சூரப்பாவை  பணிநீக்கம் செய்யாமல் விசாரணை கேலிகூத்தாகிவிடும்!  

இரா.முத்தரசன் வலியுறுத்தல்



சென்னை,நவ.16 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,


அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர்கல்வித் துறையின் விசாரணையில்  ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சூரப்பாவை துணைவேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கல்வியாளர்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஆளும் தரப்பினர் மவுனம் காத்தும், அவரை ஆதரித்தும் வந்தனர். இப்போது நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணை யம் அமைத்து, சூரப்பா மீதான குற்றச் சாட்டுகள் விசாரிக்கப்படும் என அறி வித்தப்பட்டுள்ளது. இது தாமதமான முடிவு என்றாலும் விசாரணை நேர்மையாக நடப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.


குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பா நேர்மையிருந்தால் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். அவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாத நிலையில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். சூரப்பாவை தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், அவர் துணைவேந்தர் என்ற நிலையிலிருந்தே விசாரணையை சந்திக்க அனுமதித்தால் அது கேலிக்கூத்தாகவும், நடந்து போன ஊழல்களை மூடிமறைக் கும் முயற்சியாகவே முடியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.


எனவே நீதிபதி பி.கலையரசன் விசா ரணை ஆணையத்தின் அறிக்கையும், அதன் மீதான அரசின் நடவடிக்கையும் முடிவாகும் காலம் வரையிலும் திரு சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆளுநரை யும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


Comments