தீக்கதிருக்குப் பதில் - தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை: தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன

தீக்கதிருக்குப் பதில் - தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை: தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன?


உண்மைத் தகவல்கள் இதோ...!


- க.அருள்மொழி


நேற்றைய (4.11.2020) தொடர்ச்சி....


பண்டிதர் நேருவின் யோசனையே!


நான் இப்போது சொல்லப் போவது, ஜனவரி 2ஆம் தேதி மேயர் அவர்கள் வீட்டில் கூடிய சென்னை எல்லாக் கட்சிப் பிரமுகர் கூட்டத்திலும், ஜனவரி 5ஆம் தேதி மயிலாப்பூர் இலட்சுமிபுரம் யுவசங்கத்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்திலும், பிப்ரவரி 1ஆம் தேதி பீச்சில் ஒரு இலட்சம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்திலும், பிப்ரவரி 13ஆம் தேதி கார்ப்பரேஷன் கட்டிடத்தில் மேயர் காரியாலயத்தில் கூடிய எஞ்சிய 3 நாட்டின் பிரமுகர்கள் கூட்டத்திலும் சொன்னவைகளேயாகும்.ஆனால் இங்கு அதைத் திரும்பவும் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லி ஆதாரமும் காட்டப் போகிறேன். என் சங்கதி எப்போதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எந்தச் சங்கதியும் எங்கும் பேசப்படுவதாக இருக் கும். ஆகையால் சொல்லுகிறேன். தயவு செய்து காது கொடுக்கக் கோருகிறேன். நேருவே மூலப் புருஷர்: வாஞ்சு அவர்கள் அறிக்கைக்கு வாஞ்சு அவர்களோ, இலங்கா சுந்தரம் அவர்களோ மூலப் புருஷர்கள் அல்ல; அந்தப் பிரச்சினைகளுக்கு அதாவது ஒரு அய்கோர்ட், ஒரு கவர்னர் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் பொது வாக இருக்க வேண்டும் என்ற யோசனை தோன்றிய தானது பண்டிதர் நேரு அவர்களின் மூளையிலேயாகும்.அவர்தான் டாக்டர் இலங்கா சுந்தரம் அவர்களுக்கு இந்தப்படி செய் என்று யோசனை சொன்னவர். நேரு அவர்கள் உபதேசத்தாலேயே இதைச்சொல்லி வலியு றுத்தி “இந்தப்படி இல்லாவிட்டால் ஆந்திரருக்கு ஆந்திர ராஜ்யமே வேண்டாம்” என்று சொல்லும் நிலையை அடைந்தார்.ஆந்திரர்களையே கூப்பிட்டு நீங்கள் இந்தமாதிரி செய்யுங்கள் என்று நேரு அவர்கள் சொல்லி இருப்பார்களே யானால், ஜஸ்டிஸ் வாஞ்சு அவர்களிடம் சொல்லி அனுப்புவது அவருக்கு முடியாததாகவோ கூடாததாகவோ இருந்திருக்க முடியுமா? இதோ பாருங்கள் 18.12.1952ஆம் தேதியில் நேரு அவர்கள் இலங்கா சுந்தரம் அவர்களுக்குச் சொன்ன உண்மையை இலங்கா சுந்தரம் அவர்கள் ஜனவரி மாதம் 18இல் நீதிபதி வாஞ்சு அவர்களிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருக் கிறார். “சென்னை நகரம் பொது நிர்வாக சர்க்கார், நிர்வாக வட்டாரமாக்கப்பட வேண்டும். ஆந்திராவின் தலை நகரும் அந்தச் சென்னை நகரிலேயே அமைக்கப்பட வேண்டும். புதிய ராஜ்யத்துக்காக அனாவசியமாக இரட்டிப்புச் செலவு செய்யவேண்டியதில்லை" என்று பிரதமர் நேரு 18.12.1952இல் என்னிடம் தெரிவித்தார். மற்றும் ஆந்திரா ராஜ்ய துவக்கக் காலத்திலாயினும் இரு ராஜ்யங்களுக்கும் ஒரே கவர்னரும், ஒரே உயர்நீதி மன்றமும் இருக்கவேண்டுமெனவும் பிரதமர் நேரு தெரிவித்தார். நான் பிரதமர் நேருவின் கருத்தை முழு அளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆந்திரப் பொதுமக் களும் அவரின் இந்த யோசனையை முழு அளவுக்கு ஆதரிப்பார்களென்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்று கூறியிருக்கிறார். இது ஜனவரி 19ஆம் தேதி ‘இண்டியன் எக்ஸ்பிரசில்’ வெளியாக்கப்பட்டிருக்கிறது. அதில் கண்டுள்ள ஆங்கில வாசகமாவது (பெரியார் கடற் கரைப் பொதுக் கூட்டத்தில் 2.5 இலட்சம் மக்கள் முன்னி லையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வந்திருந்த செய்தியைப் படித்துக் காட்டினார்.)


