தி.மு.க. கூட்டணி - இலட்சிய வெற்றிக் கூட்டணியே!

காணொலியில் தமிழர் தலைவர்


* கலி. பூங்குன்றன்"2021 - தமிழக சட்ட பேரவைத் தேர்தலும்  கூட்டணி வியூகங்களும்" எனும் தலைப்பில் காணொலி மூலம் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று  (24.11.2020) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார். கழகத் தலைவர் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றினார். அமைப்புச் செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம் நன்றி கூறினார். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் இணைப்புரை  வழங்கினார்.


கழகத் தலைவர் ஆற்றிய உரையில் செறிந்த கருத்துக்கள் வருமாறு:அரசு விழாவில் அரசியலா?


(1) மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா என்ற பெயரில் வந்தாலும்  - உண்மை அதுவல்ல- அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அரசு விழாவில் அவர் பேசியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்தது.


அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய - பொறுப்பான பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் அரசு விழா என்றாலும் அரசியல் பேசுகிறேன் என்று பச்சையாக சொல்லி, அரசியல் பேசியது நாகரிகமானதுதானா? அதிகார துஷ் பிரயோகம் அல்லவா? சட்டத்தையும், மரபுகளையும் எந்த அளவு பா.ஜ.க. மதிக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.


2) கழகமற்ற ஆட் சியை அமைப்போம் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது எப்படி அதிமுகவுடன் கூட்டணி வைக்க வருகிறார்கள்?


அகில இந்திய கட்சி, இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலையில்தான் உள்ளது. கொடுக்கும் இடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. கொடுப்பதை வாங்கும் நிலையில் தான் பா.ஜ.க. இருக்கிறது. இது அதற்குக் கிடைத்த முதல் தோல்வியாகும்.


உள்துறை அமைச்சர் மட்டுமல்ல - ஆளுநராக இருந்த ஒருவரே கூட இரு பிரிவாக இருந்த அதிமுகவினரை ஒன்று சேர்க்கும் வகையில் இரு முக்கிய தலைவர்களின் கைகளைச் சேர்த்து வைத்ததையும் பார்க்க முடிந்தது - பா.ஜ.க. எல்லா வகையிலும் மரபுகளையும், சட்டங்களையும் மதிக்காத ஓர் அமைப்பு என்பது வெளிப்படை!


பறக்கும் சினிமா குதிரையை நம்பி...?


3) ஒரு குதிரையை நம்பி இருந்தார்கள். அது சினிமா குதிரை! பறக்கும் குதிரையை நம்பி இருக்கும் குதிரையைக் கை விட்டால் என்ன செய்வது என்ற நிலையில்தான் பா.ஜ.க.வின் மேனாள் தேசிய தலை வராக இருந்தவர்  - இன்றைய உள்துறை அமைச்சர் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கையில் அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தார். ஒரு பறக்கும் சினிமா குதிரையை எப்படியாவது  'கடிவாளம் போட்டு' களம் இறக்கி சவாரி செய்து விடுவதற்காக அரசியல் புரோக்கர்கள் எவ்வளவோ பாடுபட்டனர் - கடைசியில் குதிரை 'டிமிக்கி' கொடுத்து விட்டது.


இது கொள்கைக் கூட்டணி


4) திமுக தலைமையில் இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி, ஜனநாயகம், குடியரசு சமூகநீதி, மதச் சார்பின்மை, சோசலிசம்  என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அம்சங்களில் முரண்பாடு இல்லாமல் பயணிக்கக் கூடிய கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில், திமுக சார்பில் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.


ஆனால் அதிமுக அணியில் சேர்ந்துள்ள பா.ஜ.க. கூட்டணியில் கொள்கை ஒருமைப்பாடு கிடையாது.


சமூகநீதி என்று எடுத்துக் கொண்டால் அதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? மண்டல் குழுப் பரிந்துரையை பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் செயல் படுத்திய வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.தான்.


மண்டல் குழுப் பரிந்துரையை அறிவித்ததற்காக நாடெங்கும் கலவரங்களை தூண்டியது பா.ஜ.க.வும் சங்பரிவார்களும்தான். ஆனால் தமிழ்நாடோ அமைதிப் பூங்காவாக இருந்தது.


