கடமையில் களப் பணி!
மதுரை தீ விபத்து ஒன்றில் தீயணைப்புத் துறை வீரர்கள் இருவர் - பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து மரணம்.
துயரமான செய்தி இது!
ஆனாலும், உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றிய நிலையில், தங்கள் உயிரைப் பரிதாபகரமாகத் துறக்க நேர்ந்தது - அவர்களின் கடமை உணர்வைப் போற்றுவோம் - நினைவுகூர்வோம்!
பணமா - மனமா?
இந்தியாவிலேயே உடல் உறுப்புக் கொடை அதிகம் அளிப்பது தமிழ்நாட்டில்தான். ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு கொடையளிப்பது குறைந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள் இத்தகு உடல் உறுப்புகளை மறைமுகமாக ரூபாய் இலட்சக்கணக்கில் விற்பதாகக் குற்றச்சாட்டு.
முதல் தகவல் பெருமிதம் அளிக்கிறது.
அடுத்த தகவல் வேதனையைத் தருகிறது. மற்றவற்றை துறைகள் என்கிறோம் - சிலவற்றை சர்வீஸ் என்கிறோம் - மெடிக்கல் சர்வீஸ், ஃபயர் சர்வீஸ் என்கிறோம். காரணம், இவையெல்லாம் சேவைக்கென்றே உருவாக்கப்பட்டவை. இதில்கூட வியாபாரம் பண்ணுவது வேதனைக்குரியது.
மனம் இருக்கவேண்டிய இடத்தில் பணம் இருக்கிறதோ!
சாதனையா - வேதனையா?
தீபாவளியன்று மது விற்பனை - கடந்தாண்டைவிட அதிக விற்பனை - சாதனை!
சாதனை என்று ஊடகங்கள் எப்படித்தான் தலைப்புக் கொடுக்கின்றனவோ தெரியவில்லை. குடியைக் கெடுக்கும் இந்தக் குடி ஒருபோதும் சாதனையை ஏற்படுத்தாது - விஞ்சுவது வேதனையாகத்தான் இருக்கும்.
கீதையா? கால்பந்தா?
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மக்களிடம் தேசப் பக்தியை வளர்க்கும்: - பிரதமர் மோடி.
மாட்டிறைச்சி சாப்பிடாதவன் ஓர் இந்துவாக இருக்க முடியாது.
ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஓர் இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் ஏற்கமாட்டேன்.
கீதையைப் படிப்பதைவிட - கால்பந்து விளையாடக் கற்றுக்கொள் என்றெல்லாம் கூட விவேகானந்தர் சொன்னதுண்டு - பிரதமர் மோடி சொல்லும் விவேகானந்தரின் சிந்தனைகளில் இவையும் இடம்பெறுமா?