‘‘ஊசி  மிளகாய்'' : கடவுளில்தான் ‘‘எத்தனை ரகம், கொள்ளை போகுதே சிலைகள்''

‘‘ஊசி  மிளகாய்'' : கடவுளில்தான் ‘‘எத்தனை ரகம்? கொள்ளை போகுதே சிலைகள்?''நாகை மாவட்டம் அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் இங்கிலாந்து அருங்காட்சியகத்திலிருந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.


1978 இல் (இந்த சிலைகள்) ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.


இங்கிலாந்தில் அருங்காட்சியகத்தில் இந்தப் புராதனப் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளதாக விளம்பரம் வெளியானது. அவை அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலின் கடவுள் சிலைகள் என்று உறுதியானது. அந்த அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு, இந்திய அரசு சார்பில் சிலைகளுக்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டன.


அவற்றை ஆய்வு செய்த அருங்காட்சியக நிர்வாகிகள் இந்தியாவிடம் தர ஒப்புக் கொண்டனர்!


எப்படியோ ஆஞ்சநேயர் சிங்கப்பூர் போய்விட்டார் - இவர்களை விட்டுவிட்டு என்றும் தகவல்.


- ‘இந்து தமிழ்திசை, 19.11.2020


கடவுள்களில் நம்ம கடவுள்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களாக செய்தி வருகிறதே அதுகுறித்து 'வேல் வீரர்கள்' ஏன் அந்த அரசுகளை - ‘விசா' வழங்காமல் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த, இங்கிலாந்து நாட்டின் அரசை எதிர்த்துப் போராட்டம்பற்றி யோசிக்காமல் 42 ஆண்டுகள் என்ன செய்தனர்? (ஏற்கெனவே இராமர், லட்சுமணர் வனவாசம் 14 ஆண்டுகள் புராணக் கதைப்படி) இப்போது மேலும் 42 ஆண்டுகள் இது வனவாசம் அல்ல, இங்கிலாந்து வாசம்!


இதற்கு நம்முடைய, ஏடு நடத்தும், ஊடக தருமத்தவர்கள் ‘சிலைகள்' என்று எழுதி கடவுள், கடவுளச்சிகளைக் கொச்சைப்படுத்தலாமா? உடனடியாக, உள்ளே இருந்தால் ‘சாமி' வெளியேறி மீண்டு(ம்) வந்தால் ‘‘சிலைகள்'' - ‘‘என்னே வினோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு!''


மனிதர்களுக்கு ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!'' ஆனால், நம் (கடத்தல் செய்யப்பட்ட) கடவுள்களுக்கு அப்படிப்பட்ட விதி பொருந்துமா? பாஸ்போர்ட், விசா இல்லாமல் ‘‘கொள்ளையடிக்கப்பட்ட'' கொள்ளைப் பொருளாகி விட்டார்கள் - பார்த்தீர்களா?


உள்ளூரில் பக்திக் கொள்ளை! அதையும் இந்தப் பாழாய்ப் போன கரோனா தொற்று தடுத்து, பக்தர்கள் வராமல் பாதுகாக்கும் பொறுப்பை காவல்துறையிடம் (திருச்செந்தூர் போன்ற முருகன் சூரசம்ஹார திருவிழாவில் செய்ததுபோல) ஒப்படைத்து நாஸ்திகாள் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் செய்வோரை எதிர்த்து, அம்புப் போராட்டம் அல்லது வில் போராட்டம் ஒன்றையும் தொடங்குவதுபற்றி ஆஸ்திக மெய்யன்பர்கள் ஆழ்ந்து யோசிப்பதாகவும், 'ஊர்க்குருவி' கூவுகிறது!


உண்மையா அது!


Comments