பீகாரில் மீண்டும் பார்ப்பன சாம்ராஜ்ஜியம்!

பிற்படுத்தப்பட்ட ஆர்.ஜே.டி. செல்வாக்கை ஒழிக்கவும் திட்டம்!பீகாரில் மீண்டும் பார்ப்பன சாம்ராஜ்ஜியம் - பிற்படுத்தப்பட்ட ஆர்.ஜே.டி. செல் வாக்கை ஒழிக்கவும் திட்டம்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:


இந்தியாவின் பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது பீகார் மாநிலம் - அசோகர் ஆண்ட பூமி, புத்தம் செழித்து அறம் வளர்த்து பிறகு பார்ப்பனச் சூழ்ச்சியில் மவுரிய சாம்ராஜ்ஜியம் திட்டமிட்டே அழிக்கப்பட்டது.


மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அர சனான பிரகத்திரதனின் படைத் தலைவன் புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் தலைமையில், பார்ப்பனர்கள் சதிச் செயலில் ஈடுபட்டார்கள். புஷ்யமித்ர சுங்கன், மவுரிய அரசனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து, தான்  ஆசைப்பட்ட படைத்தலைவர்  - சேனாதிபதி பதவியை அடைந்தான்.


பார்ப்பனர்களின் எதிர்வினைபிறகு கி.மு.185 இல் ஓர் இராணுவ அணிவகுப்பின்போது, தன் அரசனின் தலையை வெட்டிக் கொன்றான். இவன் இலக்கணக்காரர் பதஞ்சலியின் மாணவன். இவன் அரச பதவியை அடைந்தவுடன், வேத யாக முறைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, தானும் ராஜ சூய யாகத்தை நடத்தினான் என்பதே  மவுரிய அரசனின் கொலை - பார்ப்பனர்களின் எதிர்வினை என்பதற்கு உறுதியான சான்றாகும்.


பவுத்தர்களைச் சித்ரவதை செய்வதும், அவர்களின் மடங்களைப்பற்றி அவதூறு செய்வதும் அவனது முதன்மைக் கடமையானது. பாடலிபுத்திரத்திலும் (பாட்னா), அதைச் சுற்றியும் இருந்த பவுத்த மடங்களையும் எரித்த பிறகு, அவன் சாகாலாவுக்குச் சென்று (மேற்கு பஞ்சாபில் உள்ள சியால்கோட்) ஒவ்வொரு புத்த பிட்சுவின் தலைக்கும் 100 பொற்காசு அறிவித்தான். பர்னூ, இந்திய பவுத்த வரலாற்றுக்கு அறிமுகம் Historie on  Buddhisme Indian  - see Ambedkar (Baws Vol 3) பக்கம் 269. மேலும் சாஸ்திரி மற்றும் சீனுவாச்சாரியார் 1980, பக்கம் 139  யும் பார்க்க).


டாக்டர் அம்பேத்கரின் கருத்து


டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர் களது தனது ‘‘புரட்சியும், எதிர்புரட்சியும்'' என்ற முழுமை பெறாத நூலில், பவுத் தத்திற்கும், பார்ப்பனீயத்திற்கும் உள்ள போராட்டத்தை கடந்த காலத்தை மீட்ட மைப்பதற்கான எல்லைக் கல் ஆக்குகிறார்.


வீரியமிக்க, வைதீகத் தன்மையுடன் கூடிய எதிர்ப்புரட்சியை முன்னறிவிக்கின்ற நிகழ்வாக கி.மு.185 அரசக் கொலையை நோக்குகிறார்.


மேற்கத்திய வரலாற்றாளரிடமிருந்து டாக்டர் அம்பேத்கரும், கே.பி.ஜெய்ஸ் வாலும்கூட மாறுபட்டு, வழக்கமாகச் சொல்லப்படுவது  போலன்றி, ‘‘இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சி என்பது, மெதுவாக இந்து மதத்துக்கு ஒத்துச் சென்ற பிறகு, அதனால் உள்வாங்கப்பட்டது அல்ல. மாறாக, வன்முறையினால் ஏற்பட்டது'' என் பதே டாக்டர் அம்பேத்கரின் கருத்தாகும்.


மிகப்பெரிய அபாய அறிவிப்பு!இந்தப் பின்னணியை மனதிற்கொண்டு இன்றைய பீகாரின் அரசியல் மாற்றம் - மீண்டும் அங்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சகோதர சமூகங்களை கட்சி அரசியலால் பிளவுபடுத்தி, 30 ஆண்டுகளாக பதவிக்கு வர முடியாத ஆரியம் மிகவும் தந்திர வித்தைகளால் வன்மையான ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உயர்ஜாதி ஆதிக்கக் கொடியைப் பறக்கவிட்டிருப்பது மிகப் பெரிய அபாய அறிவிப்பு!


