ஊழலுக்கு அப்பாற்பட்டதா பா.ஜ.க.

ஊழலுக்கு அப்பாற்பட்ட, பரிசுத்த யோவான் போல பா.ஜ.க.வை அதன் ஊது குழல்களான ஊடகங்கள் சித்தரிப்ப துண்டு. இப்போது வெளிவந்துள்ள இரண்டு தகவல்களை எடுத்துக் கொள்ளலாம்.


பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு கடந்த 17ஆம் தேதி (நவம்பர் 17, 2020)  பதவி ஏற்றது. அப்போது, மாநில கல்வி அமைச்சராக மேவ்லால் சவுத்திரி பதவி ஏற்றார்.  தற்போது, ஊழல் குற்றச்சாட்டுக்குஆளானவர் அவர்.


இவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்தபோது,  ஊழல் செய்ததாக அவர் மீது விசாரணை செய்ய அப்போதைய ஆளுநர் தற்போதைய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களின் விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவருக்கு, தற்போதைய அமைச்சரவையில் மீண்டும் கல்வி அமைச்சர் பதவி கொடுத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


முதலமைச்சரின் இச்செயற்பாடு  மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். 


வேறு வழியின்றி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர்மீதான ஊழல் விவகாரம் பற்றி முதல் அமைச்சருக்குத் தெரியாதா? எதிர்ப்புக்குப் பின்னர் பதவி விலகும் நிலை ஏன்? ஆன வரைப் பார்ப்போம் என்ற நிலைப்பாடுதானே?


முன்னாள் வருமானவரித்துறை அதிகாரியும், தற்போதைய சூரத் நகர பாஜக தலைவருமான பி.வி.எஸ் சர்மா மீது, மோசடி மற்றும் அரசு பணம் கையாடல் குற்றத்திற்காகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இரண்டு நாளிதழ்களுக்கு, அரசு மற்றும் தனியார் விளம்பரங்களைப் பெறுவதற்காக, அந்த நாளிதழ்கள் அதி களவில் விற்பனையாகின்றன என்று பொய்யான ஆவணங் களைக் காட்டியதாக அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது.


வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் கே.டி.பம்மயாவால் அவர்களால் இந்தப் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின்போது, முறை கேட்டில் ஈடுபட்டார் என்றும், இவர்மீது கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டது.


இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங் கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.


இவர் பதவியில் இருந்த போது சில ஊடகத்துறை நிர்வாகத்தினரிடம் சலுகை காட்டுவதாகக் குற்றம் சாட்டப் பட்டது. ஊடகத்துறை நிர்வாகத்தினரின் வரவு - செலவு கணக்குகளில் உள்ள குளறுபடிகளை விசாரிக்கவேண்டாம் என்று தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


 மேலும் குறிப்பிட்ட நாளிதழ்களுக்காக அதிக சலுகைகள் கொடுத்தும், அவைகளுக்கு விளம்பரம் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கத் தானே தனியார் நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் விருப்ப ஓய்வு பெற்று பிரபல நாளிதழ் நிறுவனம் நடத்தும் ரியல் எஸ்டேட் தொடர்பான நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்தார். இவர் சூரத் மாநகர பாஜகவின் தலைவராக 2019-ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். ஆரம்பத்தில் இருந்தே இவர் மீது தொடர் புகார்கள் வந்த நிலையில் அவை அனைத்தும் கண்டுகொள்ளாமல் விடப் பட்டன. தற்போது புதிதாகப் பதவியேற்ற கே.டி. பம்மயாவால், பி.வி.எஸ் சர்மா தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்த போது பல்வேறு முறைகேடுகள் மறைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவை எல்லாம் பனிப்பாறையின் ஒரு சிறுமுனைதான். குற்றவாளிகள் பா.ஜ.க. அல்லது சங்பரிவார் வாடை உள்ளவர் களாக இருந்தாலே போதும்; அவர்கள்மீது தூசுகூடப் படாமல் பார்த்துக் கொள்வது பா.ஜ.க.வின் பண்பாடாகவே ஆகி விட்டது.


உ.பி. முதல் அமைச்சர் ஆதித்யநாத், முதல் அமைச்ச ரானவுடன் தன்மீது இருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளை ரத்து செய்யவில்லையா? இரண்டு கொலை வழக்குகள், 30க்கு மேற்பட்ட வழக்குகள் - மதக் கலவரத்தைத் தூண்டுதல், வன் முறையில் ஈடுபட்டது  தொடர்பானவை அவை.


அதே போல குஜராத்தில் முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, குழந்தைகள் நலத்துறை அமைச்சராக விருந்த டாக்டரான மாயா கோட்டானி - நரோடா பாட்டியாவில் நடந்த மதக் கலவரத்தைத் தூண்டியதும் (காங்கிரஸ் எம்.பி அவர்தம் குடும்பத்தினர் உட்படப் படுகொலை), 230 பேர்கள் கொல்லப் பட்டதன் பின்னணியில் இந்த அமைச்சர் இருந்தார் என்றும் கூறி இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்பொழுது விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாடுகிறார். ஊழல் என்பது வெறும் பணம் மட்டுமல்ல - அதிகாரத் துஷ் பிரயோகமும் கூடத்தான்.


Comments