அண்ணாவும் - மனுவும்!

 ஆரியர் - திராவிடர் பற்றி ஏதோ திராவிடர் இயக்கம் தான் கூறுகிறது. மனுதர்மம் என்று பேசுவது எல்லாம் இந்தக் காலத்திற்குப் பொருந்தாது - எங்கே இருக்கிறது மனுதர்மம் இப்போது - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதை எல்லாம் இப்பொழுது கிண்டுவானேன்! - குடைவானேன்? என்று பார்ப்பனர்கள், மனுதர்ம சாத்திரத்தை நியாயப்படுத்த முடியாத ஒரு நெருக்கடியில் பேசுவது - எழுதுவது புரிகிறது.


பார்ப்பனர் அல்லாதார் அதிலும் குறிப்பாக அண்ணா பெயரைக் கட்சியிலும், கொடியிலும், ஆட்சியிலும் வைத்துக் கொண்டு இருக்கிற - அண்ணா திமுகவினர் பேசுவது எப்படி?


அய்யா பெரியாரையும், அண்ணாவையும், திராவிட இயக்க வரலாற்றையும் புரியாதவர்கள்தான் - எம்.ஜி.ஆர். இரசிகர்களாக இருந்தவர்கள் தான் பெரும்பாலும் அதிமுக முன்னணியினராக இருக்கிறார்கள் என்பதுதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.


கொள்கை தெரிந்தவர்  இருக்கின்றனர் என்றாலும் அவர்கள் ஒதுக்கப்பட்டு விட்டனர். மேனாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் போன்றவர்கள் விவரம் தெரிந்ததாகக் கருதப்படுபவர்கள்.


எஃப் எம் வானொலியில் மனுதர்மம்பற்றி அவர் கருத்துத் தெரிவித்ததைப் பார்க்கும்போது பதவி அரசியல் மனிதர்களை எப்படி எல்லாம் குடை சாய்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


அவர்களைப் போன்றோரும், புதிய தலைமுறையினரும் தெரிந்து கொள்வதற்காக அறிஞர் அண்ணாவின் 'ஆரிய மாயை' நூலிலிருந்து இதோ ஓர் எடுத்துக்காட்டு.


"நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர் 16-9-26-ல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணை சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும், தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தை களுக்கும் மாதா மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்பு செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் - ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில் பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டு விட்டனர்.


இந்நாட்டில் ஆரியர் - திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான். இந்தத் தீர்ப்பு காலநிலையை ஆதாரமாகக் கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே அமைந்திருக்க வேண்டும்.


ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ, பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப் படுத்த வேண்டுமென்னும் நோக்கத் துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர் - திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?


ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.


“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 சு 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.


“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந் துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோக மாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத் திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. சு. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.


இந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் - திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்குக் காரணம் ஆகும். இக்கருத்துக் களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன!


தந்தையின் கருமத்திற்கு உரிமை உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.


மேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவி யின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக் கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத் துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.


இன்று அமைந்துள்ள இந்து சட்டமும், பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும், முயற்சியும் நடைபெற்று வருகின்றன" என்று கூறுகிறார் அண்ணா.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது அல்ல - சமீப காலம் வரை மனுதர்மம்தான் இந்து சட்டமாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் முக்கியமாக,


'தினமணி'யும் 'தினமலரும்' - 'துக்ளக்'கும் இன்றைக்கும் மனுதர்ம நூலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கி வரைந்து தள்ளுவது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?


ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுதர்மத்திற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்மீது பல பிரிவுகளில் வழக்கைத் தொடுப்பதுகூட வருணாசிரமப் பார்வைதான்  - அந்த மனு (பூ)நூல் பார்வைதான்.


Comments