Andhra without Hq. In City
‘PUBLIC OPINION WON’T ACCEPT”
New Delhi, Jan. 18
Dr. Lanka Sundaram, M.P. from Andhra and President of the All-India Linguistic States Conference in his memorandum to Mr. Justice Wanchoo has suggested that Madras City should be made a centrally administered area and the capital of Andhra located in it. Without this being done, Dr. Sundaram said ‘Andhra public opinion would not accept the Andhra State. .....Dr. Sundaram said that the Prime Minister Nehru had told him on Dec. 18, 1952. that there need not be unnecessary duplication of expentiture for the new state. Mr. Nehru had also expressed that there should be one Governor and one High Court for both the states at any rate for the initial years of the life of the Andhra State. “I am in entire agreement with the view of the Prime Minister and I have no doubt that Andhra public opinion would view this proposal with unqualified favour”.


பரிகாரம் என்ன?


இதன் கருத்து என்ன? நீங்கள் பிரிந்துக்காணப் போகும் ஆந்திர ராஜ்யத்திற்கு இரட்டிப்புச் செலவு வேண்டாம். “ஆந்திராவுக்கும் சென்னைக்குமாக ஒரே நிர்வாகக் கவர்னர் இருக்க வேண்டும்” என்பதாகும்.இதிலிருந்து என்ன நினைக்கிறீர்கள்; அனாவசியமாய் இலங்கா சுந்தரத்தின் மீதும், வாஞ்சு மீதும் குறை கூறுவதில் என்ன பயன்? யார் தவறுக்கு யாரை நோவது? இதற்குக் காரணம் எனக்குத் தெரியும். நேரு அவர்களுக்கு எங்களைப் பற்றிய பயம் மாத்திரம் அல்ல; இந்த மேயர் அவர்களிடமும், மதிப்புக்குரிய பக்தவச்சலம் அவர்களி டமும் நம்பிக்கை கிடையாது; காரியத்திற்கு இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். (மேயரைத் தொட்டுக்காட்டி, பக்தவச்சலம் அவர்களைக் கைநீட்டிக் காட்டிச் சொன்னார். அவர்களும் மேடையில் உள்ளவர்களும் பொதுமக்களும் சிரித்தார்கள்.) நேரு அவர்கள் சென்னையை அடக்கி வைத்திருக்கவேண்டிய நாடு என்றுதான் கருதியிருக்கிறார் என்று நான் கருதுகிறேனே ஒழிய, நம்மை ஒரு சுதந்திர நாட்டாராகக் கருதி இருக்கிறார் என்று நான் எண்ணவில்லை. இது என் தாழ்மையான கருத்து. மேயர் அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும். இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்சி மிக்க மேயர் திருத்தினால் நன்றியோடு ஒப்புக் கொள்ளுகிறேன்.பரிகாரக் கூட்டம்:இந்தச் சங்கதியை இங்கு ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமா கும். வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய முடியும்? அப்படி செய்வதற்குக் கையாளும் முறை என்ன? இவைதான் இங்குச் சிந்திக்க வேண்டிய முக்கிய காரணமாகும்.


மக்கள் தயாராக இல்லையே!


ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் மேயர் மன்னிக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிக் காரர்களுக்குள் காங்கிரஸ் ஒரு பெரியகட்சியார், எப்படி யென்றால், ஏன் என்றால் அந்தக் கட்சியார்தான் இந்த நாட்டை ஆளும் கட்சியாராக இன்று இருக்கிறார்கள். ஆதலால் அதை நாம் மறுக்க முடியாது.இந்தக் கண்டனக் கூட்டத்தில் அவர்களும் பெருவாரியாகக் கலந்து இருக் கிறார்கள். வாஞ்சு அறிக்கையை இன்று “அதிகாரமற்ற அறிக்கையல்ல, அது ஒரு சிபாரிசு அறிக்கைதானே, அதுவும் ஹேஸ்யம் தானே, அன்றியும் அது முடிந்த தல்லவே” என்று விவகாரத்திற்குச் சொல்லிவிடலாம். ஆனாலும் மாஜி மந்திரி பக்தவச்சலம் அவர்களே என்னோடு பேசும் போது, “அது ஹேஸ்யம் அல்ல உண்மை என்றுதான் கருதவேண்டும்” என்று சொன்னார். எப்படியோ இருக்கட்டும். நமது கண்டனங்களை தந்தி தீர்மானம் மூலமாகப் பண்டிதருக்குச் சொல்லுகிறோம்; அவர் அதை மதித்தால் நமக்கு நல்ல வாய்ப்புத்தான்; அவர் இலட்சியம் செய்யாமல் அறிக்கைப்படி காரியத்தை முடிவு செய்துவிட்டால் மேலால் நாம் என்ன செய்வது? -என்பதைக் காட்ட வேண்டாமா? எந்த அளவுக்கு நாம் தயாராய் இருக்கிறோம்? என்பதைக் கலந்தாவது பேசிக் கொள்ள வேண்டாமா? அதற்கு மக்கள் தயாராய் இருக் கிறார்களா என்று இந்தக்கூட்டத்தில் அறிய வேண்டாமா? இஷ்டப்படாத காரியம் நடப்பது என்றால், அதைத் தடுக்க நாம் சிறிதாவது சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு ஆக சிறிதாவது கஷ்ட நஷ்டங்களை அனுபவித் தாவது சிறிது எதிர்ப்பாவது காட்ட வேண்டும். அப்படி இல்லையானால் இதற்குத் தீவிர எதிர்ப்பு இல்லை என்று கருதி மேலிடத்தார் உறுதி செய்துவிட்டால், அப்புறம் நமக்கு எவ்வளவு கஷ்டம் தொல்லை ஏற்படும்? அந்தத் தொல்லை கஷ்டங்களை இப்படி ஒன்று சேர்ந்து அனுப விக்க முன்வர முடியுமா? என்பது தெரிய வேண்டாமா?


சங்கடமான நிலைமை


நான் வரப்போகும் கஷ்டத்திற்கு இன்று இங்கு உள்ள காங்கிரசுக்காரர்கள் பின் வாங்குவார்கள் என்று கருதிப் பேசுவதாகத் தயவு செய்து யாரும் கருதக் கூடாது. மக்கள் அரசியல் காரணங்களுக்குக் கஷ்ட நஷ்டமடைவது, தியாகம் செய்வது என்பது இந்த நாட்டில் காங்கிரஸ்காரர் களால் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நானும் தியாகம் என்பதைக் காங்கிரசினால்தான் தெரிந்துகொண்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறேன். ஆதலால் நான் காங்கிரஸ் தோழர்களைப் பற்றி இப்போது என்ன கருதுகிறேன் என்றால், இன்று காங் கிரஸ் வேறு; கவர்ன்மென்ட் வேறு என்பதாக இல்லை. அவர்கள் தான் நாட்டை ஆளுகிறார்கள். அந்த ஆட்சி முறையில் பிரதம மந்திரி பண்டித நேருவினால் தோற்று விக்கப்பட்ட ஒரு காரியம் நேரு சர்க்கார் அவர்களின் முத்திரை பெறுவது, சாதாரண நிலையில் அசாத்தியமா னதாக இருக்க முடியுமா? அப்படி முத்திரை பெற்று விட்டால் காங்கிரஸ் தோழர்கள் தங்கள் தலைவர் முடிவு என்பதற்குத் தலைவணங்காமல் எப்படி இருக்க முடியும்? இது ஒரு சங்கடமான நிலைதான். ஆதலால் அதை அவர்கள் இங்கேயே கூற வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.கவனிக்க வேண்டும்:ஆனால் ஒரு எதிர்ப்பைச் சித்தரிக்க வேண்டி வந்தால் இந்த விஷயம் கவனிக்கப்படவேண்டியதாகும் என்று சொல்லிவிட்டு, காங்கிரஸ் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுகிற அளவில் ஒரு சிறிய தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற லாம் என்று மேயர் அவர்கள் அனுமதியை எதிர்பார்த்துக் குறிப்பிடுகிறேன்.


