கழகத் தலைவர் வாழ்த்து


தி.மு.க.மாநில இலக்கிய அணி தலைவரும், மேனாள் அமைச்சருமான சீரிய பகுத்தறிவாளர் மு.தென்னவன் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும்அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். (20.11.2020)


"இருப்பிட சான்றிதழைச் சரிபார்க்க சிறப்பு குழு" அமைப்பு - மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்


சென்னை, நவ. 20- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று (19.11.2020) 7.5 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டில் எஞ்சிய மாணவர்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழைச் சரிபார்க்க 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். ஒரே மாணவர் இரு வேறு மாநிலங்களில் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்


22.11.2020 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  பிறந்தநாள் விழாவை குடும்ப விழாவாக கொண்டாட  தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் மாவட்ட திராவிடர்க் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் மு.முனியசாமி தலைமையில், மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், பெரியார் மய்ய பொறுப்பாளர் சு.காசி முன்னிலையில் நடைபெறும். தோழர்களும்  பொறுப்பாளர்களும் தவராமல் கலந்து தங்கள் கருத் துக்களை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கணவரின் வருமானம் அறிய மனைவிக்கு உரிமை உள்ளது: மத்திய தகவல் ஆணையம் கருத்து


ஜோத்பூர், நவ. 20- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் கணவரின் வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமைஉள்ளது என மத்திய தகவல் ஆணையம் (சிஅய்சி) தெரிவித் துள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரஹமத் பானு. இவரது கணவர் தனது வருமான விவரத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்து உள்ளார். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைசட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் தனதுகணவரின் வருமான விவரத்தைதெரிவிக்குமாறு வருமான வரித்துறையிடம் கேட்டிருந்தார். ஆனால் 3ஆம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித் துறை தெரிவித்தது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (சிஅய்சி) மேல்முறையீடு செய்தார்.


இவரது மனுவை பரிசீலித்த சிஅய்சி, ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை சிஅய்சி ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரும் விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு சிஅய்சி உத்தரவிட்டது.


Comments