில் மட்டும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் பற்றி நீண்ட பட்டியலைத் தந்திருக்கிறார்.


இதே சேலத்தில்தான் 1971ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், ஊர்வலமும் நடைபெற்றன. அந்தமாநாட்டில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தி "தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா வாக்கு" என்று பார்ப்பனர் களும், அடிபொடிகளும் பிரச்சாரம் செய்தனர்.


விளைவு - மக்கள் தி.க.-தி.மு.க. பக்கம் நின்று எப் பொழுதும் பெற்றிராத மாபெரும் வெற்றியை திமுக.வுக்கு அளித்தனர். அந்தவகையில் திராவிட இயக்கக் கொள்கை களுக்காக வெற்றிக் கொடியை வானளாவப் பறக்க விட்ட பெருமைக்குரிய பூமி சேலம் ஆகும்.


அத்தகு சேலம்பற்றி திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மிக மிகப் பொருத்தமாக ஒரு வரலாற்றுக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.


"மக்கள் இயக்கமாகவும், தமிழர்களின் உரிமைக் காப்பு இயக்கமாகவும் இந்த இயக்கத்தை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மாற்றிய ஊர் இந்தச் சேலம். அந்த  மக்கள் இயக்கம்தான் இன்றைக்கு சமூகத் தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடித்தளம் அமைத்த ஊர் இந்தச் சேலம்" என்று ஓர் அருமையான வரலாற்றுப் பதிவைப் பொறித்து விட்டார்.


தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா சொன்ன பிரகடனத்தின் வரியில் பிசிறு இல்லாமல் பதிவு செய்திருப்பதன் பொருளை இன்றைய இளைய, புதிய தலைமுறையினர் உணர வேண்டும். நெஞ்சில் ஏந்தவும் - ஏற்றவும் வேண்டும்.


இதற்கு முன்பே "தி.மு.க.வின் பயணத்தின் பாதையை முடிவு செய்வது பெரியார் திடலே!" என்று பிரகடனப் படுத்தினார் தளபதி.


தந்தை பெரியார் மறைந்து முதலாண்டு நினைவு நாளில் (24.12.1974) திமுக தலைவர், முதல் அமைச்சர் மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் எழுதினார்.


"தி.க. தி.மு.க. என்று இரண்டாக இருந்தாலும், இரு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே இலட்சியத்திற்கா கத்தான் பாடுபட்டு வருகிறோம்.


ஒன்று ஆட்சிப் பொறுப்பில் அரசியலில் அந்தப் பணியைச் செய்கிறது. மற்றொன்று வெளியே இருந்து அந்தப் பணியைச் செய்கிறது, அவ்வளவுதானே தவிர இரு வேறு அமைப்புகள் அல்ல."


இதைப் படித்துதான் தளபதி சொன்னார் என்பதல்ல. எண்ண ரத்தவோட்டம் ஒன்று என்பதன் அடையாளமே இது.


இந்த உணர்வுதான் இந்த மண்ணின் அடையாளமும், உறுதிப்பாடும் ஆகும். இதனை முறியடிக்க எந்தக் கொம் பர்களாலும் முடியாது. இதனை மேலும் வலுப்படுத்துவோம் - வளப்படுத்துவோம்! வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!


Comments