கரோனா வைரஸ் தொற்று இன்டர்போல் எச்சரிக்கை

புதுடில்லி, நவ. 22- அரசியல் தலைவர்களை குறிவைத்து கரோனா வைரஸ் தொற்று கடிதங்கள் பயன்படுத்தக்கூடும் என இன்டர்போல் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


பன்னாட்டளவில் கரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களை குறிவைத்து கரோனா நோய் தொற்றை சமூக விரோத கும்பல் பயன்படுத்தலாம் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இன்டர்போல் காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர்.


சட்ட அமலாக்க அதிகாரிகள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய ஊழியர்களை மிரட்டும் வகையில் எச்சில் உமிழ்வது மற்றும் அவர்களது முகத்துக்கு நேராக இருமுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது குறித்து குறிப்பிட்டுள்ள இன்டர்போல் காவல்துறையினர், கரோனா தொற்றுள்ளவர்களின் எச்சில் தடவப்பட்ட கடிதங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு அனுப்பிவைக்கப் படலாம் என தெரிவித்துள்ளனர்.


பொது இடங்களில் குட்கா உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்


புதுடில்லி, நவ. 22- டில்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதேபோன்று காற்று மாசு  அளவும் அதிகரித்து காணப்படுகிறது.


இந்த நிலையில், டில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கரோனா வைரசுக்கான ஒழுங்குமுறை 2020க்கான டில்லி தொற்று நோய் மேலாண்மை திருத்தத்தினை இன்று கொண்டு வந்துள்ளார். இதன்படி, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறு வோர், பொது இடங்களில் முக கவசங்களை அணியாமல் இருப்போர், பான்மசாலா, குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீது அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.


10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு


புதுடில்லி, நவ. 22- சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இந்தநிலையில், பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. இதுகுறித்து ‘புதிய கல்விக்கொள்கை-பள்ளிக்கல்வியின் பிரகாசமான எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில், சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி பேசியதாவது:- சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும். தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப் படும். தேர்வை எப்படி நடத்தலாம் என்று திட்டம் வகுத்து வருகிறோம். அதை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


Comments