செய்தியும், சிந்தனையும்....!

உற்பத்தி நாசம்!


திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத்துக்கு 3,500 கிலோ நெய் கொள்முதல்.


போதிய சத்துணவு இல்லாமல் குழந்தைகள் மடிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், மதப் பண்டிகை என்ற பெயரில் 3,500 கிலோ நெய்யை நெருப்புக்குள் கொட்டி அழுவது நியாயமா?


உற்பத்தி நாசம் என்று பொருளாதாரத்தில் கூறுவதில்லையா - அது இதுதான்!


உள்ளதைச் சொன்னால் வெடிப்பானேன்?


கருநாடக உள்துறை செயலாளர் ரூபி அய்.பி.எஸ். 'பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது - வேதங்களிலும், புராணங்களிலும் ஆதாரம் கிடையாது' என்று கருத்துச் சொன்னதற்காகக் கடும் கண்டனம் இந்து மதவாதிகளிடமிருந்து.


உள்ளதைச் சொன்னால் எரிச்சல் ஏன்? ஆத்திரத்தால் வெடிப்பானேன்?


அய்யப்பன் சக்தி?


சபரிமலையில் பக்தர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து கேரளாவில் அய்யப்ப நாம ஜெப வேள்வி.


அய்யப்பனுக்கு பக்தர்களின் கோரிக்கை என்னவென்று தெரியாதா? அல்லது அய்யப்பனுக்கு சக்தியில்லை என்று பக்தர்களின் முடிவா?


கந்து வட்டியா?


வங்கிகளில் வட்டிக்கு வட்டி விதிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.


அரசு வங்கிகளே கந்து வட்டிக்காரர்களாக மாறலாமா? பெரும் முதலைகளுக்குக் கோடிக் கணக்கில் கொட்டிய கடன்களை மீட்டாலே போதுமானது - அதில் கோட்டை விட்டுவிட்டு வட்டிக்கு வட்டி போடுவது என்ன நியாயம்?


கிரிக்கெட்டே சூதாட்டம்?


ஆன்லைன் சூதாட்டங்கள்பற்றிய விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களான கங்குலி, விராட் கோலி (இன்றைய கேப்டன்) பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை.


கிரிக்கெட்டே சூதாட்டமான பிறகு இந்த அறிவுரையால் என்ன பயன்?


கடவுளும் - இலஞ்சமும்!


உலக அளவில் இலஞ்சத்தில் இந்தியாவுக்கு 77 ஆவது இடம்.


பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லவா! கடவுளுக்குக் காணிக்கை என்பதுகூட ஒரு வகை இலஞ்சம் தானே!


இப்பொழுதாவது புரிகிறதே!


கரோனாவுக்குப் பலியான முன் கள வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு, மத்திய அரசு அறிவிப்பு.


வரவேற்கத்தக்கதே - உள் ஒதுக்கீட்டின் அவசியம் எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா?


கண்டிப்பான வழிகாட்டுதல்!


திருநெல்வேலியில் இரயில்மீது ஏறி 'செல்பி' எடுத்த 10 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கிப் பலி.


செல்போனில் காலம் கடத்துவது - செல்பி எடுப்பது போன்றவற்றில் கொஞ்சம் கண்டிப்பாகவே பிள்ளைகளுக்குப் பெற்றோர் வழிகாட்டுவது அவசியம்.


பன்னாட்டு குழந்தைகள் தினமான இன்று இந்த முடிவைப் பெற்றோர் எடுக்கட்டும்!


Comments