ஒபாமா பார்வையில் இந்தியா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சுயசரிதை நூல் “A Promised Land” (வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு நிலம்) ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலில் அதிகமாக இந்தியா, இந்திய அரசியல், இந்திய அரசியலில் நிலவும் இனவாதம் மற்றும் சமூகத்தில் இன்றளவும் உள்ள ஜாதிய வாதம் குறித்து அதிகம் பேசியுள்ளார்.


"இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். வறட்சியில் இருந்து மீளாத கிராமங்கள், மக்களைப் பிரித்து வைக்கும் குடிசைப்பகுதிகள் என அதிகம் இருக்கின்றன. நாம் படித்த ராஜா - மகாராஜா பிரமாண்ட அரண்மனைகள் போன்ற வற்றையும் மீறிய ஒரு இந்தியா அங்கே இருக்கிறது. அங்கே பணக்காரர்களின் வாழ்க்கை முறை பிறருக்குப் பயனுள்ளதாக இல்லை.  அது பொறாமையை மட்டுமே வளர்க்கிறது" என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.  


"அங்கே சமூகத்தில் ஜாதிய வன்முறை, ஏழைகளை அடக்கிவைக்கும் நிகழ்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன.நான் அதிபராகும் வரை இந்தியா குறித்து ஒரு பெருமையான கருத்தை உள்வாங்கி இருந்தேன், அது ஒரு கற்பனை உலகமாக இருந்தது. என்னுடன் பழகிய இந்தியர்கள் அந்த கற்பனையை எனக்குள் வளர்த்துவிட்டனர். ஆனால் நான் அதிபரான பிறகு இந்தியா குறித்து எனக்குக் கிடைத்த அறிக்கைகள் மற்றும் நான் அங்குச் சென்ற போது அங்குக் கண்டவை அனைத்துமே மிகவும் வேறானதாக இருந்தன. 


இந்தியாவில் தேசப்பற்று என்றாலே பாகிஸ்தான் மீதான விரோதக் கருத்தை உமிழ்வதுதான் என்ற ஒரு கருத்து உள்ளது. 


அமைதிக்கான தேசம் என்று நாம் கருதிய ஒரு நாட்டில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கிறது, அதைவிட அதிகம் நாமும் தயாரிக்க வேண்டும் என்றும், அணு ஆயுதம் என்பதன் உண்மையான பேராபத்தை உணராமல் பேசிக்கொண்டும் இருக்கின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே அரசியல் காரணங்களுக்காகப் பகைமையை வளர்த்துக்கொண்டு இருக்கின்றன என்று தெரிகிறது. 


நவீன உலகத்தில் இந்தியா பயணப்பட்டாலும், இன்றளவும் பழமைவாத போக்கு அங்கே உள்ளது. 1990-களில் உருவான பொருளாதார புரட்சி மன்மோகன் சிங்கின் தலைமையில் புதிய எழுச்சியாக உருவானது, இது கோடிக்கணக்கான மக்களை வறுமைப்பாதையிலிருந்து திருப்பியது. அவர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவை உலக நாடுகளோடு போட்டிப்போடும் அளவிற்குக் கொண்டு சென்றது.


ஆனால் அங்கே மதம் மற்றும் ஜாதியால் பிரிக்கப்பட்ட சமூகத்தில் இந்த முன்னேற்றங்களால் எந்த ஒரு பயனும் இல்லா மல் போனது. அங்கே ஜாதிய அதிகாரமே மேலோங்கி நிற்கிறது" என்று குறிப்பிட்டு தனது நூலில் சீக்கியரான மன்மோகன் சிங் தலைமையில் இருந்த இந்தியாவைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.  


“சிறுபான்மைச் சமுதாயம் என்று ஒதுக்கிவைக்கப்படாமல் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்ததால் அது எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு சிங் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். ஆனால் அங்கே இனவாதக் குழுக்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக உள்ளன;  ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.


மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரை அவர் மிகவும் நேர்மையான மனிதர். பார்வையில் குள்ளமான, நீலவண்ண தலைப்பாகை, வெண்தாடியுடன் கூடிய அந்த மனிதர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் என்ற  மரியாதை கலந்த பார்வையை மேலை நாடுகள் கொண்டிருந்தன.


சிங்கின் காலகட்டத்தில் உலகமே தீவிரவாத அச்சுறுத்தல். பொருளாதார சிக்கல், மற்றும் காலநிலை சீர்கேட்டின் துவக்கத்தில் இருந்த போது அவர் இந்தியாவை சிறந்த அமைதியான - பொருளாதாரத்தில் நிறைவு பெற்ற நாடாக மாற்ற முனைப்பு கொண்டு இருந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் மேலை நாடுகளின் ஊடகங்கள் இந்தியாவைப் பற்றி பெருமை மிகுந்த பார்வையை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்த்தன. மன்« மாகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சத்தைத் தொட்டது. 


மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பாஜக வளர்ச்சி அடைந்தது, தேசிய வாதம், இனவெறி, சகிப்பின்மை போன்றவை தொடர்ந்து பரப்புரை செய்யப் பட்டது, எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் தேசிய வாதம் மற்றும் மதவாத இனவெறிப் பார்வை தொடர் வெற்றியைத்தராது” என்று தனது நூலில் குறிப் பிட்டுள்ளார் மேனாள் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா.  


ஒப்பந்தப்படி நூலின் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இது 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நூல் ஆகும். அடுத்த பாகத்தில் மோடி குறித்தும், அவரது ஆட்சிக்காலத்திய இந்தியா குறித்தும், டிரம்பின் ஆட்சி குறித்தும் எழுதி வருகிறார்.  


ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் கென்யா தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர், தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியர் ஒருவரால் வளர்க்கப்பட்டவர். இதனால் தன்னை பொதுவான ஒருவாராகவே கருதுகிறார். தான் குறிப்பிட்ட மக்களுக்கான இனத்திற்கான அடையாளம் இல்லை என்று பராக் ஒபாமா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியரசுத் தலைவராக இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே 'இந்தியா சகிப்பு மனப்பான்மையுடன் இன்றுவரை சிறப்பாக இருந்தது' என்று இடித்துக் கூறியதையும் இந்த இடத்தில் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.


பெரும் பிரச்சாரத்தால் மோடியை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் சக்திகள், ஊடகங்கள், ஒபாமாவின் இந்தப் படப் பிடிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?


Comments