இப்பொழுதுகூட அகில இந்திய மருத்துவ தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு என்பதில் மத்திய பா.ஜ.க. அரசு எதிர் நிலையை எடுத்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறியும் மறுப்பு நிலையை எடுக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் பொறுப்பில் இருக்கக் கூடிய அதிமுக ஆட்சிக்கோ மத்திய அரசை எதிர்த்துப் போராடி தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதியை நிலைநாட்டும் துணிவு இல்லை. மத்திய அரசுக்குச் சலாம் போடும், சேவகம் செய்யும் ஆட்சியாக இருக்கிறது. இதில் அண்ணா திமுக என்ற பெயரும் வேறு.


'நீட்'டை எடுத்துக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து உரத்தக் குரல் கொடுத்ததாலும், போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியதாலும் நீட்டிலிருந்து விலக்குக் கோரி தனிச் சட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டும், அதற்கான ஒப்புதலை கூட்டணியிலும் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசிடம் வற்புறுத்தியோ, போராடியோ நிலைநிறுத்தும் தெம்பு அதிமுக அரசுக்கு இல்லை.


(ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓராண்டு விதி விலக்குப்பெறப்பட்டது - அடுத்தாண்டு அதனை உறுதிப்படுத்த தற்போதைய அதிமுக ஆட்சியால் முடியவில்லை).


'லேடியா - மோடியா பார்த்துவிடுவோம்' என்றார் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா! அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று அடிக்கொரு தடவை 'மந்திரம்' போல் உச்சரிப்பவர்கள் - அந்த அம்மாவின் உறுதியைக் கடைப்பிடிக்காதது ஏன்?


அரசு  பள்ளிகளில் படித்த மாணவர் களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இடங்கள் கொடுக்க நீதிபதி தலைமையிலான அதற்கான ஆணையம் பரிந்துரை செய்திருந்தும் அதனை ஏழரை சதவீதமாகக் குறைத்ததுதான் அதிமுக அரசின் சாதனையா?


பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கு வதற்கு எல்லா வகைகளிலும் முட்டுக்கட்டை போடும் மத்திய பா.ஜ.க. அரசு - உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோர் என்ற பெயரால் 10 விழுக்காடு இடங்களை எவ்வளவு அவசர அவசரமாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.


(7-1-2019 அமைச்சரவை முடிவு, ஜனவரி  8 மக்களவையில் மசோதா நிறைவேற்றம் ஜனவரி - 9 மாநிலங்களவையில் நிறைவேற்றம், ஜனவரி - 12 குடியரசு தலைவர் ஒப்புதல், ஜனவரி 17 - மத்திய மனிதவளத் துறை நலத்துறை ஆணை, ஜனவரி 19 - மத்திய பணியாளர் துறை ஆணை, ஜனவரி 29 மத்திய சுகாதாரத்துறை ஆணை).


இவ்வளவுக்கும் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி குற்றம் என்று உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட  ஒன்றின்மீது உயர் ஜாதியினர் நலன் என்ற ஒரே காரணத்துக்காக புயல் வேகத்தில் நடவடிக்கை என்றால் சட்டப்படிக்கான ஓர் அரசுதானா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? உயர் ஜாதியில் ஏழை என்றால் அதற்கு என்ன அளவுகோல் தெரியுமா? மாத சம்பளம் ரூ.65 ஆயிரம் வரை சம்பாதிக்கக் கூடிய பார்ப்பனர்கள் ஏழைகளாம் - இதுதானே மனுதர்மம்?


மத்திய அரசு கொண்டுவந்த தேசிய கல்வித் திட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் இடஒதுக்கீடு என்ற (Reservation) சொல்லேயில்லை என்று சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகும். (அதே நேரத்தில்  Socio - Economically Dis Advantaged Group என்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறாத சொல் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது- பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிக்கு அளவேயில்லை).


சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான - சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கிற பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டமக்களுக்கு எதிரானது - துரோகம் அல்லவா!


(ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவைக்  கொண்டு வந்த காரணத்தால் 1980 ஜனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வி கண்டார் என்பதை அதிமுகவுக்கு நினைவூட்டுகிறோம்).


