பி.ஜே.பி.யின் அதிதீவிர பிரச்சாரகர் அர்னாப் கோஸ்வாமி கைது!


மும்பை, நவ.5 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 'டைம்ஸ் நவ்' என்ற ஆங்கில ஊடகத்தில் மோடியின் பிரச்சாரகராகவே மாறி செய்திகளை வெளியிட்ட இந்துத்துவா பேர்வழி  அர்னாப் கோஸ்வாமி என்ற ஆங்கில ஊடகவியலாளரை 'டைம்ஸ்' குழுமம் வெளியேற்றியது. மேலும் மிகவும் பிரபலமான ”இந்தியா கேட்கிறது'' என்ற வாசகத்தைப் பயன்படுத்தவும் தடைவிதித்தது.


''இந்தியா கேட்கிறது'' என்ற வாசகம் 'டைம்ஸ்' குழும இந்தி நாளிதழான 'நவபாரத் டைம்ஸ்' என்ற இதழில் தினசரி வரும் கேள்வி-பதிலுக்கான தலைப்பு ஆகும். இந்தத் தலைப்பை அர்னாப் கோஸ்வாமி தனது தொலைக்காட்சி விவாதங்களில் பயன்படுத்தியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.  ஆனால், தொடர்ந்து இவர் பாஜக மற்றும் மோடிக்கு அள வுக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து தனது விவாதங்களை நடத்தினார். இதனால் 'டைமஸ் நவ்' தொலைக்காட்சி விமர்சனங்களுக்கு ஆளானது, மேலும் இது குறித்து 'டைமஸ் குழுமம்' விளக்கமும் அளித்தது.


 இதன் தொடர்ச்சியாக அர்னாப் கோஸ்வாமியை அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கிவிட்டது. வெளியேவந்த அவர் பாஜக நாடா ளுமன்ற உறுப்பினரின் பினாமி பெயரில் 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில-இந்தி செய்தி தொலைக்காட்சியைத் துவக்கினார். இது முழுதுவமே மோடி மற்றும் பாஜகவின் புகழ்பாடும் தொலைக்காட்சியாகவே செயல்பட்டது. இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி 2017-ஆம் ஆண்டு புதிய தொலைகாட்சி துவங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தை வடிவமைத்த பொறியாளர் அன்வாய் நாயக் என்பவருக்குக் கொடுக்கவேண்டிய ரூ.85 லட்சத்தைக் கொடுக்கவில்லை என்று அவர் அத்தொகையைக் கேட்ட போது, அவரை அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளனர்.


அதே போல  'ஸ்கீ மீடியா' நிறு வனத்தைச் சேர்ந்த பெரோஸ் ஷேக் மற்றும் 'ஸ்மார்ட் ஒர்க்' உரிமையாளர் நிதேஷ் சர்தா ஆகியோரும் ரூ. 4 கோடியே 55 லட்சத்தை வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.


இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வடிவமைப்பாளர்  அன்வாய் நாயக்  2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கூடவே அவரது தாயாரும் தற் கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை முந்தைய மகாராட்டிர பாஜக அரசு மூடிமறைத்து விட்ட நிலையில், அன்வாய் நாயக்கின் மகள் அதன்யாநாயக், புதிதாக வந்த சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி அரசிடம் முறை யிட்டார். உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-கும்அதன்யாவின் மனுவை ஏற்று மறுவிசாரணைக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.


அதைத் தொடர்ந்து, ரூ. 4.55 கோடி மோசடியில் ஈடுபட்ட ‘ஸ்கீ மீடியா’ மற்றும் ‘ஸ்மார்ட் ஒர்க்’ நிறுவனங்களின் பெரோஸ் மற்றும் சர்தா ஆகியோரைக் கைது செய்த ராய்காட் காவல்துறை ரூ. 85 லட்சம் மோசடிசெய்த ‘ரிபப்ளிக் டிவி’ தலைமை நிர்வாகி அர்னாப்பையும்  கைது செய்துள்ளனர். அர்னாப்பைக் கைது செய்ய காலை 6 மணிக்கு மும்பை  வொர்லியில் உள்ளஅவரது வீட்டிற்குச் சென்றபோது, அர்னாப்பும், அவரது மனைவி சம்யாபிரதாவும் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேவர மறுத்துள்ளனர். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர்களது தொலைக்காட்சி ஊடகங்கள் அங்குவந்து நேரலை செய்யும் போது கதவைத் திறந்த அவர்கள் பிடியாணை இருக்கிறதா? என்று கேள்விகேட்டு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.


அய்பிசி 306 பிரிவின் கீழான கைது நடவடிக்கைக்கு பிடியாணை தேவையில்லை என்று காவல்துறையினர் விளக்கம் அளித்த போது, அதனை ஏற்காத அர்னாப்பின் மனைவி சம்யா பிரதா, காவல்துறையினர் கையிலிருந்த கைது அறிக்கையை கிழித்து எறிந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிகழ்வை படமெடுத்துக் கொண்டு இருந்த பெண் காவல் உயரதிகாரியை அர்னாப் கோஸ்வாமி தாக்கியுள்ளார். இதனால் அப்பெண் அதிகாரி நிலைகுலைந்து கிழே விழுந்தார். இந்த நிகழ்வும் நேரலையில் பதிவானது. இதனை அடுத்து அர்னாபின் வீட்டிற்குள் புகுந்த மராட்டிய மாநில  காவல்துறையினர் அவரை  வலுக்கட்டாயமாக கைது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.


மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினசரி எதிர்க்கட்சிகளை கடுமையாக பாஜகவினரையும் விட அதிகம் விமர்சித்து வந்தார். மேலும் விவாத நிகழ்சிக்கு வரும் எதிர்க்கட்சிக்காரர்களையும், இஸ்லாமியப் பிரமுகர்களையும் நேரலையிலேயே மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதேநேரத்தில் இவர் தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்ததில்லை.


முழு ஊரடங்கு நேரத்தின் போது பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என்ற அய்யத்தின் பேரில் மராட்டிய மாநிலம் பல்கர் என்ற பகுதியில் இரண்டு சாமியார்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை விவகாரத்தில் சோனியா காந்தியின் பெயரைச் சேர்த்து காங்கிரஸ் உத்தரவின் பேரில் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் சாமியார்களைக் கொல்ல ஆட்களை அனுப்பியுள்ளார் என்று பொய்ச் செய்தியை தனது ஊடகம் வாயிலாகப் பரப்பினார். இதனை அடுத்து மாநிலம் முழுவதிலுமுள்ள காங்கிரசார் அந்தந்த மாவட்டத் தலைநகரில் புகார் செய்தனர். இந்தப் புகாரில் இவரை மும்பை காவல்துறை கைது செய்ய சென்ற போது, உச்சநீதிமன்றம் இவரைக் கைது செய்யக்கூடாது என்று தடை விதித்தது. இதனால் இவர் மேலும் உற்சாகத்தோடு பேசி, மராட்டிய மாநில காவல்துறையை மோசமான வார்த்தைகளால் நேரலையில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.


Comments