தேர்தல் முடிவுகள்மூலமும், அனைத் துக் கட்சிகளிலும் அங்குள்ள சிறு பான்மையினர், உயர்ஜாதியினர் ஊடுருவி, எண்ணிக்கையில் பெரும்பான்மை உள்ள இடத்தைப் பிடித்து, பெயரளவில் ஒரு ‘சூத்திரரை' ஆட்சியில் அமர்த்தி, ‘காட்சிக்காக அவர்; ஆட்சிக்காக நாங்கள்' என்ற காலங்காலமாய் கடைபிடித்த தந்திரத்தை அரசியல் அரங்கேற்றமாக ஆக்கிவிட்டனர்!


கடந்த 30 ஆண்டுகளாக பீகாரின் முதலமைச்சர்களாக


போலோ பஸ்வான் சாஸ்திரி (எஸ்.சி.,),


கற்பூரி தாக்கூர் (எம்,பி.சி.),


லாலுபிரசாத் (பி.சி.)


போன்றோர் தலைமையில் சமூகநீதி கொடிப் பறந்தது.


இப்போது ஆர்.ஜே.டி.யை பதவி பெறாது தடுப்பதால், பிரித்தாளும் தந்திர வியூகத்திலிருந்தும், மற்ற அரசியல் அதிகாரப் பயன்பாடு, ஏடுகள் மிக சாமர்த் தியமாக  முன்பு பேசப்பட்ட சமூகநீதி (ஜாதிப் பிரச்சினை) இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், அங்கே தலைதூக்காமல் வேலை வாய்ப்பு, நிர்வாகம், பொருளாதாரம்பற்றி பேசியது புதிய வரவேற்கத்தக்க மாற்றம் என்று ஏடுகள் எழுதி ‘வேப்பிலை' அடிப்பதன் உள்ளார்ந்த ரகசியம், சமூகநீதி - இட ஒதுக்கீடு மெல்ல மெல்ல புதைகுழிக்குப் போகவேண்டும். செல்வாக்கு பெற்றுவரும் ஆர்.ஜே.டி. இளைய தலைமுறைக்கே கூட இதை விளக்கப்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது!


‘‘ஆடும் நாற்காலி நாயகர்‘‘


நிதிஷ்குமார்


‘‘ஆடும் நாற்காலி நாயகராக'' உள்ள நிதிஷ்குமார் ‘‘ஆளும் நாற்காலிக்குரிய'' முதல்வராக அழுத்தமாக தனது நிலைப் பாட்டை வற்புறுத்த முடியாத, ஆர்.எஸ்.எஸ். வில்லுக்கு அம்பாகியே இனி ஆள முடியும்! இன்றேல், எந்த நேரத்திலும் பதவியிலிருந்து கவிழ்க்கப்படக் கூடிய கொடுவாள் (Damocle's Sword) அவர் தலைமீது தொங்கிக் கொண்டே உள்ளது.


அடுத்து ஆர்.ஜே.டி.யை - பா.ஜ.க. நேரடியாகவே தனது உயர்ஜாதி புஜ பல பராக்கிரமமான ஊடக பலம், அதிகார பலம், பண பலம், மத்திய ஆட்சி பலம் மூலம் ஒடுக்கிவிட ஆயத்தமாகி, அவரது மக்கள் செல்வாக்கைத் தடுக்கும் முயற்சியில் தாராளமாக ஈடுபடுவர்!


30 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பீகாரில் வெறும் உயர்ஜாதி ஆட்சியே நடந்த நவீன புஷ்யமித்ர சுங்கன் ஆட்சி புதுப்பிக்கப்படும் நிலைக்கான பலமான அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது!


இளைஞர்களே, ஒடுக்கப்பட்டோரே - ஏமாந்துவிடாதீர்கள்!


மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரதமர் மோடி  ‘பிற்படுத்தப்பட்டவர்‘, நிதிஷ்குமார் ‘பிற்படுத்தப்பட்டவர்' என்ற காட்சி, தோற்றமாகத்தான் இருக்கும். உள்ளே ஸ்கேன் செய்தால், அது ஆரியம் அதன் ஆதிக்க பீடத்தை லாவகமாக அசைக்க முடியாததாக ஆக்கிட சாம, தான, பேத, தண்டத்தைக் கையாளும் - (மனு) தர்மத்தைக் காக்க வன்முறையும் தவறில்லை என்ற தத்துவ ஆயுதம் என்றும் அவர்களிடம் தயார் நிலையில் உள்ளது புலப்படும்.


இளைஞர்களே, ஒடுக்கப்பட்டோரே புரிந்துகொள்ளுங்கள் - ஏமாந்துவிடாதீர்கள்!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


15.11.2020


Comments