லட்சுமி விலாஸ் வங்கியும் பா.ஜ.க.வின் பங்கும்

லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக்கடன் 26 விழுக்காடுக்கும்  அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.  இதையொட்டி ரிசர்வ் வங்கி இந்த வங்கிக்குப் பெரிய தொகை கடன் அளிக்கத் தடை விதித்தது.    மேலும் கடன்கள் வசூல் ஆகாததால் வங்கி மேலும் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டது.  இதையொட்டி தற்போது லட்சுமி விலாஸ் வங்கி  நெருக்கடிக்கு ஆளானதால் அதன் செயல்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி  சிலவிதிகளைப் பிறப்பித்துள்ளது.


வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கணக் கில் இருந்தும் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   மேலும் வங்கியில் கடன்கள் வழங்குவதும், முதலீட்டைப் பெறுவதும் அறவே தடை செய்யப்பட்டுள்ளது.    இதனால் இந்த வங்கியின் பங்குகளை வைத்திருப்போர் அதை வேறு யாருக்கும் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு சுமார் 98,000 பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆனால் இந்த சிக்கலில் இருந்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகரின் நிதி நிறுவனமான பிடர் கேபிடல் நிறுவனம் சமீபத்தில் வெளியில் வந்துள்ளது.  பிடர் கேபிடல் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு லட்சுமி விலாஸ் வங்கி பங்குதாரராக நுழைந்தது.  அப்போது ஒரு பங்கு விலை ரூ. 70 என 30 லட்சம் பங்குகளை வாங்கி 1.7 விழுக்காடு பங்குதாரராக ஆனது.  அடுத்த 4-5 வருடங்களில் மேலும் பங்குகளை வாங்கிக் குவித்த பிடர் கேபிடல் நிறுவனம் 2.23 விழுக்காடுப் பங்குதாரராக ஆகியது.


இந்த வங்கியின் பங்குகள் விலை 2017ஆம் வருடம் உயர்ந்தது.  அப்பொழுது ஒரு சில பங்குகளை பிடர் கேபிடல் விற்ற போதிலும் முழுமையாக வெளியேறவில்லை.  அடுத்த ஆறு மாதங்களில் இந்த பங்குகள் விலை ரூ.20 ஆனது.  கடந்த 1926 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் தனியார் வங்கி என்பதால் முதலீட்டாளர்கள் விலகாமல் இருந்தனர்.


இந்நிலையில் 2020 ஆம் வருடம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிடர் கேபிடல் தனது பங்குகளை வேகமாக விற்றுள்ளது.   தற்போது லட்சுமி விலாஸ் வங்கியின் மிகக் குறைந்த அளவு பங்குகளே பிடர் கேபிடல் நிறுவனத்திடம் உள்ளது.   ரிசர்வ் வங்கி இயக்கத் தடை விதிக்கும் நேரத்தில் தனது பங்குகளை பாஜக மாநிலங்களவை உறுப்பினரின் நிறுவனம் வேகமாக விற்பனை செய்தது மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.   இது குறித்து ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.


பணமதிப்பிழப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா பாஜக தலைமையால் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள  ரூ.1000 மற்றும் ரூ.500  தாள்கள் அங்குள்ள பரோடா வங்கி கிளையில் மாற்றப்பட்டன. அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சாமானியர்கள் வங்கி வாசலில் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு வாரக்கணக்கில் காத்திருந்தனர்.


கடந்த ஆண்டு மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட யேஸ் வங்கி திவாலானது. திவால் அறிவிப் பிற்கு சில நாட்களுக்கு முன்னர்  திருப்பதி கோவிலில் ரூ.13 ஆயிரம் கோடி வைப்புத் தொகையை எடுத்துள்ளது, அதே போல் பஞ்சாப் தேசிய வங்கி, பஞ்சாப் மகாராட்டிரா வங்கி போன்ற வங்கிகள் திவால் அறிவிப்பிற்கு முன்னதாக பாஜக பிரமுகர்கள் தங்களின் பங்குகளை விற்றுள்ளனர். அந்த வங்கிகளில் வைப்புத்தொகையாக இருந்த பெருந் தொகையை எடுத்துள்ளனர். நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது பாஜகவினர் மட்டும் முன்கூட்டியே தப்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் பெரும் துயரத்தில் சிக்கிவிடுகின்றனர்.


நூற்றாண்டை நெருங்கும் இந்த லட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்றுவதன் மூலம் வாடிக்கையாளர் களையும், பணியாளர்களையும் காப்பாற்ற முடியும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றோடு கூட இணைக்கலாமே!


Comments