வடகிழக்குக் கனடா கற்பிக்கும் மொழிப் பாடம்

வடகிழக்கு கனடாவில் தென் இந்தியாவை ஒத்த பெரிய நிலப் பரப்பு கொண்ட   நுனாவுட் மாகாணம் 1999ஆம் ஆண்டு வடமேற்கு கனடிய மாகாணத்தில் இருந்து தனியாகப் பிரிந்து நுனாவுட் மாகாணமாக மலர்ந்தது,


இம்மாகாண மக்களின் மூல மொழி இன்குட் ஆகும்.  நுனாவுட் மாகாணம் உருவாவதற்கு முன்பு வடமேற்கு கனடாவின் ஆட்சியின் போது ஆங்கிலம் அதிகம் கலந்து பேசப்படும் இன்யுட் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, இதனால் அம்மாகாண மக்களால் பேசப்படும் இன்குட் மொழி சில ஆண்டுகளிலேயே அழிவின் விளிம்பில் சென்றது.


சுமார் 40,000 மக்கள் வாழும் நுனாவுட் மாகாணத்தில் அவர் களின் தாய்மொழியான - இன்யூட் இன்குட் என்ற மொழியிலிருந்து பிரிந்த மொழி ஆகும்.  இன்யுட் ஆங்கிலம் மற்றும் இன்குட் சொற்கள் கலந்து பேசும் ஒரு மொழி ஆகும்.  கலப்பு மொழியான இன்யூட் மற்றும் ஆங்கிலம் என்ற இரண்டு மொழியும் நுனாவுட் மாகாணத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது.


ஆங்கிலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருவதால் இன்யூட் மற்றும் அதன் மூல மொழியான இன்குட் மொழிக்கு ஆபத்து ஏற்படும், அதன் மூலம் கலாச்சார இனப்படுகொலை நடக்கும் என்று அறிந்துகொண்ட அந்த மாகாண அரசு இன்யூட்டின் மூல மொழி யான இன்குட்டைப் பாதுகாக்க புதிய சட்டம்  ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.


இதன் மூலம் இன்குட் மொழி  ஆரம்பக் கல்வி மற்றும் அனைத்து கல்வி நிலையங்களிலும் வரும் 20 ஆண்டிற்குள் முழுமையான பாடமாக மாறும். 2039ஆம் ஆண்டு முதல் இன்குட் மாகாணத்தில் அரசு மொழியாக்க இப்போதிருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இச்சட்டம் தொடர்பாக நுனாவுட் மாகாண கல்வி அமைச்சர் டேவிட் ஜுனாசி கூறியதாவது: “இம்மாகாணத்தில் 65 சதவீத மக்கள் இன்யூட், அதன் மூல மொழியான இன்குட் பேசுகின்றனர். 2019-ஆம் ஆண்டு இன்யூட் பேசும் மக்கள் தொகை 89 சதவீதமாக  அதிகரித்துள்ளது,


இன்யூட் மொழியில் ஆங்கிலம் அதிகம் கலந்துள்ளதால் அதன் மூல மொழியைப் பாதுகாக்கவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டு உள்ளது, இதற்கான நாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.


இன்குட் மொழியைப் பரவலாக்கும் முயற்சியில் நீண்ட ஆண்டுகளாக முயற்சி செய்துவரும் நுனாவுட்  இன்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் ஈட்டுலுக் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இன்குட் மொழி மற்றும் கலாச்சாரம் பள்ளிகளில் இருந்து காணாமல் போய்க்கொண்டு இருந்தது, இது கலாச்சார இனப்படுகொலை ஆகும்," என்று ‘கனேடியன் பிரஸ்' நாளிதழுக்குப் பேட்டியளித்தார்.


இன்குட் மொழியைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வருவது புதிது அல்ல, ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது, ஆனால் மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத நிலையில் நிறைவேறாமல் போனது.


2019-ஆம் ஆண்டு இந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்த போது சமீபத்தில் தெற்கு மற்றும் மேற்கில் இருந்து குடியேறிய துங்காவிக் குழுக்களால் எதிர்க்கப்பட்டது. அப்போதும் பெரும்பான்மை கிடைக்காமல் சட்டம் நிறைவேறாமல் போனது,


அதன் பிறகு அரசு தன்னார்வக்குழுக்களை அமைத்து இன்குட் மொழி அதன் அழிவால் அதைப்பேசும் பெரும்பான்மை இன மக்களின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


இருப்பினும் இந்தச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது துங்காவிக் பிரிவு உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவிற்கு யாரும் வாக்களிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.


இருப்பினும் இன்யூட் பேசும் உறுப்பினர்கள் தங்கள் மூலமொழி யான இன்குட் மொழிக்கு ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பெற்ற காரணத்தால், இந்தச் சட்டத்திருத்தத்திற்கு தங்களின் முழுமையான ஆதரவைத் தந்தனர்.  இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம் தற்போது இன்குட் மொழி ஆய்வுப் பிரிவுகள் உடனடியாக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும். அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


முதலில் இம்மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க ஆசிரியர்கள் மிகவும் முக்கிய பங்காற்றுவார்கள்.


இன்குட் பேசும் மக்களிடமிருந்து சிறந்த கல்வியாளர்களை, இன்குட் மொழி ஆர்வலர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்து ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.


இன்யூட் பேசும் மக்களிடம் தங்களின் மூல மொழியான இன்குட் பற்றியும், அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து அம்மக்கள் கூறும்  போது "ஆங்கிலம் பெரிய அளவில் கலந்து விட்டதால் எதிர்காலத்தில் எங்களின் மொழியான இன்குட் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது, ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் அந்த அச்சம் நீங்கிவிட்டது,


கல்வி அமைச்சர் மற்றும் கலாச்சார அமைச்சர்கள் இந்த மொழியின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவும், திறமையாளர் களாகவும் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களால் மொழியைப் பாதுகாக்கப் பல திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த முடியும்" என்றனர்.


சமஸ்கிருதம் போல ஆங்கிலம் ஒன்றும் பிற்போக்கு மொழியல்ல. ஆனாலும் அதன் ஆதிக்கம் மண்ணின் மொழியைக் காணாமல் போகச் செய்திடும் என்ற அச்சத்தில்,  அம்மொழிக்குரியவர்கள் விழித்துக் கொண்டு விட்டனர் - இப்பொழுது இந்தியாவில் திணிக்கப் படும் மொழிப் பிரச்சினையை இந்தக் கண்ணோட்டத்தில் அணுகு வது அவசியமே!


Comments