கண்டன நாள்!


அது என்னவென்றால் நாளது பிப்ரவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையைத் தமிழ்நாடு எங்கும் எல்லாக் கட்சியாரும் வாஞ்சு அறிக்கை கண்டன நாளாகக் கொண்டாட வேண்டுமென்று வேண்டுகோளும் அறிக் கையும் விடுத்து இருக்கிறேன். அதுவும் “சென்னையைப் பொறுத்தவரையில் 22ஆம் தேதி தவிர்த்து வேறுநாள் வைத்துக் கொள்ளலாம்” என்று மேயர் யோசனையை அனுசரித்துப் பொது மக்களுக்குத் தெரிவித்து இருக்கி றேன். கடையடைப்பு நாள்:அது தவிர்த்து வாஞ்சு அறிக் கையைக் கண்டிக்கிற அளவில் ஒரு வாரத்திற்குள்ளாக ஒரு நாளில் தமிழ் நாடெங்கும் கடை அடைப்பு, அர்த் தால் நடத்தலாம் என்றும் அதற்கு ஒரு நாள் குறிப்பிடலாம் என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறேன்.இதை மேயர் அவர்கள் ஏற்றால் ஓட்டுக்கு விடலாம்; இல்லா விட்டால் நான் வலியுறுத்தவில்லை. ஏனென்றால் எந்தக் காரணத்தாலும் மேயர் அவர்களின் அதிருப்திக்கு இடம் தரும் காரியம் இங்கு நடக்கக் கூடாது என்பது எனது கருத்தும் கவலையும் ஆகும்.நாம் ஒரு பலமான காரியத்தை எதிர்க்க வேண்டியவர்கள் கூடிச் செய்கிற காரியத்தில் நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கக்கூடாது என்பது என் கருத்தாகும்." ('விடுதலை', 17.02.1953)


கருப்புக் கொடிப் போர்!


22.02.1953 அன்று சென்னை வந்த குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்துக்குத் திராவிடர் கழகத் தின் சார்பில் குத்தூசி குருசாமி தலைமையில் அய்யாயி ரத்துக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டினர். தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் வாஞ்சு அறிக்கை கண்டன நாள், “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” கொண்டாடப்பட்டது.08.03.1953 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் செட்டிநாட்டு முத்தையா செட்டியார் தலைமையில் கூடிய கூட்டத்தில் பேசிய ம.பொ.சி. “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், சர்வக்கட்சித் தலைவர்களும், சென்னைச் சட்டசபை ஆந்திரர் அல்லாத உறுப்பினர்கள் 200 பேரும், பார்லி மென்டிலிலுள்ள ஆந்திரரல்லாத உறுப்பினர்களும் பெரியார் ஈ.வெ.ராவும் எல்லோரும் சேர்ந்து மகஜர்மூலம் சென்னையில் ஆந்திரத் தலைநகரை ஒரு நாளைக்குக் கூட அமைக்கக்கூடாது என்று அறிவித்த பின்னும் சஞ்சீவ ரெட்டி கோரிக்கைக்கு மத்திய சர்க்கார் அசைந்து கொடுக்காது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசி யுள்ளார். ('விடுதலை', 09.03.1953)


