அனுமார்களும், குகன்களும் பயன்பட்ட வரைதான்!

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற தொகுதியான வாரணாசியின் கங்கை நதி ஓரத்தில் ராஜ்காட்  என்ற இடத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான தீன் தயாள் உபாத்யாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  சுமார் 63 அடி உயரம் உள்ள இந்த சிலையை 6 மாதம் முன்பு  மோடி திறந்து வைத்தார்.   இதையொட்டி அப்போது சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன.


அதில் ஒரு பகுதியாக சிலை திறப்புக்கு இரு நாள் முன்பு இந்த சிலைக்கு சுமார் 150 மீட்டர் சுற்றுப்பகுதியில்  இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டன.  இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழமை வாய்ந்தவை; நூற்றாண்டுகளாக கரை ஓரம் மீன் பிடித்துவாழும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  சிலை அமைக்க அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, குடி யிருப்புகள் எதுவுமே   இடிக்கப்படாது என்று உறுதியளித் திருந்தனர். ஆனால் திடீரென பிரதமர் வரும் போது குடி யிருப்புகள் அங்கே இருப்பது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி, முதல் நாள் அறிவிப்புக் கொடுத்துவிட்டு, மறுநாளே வீடுகளை இடித்தனர். மேலும் அதிகாரிகள் கூறும் போது விழா முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நவீன முறையில் குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்று  உறுதி அளித்துள்ளனர்.   ஆனால் இப்போது அது ஆக்ரமிப்பு நிலம் எனக் கூறி, அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.


வீடிழந்த 250 பேர் நடைபாதை மற்றும் கோவில்களில் வசித்து வருகின்றனர். மேலும் சிலர் சிலைப் பகுதியிலேயே கூடாரம் அமைத்து வசிக்கின்றனர். மழை காரணமாக அவர்கள்  பிளாஸ்டிக் தடுப்புகள் மற்றும் போர்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்துள்ளனர்.   அங்கு வசிக்கும் பெண்கள் குளிக்க மற்றும் கழிவறைக்காக வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது.  அத்துடன் குடிநீருக்காகவும் பெண்கள் அலைய வேண்டிய அவல நிலை!


இவர்களுக்கு இந்த முகவரியில் உணவுப் பங்கீட்டு அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டு உள்ளன.  ஆயினும் இவர்களை அதிகாரிகள் ஆக்ரமிப்புச் செய்துள்ளதாகக் கூறி, மீண்டும் அங்குச் செல்ல விடாமல் விரட்டி அடிக்கின்றனர். கங்கை நதிக்கரை மீனவர்கள்  இருந்த இடங்களில் தற்போது லாரிகள் மற்றும் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பொருட்களைச் சேமித்து வைப்பதற்காக மணல் மூலம் மேடு படுத்தி உள்ளனர்.


வீடிழந்தவர்கள் இப்பகுதி தலைவரைச் சந்தித்து உதவி கேட்டுள்ளனர். தற்போது இது பிரபலங்கள் அடிக்கடி வந்து செல்லும்  பகுதி  ஆகி விட்டதால், இந்தப் பகுதியில் வசிக்கக் கூடாது என உள்ளூர்த் தலைவர் உதவ மறுத்துள்ளார்.  இவர்களுக்குத் தங்க இடம் இல்லாததால் ஊரடங்கு நேரத் தில் இலவச உணவுப் பொருட்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.


இவர்களுக்குச் சிறு குழந்தைகள் உள்ளன என்பதாலும், வரும் குளிர்காலத்தில் வாரணாசி நகரில் கடும் குளிர் அடிக்கும் என்பதாலும்  மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு எப்போது விடிவுகாலம் என்பது கேள் விக்குறியே!


 இது குறித்து வீடிழந்தவர்கள் கூறுகையில் “எங்கள் பரம்பரையைச் சேர்ந்த குகன் தான் இராமாயணத்தில் ராமன் கங்கையைக் கடக்க உதவியதாக இவர்கள் கூறி ஆண்டிற்கு ஒருமுறை விழாவும் நடத்துகிறார்கள். ஆனால் எங்களது வாழ்வாதாரத்தை நாசம் செய்து சிலை அமைத்து விட்டார்கள், இதுவா இவர்கள் ராமனுக்கு உதவிய குகனின் பரம்பரைக்குச் செய்யும் உதவி” என்று புலம்பினார்கள்


அதுதான் ராமனுக்குக் கோவில் வருகிறதே - அனுமார் களும், குகன்களும் பயன்பட்ட வரைதான் என்பது அந்த ஏழைப் பாழைகளுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது? பக்தியின் பரம இரகசியமே இதுதானே!


இதே போல் குஜராத்தில் சர்தார்வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக அந்தச்சிலை அமைந்திருந்த பகுதிக்கு அருகில் இருந்து பழங்குடியின மக்கள் வசிக்கும் 5 கிராமங் கள் முற்றிலும் அகற்றப்பட்டன. இதற்காக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி ஓய்ந்தனர்.


படேல் சிலை திறக்கும் நாள் வரை இந்தப் பழங்குடியின மக்கள் ஆண்டாண்டுகளாக தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அகற்றப் பட்ட விவகாரம் பெரும் விவாதப் பொருளானது. இதற்காக சமூக ஆர்வலர் மேதா பட்கர் நாடு முழுவதும் பயணம் செய்து அவர்களுக்காக ஆதரவு திரட் டினார். மத்திய அரசும் அவர்களுக்கு அனைத்து வாழ்வா தார வசதிகளும் செய்து தருகிறோம் என்று உத்திரவாதம் கொடுத்தது; சிலை திறக்கப்பட்டது, அத்தோடு எல்லாம் முடிந்து போனது; இன்று அந்த 5 கிராம மக்களும் நகரங் களின் சாலை ஓரம் தார்ப்பாய்களின் துணையோடு குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.


ரூ.3000 கோடிகளை சிலைக்கு செலவழித்த மோடிக்கு சில லட்சங்களைச் செலவு செய்து சிலை அமைக்க இடம் என்ற பெயரில் விரட்டி அடிக்கப்பட்ட மக்களுக்கு வீடு களைக் கட்டித்தர மனமில்லை.


இதுதான் மக்கள் நாயக மக்கள் நல அரசு - நம்பித் தொலைய வேண்டியதுதான்!


Comments