‘தீ'பாவளியால் தீ விபத்து - உயிரிழப்பு - அரிவாள் வெட்டு!

சென்னை, நவ.15  தீபாவளியன்று பட்டாசு வெடித்ததினால் தமிழகம் முழுவதும் 106 இடங்களில் தீ விபத்து; பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டும், அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததினால் 348 பேர்மீது காவல்துறை வழக்கும் பதிந்துள்ளனர். பட்டாசு வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது.


விவரம் வருமாறு:


106 இடங்களில் தீ விபத்து:


தீயணைப்புத்துறை தகவல்


தீபாவளி நாளில் தமிழகத்தில் மொத்தம் 106 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் 410 இடங்களில் பட்டாசு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 90% தீ விபத்து மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நடந்துள்ளது. 56 அழைப்புகள் தீவிபத்து குறித்து வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 84 விபத்துகள்  ராக்கெட் விட்டதால் ஏற்பட்டுள்ளதாகவும், 22 விபத்துகள் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


3 பேருக்கு அரிவாள் வெட்டு;  4 பேர் காயம்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி  அருகே பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடு பட முயற்சி செய்தனர். இதனால் சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


348 பேர் மீது வழக்கு -


காவல்துறை நடவடிக்கை


சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


காற்றுமாசு காரணமாக தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவு ஒவ்வொரு தீபாவளியின்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.


இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்ப வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அரசு நிர்ண யித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ, அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.


இந்த விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு தீபாவளி அன்று காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் படி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.


பட்டாசு வெடித்ததில் 18 மாத குழந்தை உயிரிழப்பு; 2 பேருக்கு தீக்காயம்


கள்ளக்குறிச்சி - கொங்கராபாளையம் கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 18 மாத குழந்தை உயிரிழந்தது. தெருவில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது தீப்பொறி பட்டாசுக் கடையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. கடையில் வைக்கப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். 18 மாத குழந்தை, 2 சிறுவர்களும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி 18 மாத குழந்தை உயிரிழந்தது.


காற்றின் தரம் மிக மோசம்:


டில்லி மக்கள் அவதி


டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.


டில்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.


தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், நேற்று டில்லியில் தடை மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டில்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


காற்றின் தரம் குறித்த ஆய்வில் டில்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.


டில்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Comments