பேரறிவாளனால் தொடுக்கப்பட்ட வழக்கு:

உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனக் கருத்திற்குப் பிறகாவது செயல்படுத்தவேண்டியது ஆளுநரின் கடமை!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்பட எழுவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய பிறகு, பல்வேறு சட்ட சிக்கல்களைத் தாண்டி, இன்றைய அ.தி.மு.க. ஆட்சி, அந்த எழுவரை விடுதலை செய்யவேண்டுமென்று முடிவெடுத்து,  ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும்.


பேரறிவாளனால் தனியே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெளிவாகத் தெரிவித்து, ஏன் தேவையற்ற காலதாமதம் என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து, மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்கவேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும்.


அதை மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டியது அதைவிட தேவையான அவசரக் கடமையாகும்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்.


சென்னை


4.11.2020


Comments