சமூகநீதியில் அதற்கு எதிரான பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கான தண்டனையை 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அனுபவிக்கப் போகிறது என்பதில் அய்யம் இல்லவேயில்லை.


(உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி., உணவுப் பாதுகாப்புத் திட்டம் இவற்றை எல்லாம்  எதிர்த்தவர்தானே ஜெயலலிதா - அம்மா 'ஆன்மா'பற்றி அடிக்கடி பேசுவோரை அவர்களின் நம்பிக்கைப்படி அந்த அம்மாவின் 'ஆன்மா' மன்னிக்குமா? இதில் கூடுதலாக ஒரு தகவல் என்ன தெரியுமா? இன்றைக்குப் பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடி குஜராத் முதல் அமைச்சராகவிருந்தபோது 'நீட்'டையும், ஜி.எஸ்.டி.யையும் எதிர்த்தவர் என்பதுதான் - இடம் மாறும் போது எல்லாமும் மாறிவிடும் பரிதாபத்தை என்னவென்று சொல்வது!)


5) காங்கிரஸ் கட்டணியில் இருந்தபோது திமுக சாதித்தது என்ன என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.


அந்தக் கூட்டணியில்தான் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கூட்டணியில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.


அந்தக் கூட்டணியில்தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டணி ஆட்சியில்தான் தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைக்கப் பெற்றது என்று எவ்வளவோ சொல்லலாம்.


6) ஊழலை முன் எடுக்கப் போகிறார்களாம்! பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் 'வியாபம்' ஊழல் சாதாரணமானதுதானா? முதல் அமைச்சர் சவுகான் மட்டுமல்ல - அவரின் மனைவியின் பெயரும் பெரிதாக அடிபடவில்லையா - ஆளுநர் மகன் உட்பட இப்பிரச்சினையில் தற்கொலை செய்து கொள்ளவில்லையா? 47 பேர் மர்மமான முறையில் மாண்டனர். 491 பேர் தலை மறைவு ஆகவில்லையா? கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா, சிறைக்குச் சென்றது ஏன்?


பா.ஜ.க. ஆட்சியில் சவப்பெட்டி ஊழல் நடக்கவில்லையா? என்ரான் ஊழல் மறந்து போய்விட்டதா?


2ஜி ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்புக் கிடைத்த பிறகு - ஓர் உள்துறை அமைச்சர் இப்படிப் பேசலாமா? வழக்கை விசாரித்த நீதிபதி  - சாட்சியங்களையும், ஆவணங்களையும் கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஏமாற்றம் அடைந்தேன் என்று சொன்ன பிறகு ஒரு உள்துறை அமைச்சர் இப்படிப் பேசலாமா?


வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதைப்பற்றிப் பேசலாமா?


லலித் மோடி நினைவிருக்கிறா?


அய்.பி.எல். சூதாட்டம் மற்றும் நிதி முறைகேடு வழக்கில் சிக்கிய முன்னாள் அய்.பி.எல்., தலைவர் லலித் மோடி, தற்போது இங்கிலாந்தில் உள்ளார். இவர் போர்ச்சுக்கல் செல்வதற்கு விசா வேண்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கேட்டதாகவும், அதுகுறித்து சுஷ்மா இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் என இங்கிலாந்தின் 'சண்டே டைம்ஸ்' நாளிதழில் செய்தி வெளியாகின.


 அய்.பி.எல்., சூதாட்டத்தில் சிக்கி (2010) ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல் செய்த லலித்மோடி வியாபாரம் தொடர்பாக என்று கூறிவிட்டு 2011 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியே சென்றார்.அதன் பிறகு அவர் இந்தியா திரும்பவே இல்லை. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்கள் அனைத்தையும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பங்குதாராக இருந்து நிர்வாகித்து வருகிறார்.


லலித் மோடியின் குடும்ப வழக்குரைஞராக சுஷ்மா சுவராஜ் கணவரும், அவரது சட்ட ஆலோசகராக சுஷ்மா சுவராஜ் அவர்களின் மகளும் உள்ளனர்.


