பகுத்தறிவு இல்லாப் படிப்பு - பாழுக்கே!

நாகர்கோவிலில் வேலை கிடைத்தால் உயிரைத் தருவதாக வேண்டிக்கொண்டு நேர்த்திக் கடனுக்காக, வங்கி அதிகாரி ஒருவர், தற்கொலை செய்துகொண்ட கொடுமையை என்னவென்று சொல்லுவது!


நாகர்கோவில் மாவட்டம், எள்ளுவிளை, பத்தன்காடை சேர்ந்தவர் செல்ல சாமி. 32 வயதாகும் இவரது மகன் நவீன் படித்துவிட்டு, வேலையில்லாமல் விரக்தியில் இருந்துள்ளார்.


இந்நிலையில், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில், உதவி மேலாளராகப் பணி கிடைத்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து வேலை செய்து வந்த நவீன் 30.10.2020 அன்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்த புரம் வந்து அங்கிருந்து காலை நாகர்கோவில் வந்துள்ளார்.


நவீன் வருகைக்காக காத்திருந்த பெற்றோர்கள் கைப் பேசி மூலம் தொடர்ந்து அழைத்தவண்ணம் இருந்துள்ள னர். நாகர்கோவில் வந்து இறங்கிய நவீன் வீட்டிற்குச் செல்லாமல், புத்தேரியில், உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துக் கிடந்துள்ளார்.


அப்போது அந்த வழியாக வந்த ரயில், நவீன் மீது ஏறிச் சென்றதில், தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைந்து மரணம் அடைந்தார். இதுபற்றித் தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் நவீன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர்.


வேலை கிடைத்தால் உயிரைத் தருவதாக வேண்டிய படி நேர்த்திக்கடனுக்காக வங்கி அதிகாரி தற்கொலையைக் கொடூரமான முறையில் செய்து கொண்டுள்ளார்.


இதனிடையே நவீன் குடும்பத்திற்குத் தகவல் கொடுக் கப்பட்டு, மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது, நவீனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி குருதியை உறையச் செய்தது.


இதனையடுத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நவீனின் சட்டை பையில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். தற்கொலை செய்வதற்கான காரணத்தை நவீன் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.


அந்தக் கடித்தில், “நான் படித்து விட்டு பல இடங்களில் வேலை தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரையே நேர்த்திக் கடனாகத் தருகிறேன் என கடவுளிடம் வேண்டியிருந் தேன். தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது, எனவே நான் வேண்டியபடி எனது உயிரைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறேன்.” என எழுதி வைத்துள்ளார்.


இதுபற்றி நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே காவல்துறையினர் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேண்டிக்கொண்ட வேலை கிடைத்ததற்காக, கடவுளுக்குக் காணிக்கையாக உயிரைக் கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது பெரும் முட்டாள் தனமானது; மூட நம்பிக்கையின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கொரு லைசன்ஸ் அவ்வளவுதான் - பகுத்தறிவு இல்லாத படிப்புப் பாழ்தான் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படவில்லையா?


வேலை கிடைப்பதற்காகக் கடவுளை வேண்டிக் கொண்டது ஒரு புறம் இருக்கட்டும், வேலை கிடைத்ததது. வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திடவா - பெற்றோர்களைக் காப்பாற்றிடவா அல்லது கடவுளிடம் வேண்டிக் கொண்ட முட்டாள்தனமான தற்கொலை நேர்த்திக் கடனை செய்வதற்கா?


தடுத்தாட்கொள்பவன் என்று கடவுளைப் பரவசமாகப் பேசுகின்றவர்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.


தன்மீதான நேர்த்திக்கடனாக உயிரை மாய்த்தவனை அந்தக் கடவுள் தடுத்தாட்கொண்டிருக்க வேண்டாமா?


கடவுள் பக்தி - சக்தி என்பது நாச சக்தி என்பதை இதன் மூலமாவது பக்தர்கள் புரிந்துகொள்ளட்டும்! தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையும், பகுத்தறிவும் கொண் டவர்களாக வளர்த்தெடுக்கட்டும் - இல்லை யெனில் செல்லசாமியின் மகன் நவீன் போல் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியதுதான் - எச்சரிக்கை!


Comments