சென்னை கடற்கரையில் சங்கமம்


ஆந்திரத் தலைநகர் பிரச்சினை - சென்னையில் மாபெரும் கூட்டம்:16.02.1953ஆம் தேதி மாலை 6 மணிக் குத் திருவல்லிக்கேணிக் கடற்கரையில், சென்னையில் தற்காலிகமாகக்கூட ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் நிறுவப்படுவதற்குத் தங்களின் உறுதியான எதிர்ப்பைக் காட்டுவதற்காகச் சர்வக்கட்சிப் பிரதிநிதித் துவமடங்கிய ஒரு மாபெரும் கூட்டம் நடைபெறும்.சென்னை மேயர் திரு.டி. செங்கல்வராயன் அவர்கள் தலைமை வகிப்பார். பெரியார் ஈ.வெ. இராமசாமி, திரு வாளர்கள் எம். பக்தவச்சலம், எஸ். முத்தையா முதலியார், எல்.எஸ். கரையாளர், ம.பொ. சிவஞானம் கிராமணி, கே. விநாயகம், உபயதுல்லா சாகெப், மீனாம்பாள் சிவராஜ் முதலியவர்கள் பேசுவார்கள். ('விடுதலை', 14.02.1953)


இந்தக் கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி "எனது போராட்டம்" என்னும் நூலில் கூறியிருப்பது போல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல. மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவல கத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத் துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னையில் தற்காலிகமாகக் கூட ஆந்திராவுக்குத் தலைநகராகக் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்தார். பெரியார் கிளர்ச்சி தொடங்கி விட்டார். இனி யார் யாரோ கிளர்ச்சித் தொடங்குவார்கள். என்னால் இதைச் சமாளிக்க முடியாது. முதல்வருக்கு வேறு ஆளைப்பார்த்துக் கொள்ளுங்கள்” என்று டில்லியில் நேருவிடம் சொல்லிவிட்டு வந்தார். ('விடுதலை', 13.03.1953)


ம.பொ.சியின் பொய்த் தகவல்


இந்நிலையில் தமிழ்நாடு மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் ம.பொ.சி வெற்றிபெற பெரியார் ஆதரவளித் தார். பல சிக்கல்களுக்குப் பிறகு அவர் வெற்றியும் பெற் றார். ஆனால் ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினையில் தமிழினத் தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ.ரா., “சென்னை ஆந்திரத் தில் இருந்தால் என்ன தமிழகத்தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப்போகிறது” என்று அறிவித்து விட்டார் என்ற பச்சையான பொய்யை ("எனது போராட்டம்", பக்.619) இல் ம.பொ.சி. எழுதி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதியுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும், கூறாமல் அவர் மவுனம் சாதித்தார்” ("எனது போராட்டம்", பக். 619)


ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சியினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக் கக்கூடாது என்று விண்ணப்பம் அளித்தனர். ('விடுதலை', 11.01.1953)


ம.பொ.சி. தான் மட்டும்தான் தலைநகரைக் காப்பதில் உறுதியாக இருந்தேன் என்று காட்டுவதற்காக எழுதப் பட்ட புனைக்கதையை தோழர் பாலகிருஷ்ணன் படித்து விட்டு போகிற போக்கில் தந்தை பெரியார், "சென்னை ஆந்திரத்தில் இருந்தாலென்ன? தமிழ்நாட்டில் இருந்தால் என்ன? திராவிடத்தில் தானே இருக்கப்போகிறது என தெரிவித்து விட்டார்.காமராஜர் இதுபற்றி கருத்து தெரி விக்க மறுத்துவிட்டார்" என்று சொல்லியிருக்கிறார்.


தோழர் பாலகிருஷ்ணன் ஒற்றை வரியில் சொல்லி விட்டதை நாம் இவ்வளவு ஆதாரங்களையும் திரட்டி மறுப்பு தெரிவித்து தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது. தோழரும், தீக்கதிரும் தன் தவறைத் திருத்திக் கொள் வார்களாக!


Comments