இது தொடர்பாக லலித் மோடி 'இந்தியாடுடே' டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்  "சுஷ்மா மற்றும் எனக்கும் நடுவேயான இ-மெயில் தொடர்பு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.


 எனக்கும், சுஷ்மா சுவராஜ், அவரது கணவர் சுஷ்மா குஷால், அந்த தம்பதிகள் மகள் பன்சுரி ஆகியோருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது.


ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் முக்கிய பிரமுகரும், டில்லி கிரிக்கெட் வாரிய தலைவருமான ரஜத் சர்மா போன்றோர் எனக்கு மிகவும் நல்ல முறையில் உதவியாக இருந்துள்ளனர். மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம்தான் என்னை குறி வைத்தார். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அய்ரோப்பியாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து என்னை முடக்க பார்த்தது." இவ்வாறு லலித் மோடி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


(‘இண்டியா டுடே’ - 12.6.2015)


பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட கால கட்டத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி (கருநாடகா) தனது மகளுக்கு 500 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தியதன் பின்னணி என்ன? இவர் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் அல்லவா? சுரங்க ஊழலில் கொடி பறக்கவிட்டவர்கள் கருநாடக மாநிலத்தில் அமைச்சரானது எப்படி? இது போன்றவை எத்தனையோ உண்டு.


இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று 2018 ஜூலையில் சொன்னது இதே சாட்சாத் அமித்ஷா அல்லவா?


பணமதிப்பு இழப்பு அறிவித்த பின் அவசர அவசரமாக பல வங்கிகளில்  பா.ஜ.க. சம்பந்தப்பட்டவர்கள் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதே அவை எப்படி?


மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பலரையும் பா.ஜ.க.வுக்கு இழுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ந்தது யார்? ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக பணத்தைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சொல்லவில்லையா?


விரிக்கின் மிகப் பெருகும் - ஊழலைப் பற்றி பா.ஜ.க.வோ, அதிமுகவோ பேசலாமா?


6) மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி சாதித்தது என்ன? ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்று மோடிஅறிவித்தது என்னாயிற்று? பகோடா விற்பதும் வேலைதான் என்று சொன்னவர் பிரதமர் ஆயிற்றே!


ஜி.எஸ்.டியில்  மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக்கூடக் கொடுக்காத அரசாயிற்றே! கேட்டால் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லுவதற்கு மத்தியில் ஒரு நிதி அமைச்சர்!


ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசுவது சட்டப்படி சரியானது தானா? தங்களின் இந்துத்துவா அஜண்டாவை அரசின் திட்டமாக மாற்றுவது சரியானதுதானா?


7) அண்ணா குறுகிய காலமே ஆட்சியில் இருந்தார். அந்தக் குறுகிய காலத்திலும் மூன்று வரலாற்று சாதனைகளை சட்டப் பூர்வமாக்கினார்.


1) தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்


2) சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம்.


3) தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம், இருமொழிகள் மட்டுமே.


அண்ணாவின் பெயரில் கட்சியையும், ஆட்சியையும் வைத்துக் கொண்டு இருக்கிற அண்ணா திமுக அரசு - மாநில உரிமைகளைப் பறிக்கும், இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வது அண்ணாவுக்கும், திராவிடத் தத்துவத்துக்கும் செய்யும் துரோகம் அல்லவா?


8) தமிழ்நாட்டில் ஜாதியை வைத்து அரசியல் நடக்கிறதாம். இதனை பா.ஜ.க. சொல்லலாமா! உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறவில்லையா?


தமிழ்நாடு ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை உடைய தந்தை பெரியாரின் பூமி - இங்கு பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதை இழிவாகக் கருதக் கூடியவர்கள்.  பா.ஜ.க.வோ உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கான ஆட்சி. மத்தியில் உள்ள 58 அமைச்சர்களுள் 32 பேர் பார்ப்பனர் உட்பட உயர் ஜாதிக்காரர்கள்தானே! காபினட் செயலாளர்கள் 20 பேர்களுள் 17 பேர் பார்ப்பனர்கள்தானே! பிரதமர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் 35 பேர்களில் 31 பேர் பார்ப்பனர்கள் தானே! அடுக்கிக் கொண்டே போக முடியுமே!


