வேலையின்மை, பணவீக்கப் பிரச்சினையை திசைத்திருப்ப வேண்டாம்

அமித்ஷாவுக்கு மெகபூபா முப்தி பதிலடி


சிறீநகர், நவ.19 எதிர்க்கட்சிகளுக்கு ‘தேசவிரோதிகள்’ முத்திரை குத்துவதன் மூலம், வேலையின்மை, பணவீக்கப் பிரச் சினைகளை பாஜக திசைத் திருப்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.


ஓரணியில் திரண்டு...


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கியிருந்த, சிறப்பு உரிமைகளை கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மாநில அந்தஸ்தையும் பறித் துக் கொண்டது. தலைவர்களையும் சிறையில் அடைத்தது.இந்நிலையில், “இழந்த உரிமைகளை மீண்டும் அடைந்தே தீருவோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் அண்மையில் ஓரணியில் திரண்டு தீர்மானம் நிறைவேற்றின.


சிறீநகர் குப்கர் சாலையிலுள்ள பரூக் அப்துல்லா இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், ‘குப்கர் தீர்மானம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்நிலையில், குப்கர் தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் கட்சிகளை ‘குப்கர் கும்பல்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். “குப்கர் கும்பல், நாட்டின் மனநிலையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், பொதுமக்கள் அதற்கு தக்க பாடம் புகட்டி, ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள்” என்று மிரட்டினார்.


இந்நிலையிலேயே, அமித்ஷாவுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.


இந்தியாவின்


இறையாண்மைக்கு மிரட்டல்


“நீண்டகாலமாகச் செய்துவந்த ஒரு பழக்கத்தைக் கைவிடுவது பாஜகவுக்கு கடினமானதுதான். ஏனென்றால், மதச் சார்பின்மை அரசியல் பேசுபவர் களை, முன்பு ‘துக்டே துக்டே கும்பல்’ என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என் றும் பாஜக கூப்பாடு போட்டது. இப்போது குப்கர் கூட்டணியை, ‘குப்கர் கும்பல்’ என்று தேச விரோதியாகச் சித்தரிக்கிறது.


‘லவ் ஜிகாத்’, ‘துக்டே துக்டே’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, தற்போது ‘குப்கர் கும்பல்’ என்ற வார்த்தையை, பாஜக கையில் எடுத்துள்ளது. தேசத்தில் வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றை மக்கள் மத்தியிலிருந்து திசைத்திருப்பவே இதுபோன்ற சொல்லாடல்களை பாஜக பயன்படுத்தி வருகிறது'' என்று மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.


Comments