(9) தமிழ்நாட்டில் மதவாதம் எடுபடாது. 1971இல் ராமனைக் காட்டினார்கள்.  முடிவு என்னாயிற்று? 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனைக் காட்டினார்கள். முடிவு என்னாயிற்று? இப்பொழுது முருகனின் வேலைத் தூக்கிக் கொண்டு அலையப் பார்க்கிறீர்கள் - அவை எல்லாம் தந்தை பெரியார் மண்ணில் போணியாகாது.


இங்கே இந்து - முசுலிம் என்ற பேதம் கிடையாது. உ.பி.யிலும், பீகாரிலும் சட்டப் பேரவையில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கு இடம் இல்லை என்பது எல்லாம் மதச்சார்பற்ற தலைமைக்கு உகந்ததுதானா?


பீகாரில் சிறுபான்மையினரைப் பிளவுபடுத்தியது எல்லாம் இங்கே நடக்காது.


பீகாரைப் பார்த்த பிறகு, தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்கள் சிறு பிரச்சினைக்கோ, பிளவுக்கோ இடமின்றி செயல்படுவார்கள்  - செயல்பட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்!


(9) திமுக கூட்டணியில் குழப்பம் கிடையாது. யார் முதல் அமைச்சர் என்று திட்டவட்டமாகக் கூட்டணி கட்சியினரே அறிவித்துவிட்டனர்.


அதிமுகவில் யார் முதல் அமைச்சர் என்பதிலே கோஷ்டிப் பூசல். இப்போதைக்கு அமுங்கியது போல் தோன்றினாலும் அங்கு நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதிலும்கூட மத்தியில் உள்ள பிஜேபி அதிகார வர்க்கம் அரசியல் விளையாட்டை செய்து கொண்டுதான் இருக்கிறது  - போகப் போகப் புரியும்.


விடியலை நோக்கி இந்தக் கூட்டணி வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.  இக்கூட்டணி மேற்கொள்வது இலட்சியப் பயணம்.


2019இல் மக்களவைத் தேர்தலில் தமிழநாடு மக்கள் தங்களின் தெளிவான முடிவினைத் தீர்ப்பாகக் கூறி விட்டார்கள்.


இடையில் இந்த ஓராண்டில் என்ன மாற்றம் ஏற்பட்டு விட்டது  - தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு?


 


மிஸ்டுகால் - சொந்தக்கால் - பந்தக்கால்!


சொந்தக்காலில் நிற்க முடியாத பா.ஜ.க. மிஸ்டு காலில்  கட்சியை வளர்க்கப் பார்த்தது. அதில் எல்லாம் ஒன்றும் ஆகவில்லை என்றவுடன் பந்தக் காலைப் பிடிக்கப் பார்க்கிறது. இங்கே பந்தல் காலாகிய அதிமுகவே ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது என்பதுதான் வேடிக்கை.


2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஏதுமில்லாமல் சொந்த காலில் நின்றது. நின்ற இடம் 188, கிடைத்த இடங்களா பூஜ்யம். டெபாசிட் போனஇடங்களோ 158. இவர்கள்தாம் கழகம் இல்லாத ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். இப்பொழுது வேறு வழியில்லாமல் அதிமுகவோடு கூட்டணி என்ற பரிதாப நிலைக்கு வந்துவிட்டார்கள் 'சுவற்றுக் கீரையை வழிச்சுப் போடடி!' என்ற கதைபோல அதிமுக - பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் அத்தனை இடங்களிலும் திமுக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை  பிளஸ் ஆகிக் கொண்டே போகும் என்பது மட்டும் உறுதி


 - காணொலியில் கழகத் தலைவர்


 


வேலைக் கேட்டால் ‘வேலை'க் காட்டுவதா?


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி சொன்னார். இப்பொழுது தமிழ்நாட்டில் என்னவென்றால் ‘வேலை' (முருகனின்) காட்டுகிறார்கள். கேட்டால் இரண்டும் வேலைதானே என்கிறார்களோ! இந்த வேலை எல்லாம் இங்கு வேண்டாம் என்பதுதான் நம்முடைய பதில்!


- காணொலியில் கழகத் தலைவர்


Comments